ஆன்மிகத் துளிகள்
உ. தாமரைச்செல்வி
* சைவத்தில் மூவர் பாடியது தேவாரம் என்பார்கள். ஆனால், திருநாவுக்கரசர் பாடியதே தேவாரம் ஆகும். திருஞானசம்பந்தர் பாடியது திருக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.
* மணிவாசகர் திருவாசகத்தைப் பாட, சிவபெருமான் தானே கைப்பட எழுதியதாக வரலாறு. இதைப் போலவே ஜனாபாய் என்கிற பாண்டுரங்க அடியார் அபங்கம் பாடல்களைப் பாட பாண்டுரங்கனே தனது திருக்கரங்களால் எழுதியதாக வரலாறு.
*திருஞானசம்பந்தரோடு இணைந்து இசைத் தொண்டு புரிந்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஒருமுறை மதுரையில் சுந்தரேசப் பெருமானை தரிசிக்கச் சென்றபோது, அவரை உள்ளே அழைத்து தரையில் மரத்தாலான மணை போட்டு அதில் அமர்ந்து யாழ் வாசிக்கச் சொல்லி, கேட்டு இறைவன் இன்புற்றதாக வரலாறு. காரணம், தரையில் அமர்ந்து யாழ் வாசித்தால் ஸ்ருதி பேதம் வரும் என்பதால் பாணருக்குத் தரையில் மணை போட்டு வாசிக்கச் சொன்னாராம் இசைத்தமிழின் தலைவனான சிவபெருமான்.
* தெய்விக உலகிலிருந்து பூமிக்கு நேராகவே வந்த ராஜன்கள் நால்வர். அவர்கள் நடராஜன், கோவிந்தராஜன், ரங்கராஜன், வரதராஜன். முதல் இருவர் வந்த இடம் சிதம்பரம். ரங்கராஜன் ஸ்ரீரங்கம். வரதராஜன் காஞ்சிபுரம்.
* பாண்டுரங்க அடியாரான நாமதேவர் தமது 80 ஆண்டுகால வாழ்வில் 60 கோடி அபங்கங்கள் பாடி இருக்கிறார். தமது எண்ணப்படி 100 கோடி பாட முடியாமல் போகவே அவரே துக்காராமாக மீண்டும் பிறந்து, மீதி 40 கோடியைப் பாடியதாகக் கூறுவர்.
* இறைவனின் அவதாரப் பெருமைகளைக் காதால் கேட்க புண்ணியம். ஆனால், வாமன அவதார கதையைக் கேட்டால் அந்த நிமிடம்வரை செய்த பாவங்கள் கரைந்து போகும் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். இதனால்தான் நம் முன்னோர்கள் 'கற்றலின் கேட்டலே நன்று' என்றார்கள்.
* சகல சௌபாக்கியங்கள் பெற்று நீடூழி வாழ்க என்று பெண்களைப் பெரியவர்கள் வாழ்த்துவது வழக்கம். சகல சௌபாக்கியம் என்றால் தோடு, மூக்குத்தி, மஞ்சள் சரடு (தாலி), வளையல், மெட்டி ஆகிய இவை ஐந்து.
* வைகுண்டத்தை விட மேலானது. அன்பு நிறைந்த அடியார்கள் வாழும் கோகுலமே என்கிறார் நாரதர். இதுவே கோபியர்களின் அனுபவமும் கூட.
* குருவின் கிருபை இருந்தால் எதுவும் எளிதில் கிடைத்துவிடும் என்று சமர்த்த ராமதாசர் சொல்கிறார். குருநாதரின் அன்பை எண்ணி இறை தரிசனம் வேண்டியதால் தமக்கு ராம தரிசனம் கிடைத்தது என்கிறார்.
* ஜபத்தில், வாசிக ஜபம் (பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு ஜபம் செய்வது), உபாம்சு ஜபம் (ஒலி எழுப்பாமல் உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை ஜபிப்பது), மானச ஜபம் (மனதிற்குள்ளேயே ஜபிப்பது), அஜபா ஜபம் (ஒவ்வொரு மூச்சுடனும் ஜபிப்பது) என்று பல வகை உண்டு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.