புத்தர் பெருமான் எட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவற்றைப் பாளி மொழியில் 'ஆரிய அஷ்டாங்க மார்க்கம்' என்று குறிப்பிடுவர்.
இவை வருமாறு: 1. நற்காட்சி, 2. நல்லூற்றம், 3. நல் வாய்மை , 4. நற் செய்கை , 5. நல் வாழ்க்கை , 6. நன் முயற்சி, 7. நற்கடைப்பிடி, 8. நல் அமைதி.
1. நற்காட்சி
துக்கத்தை அறிவது, துக்கத்தின் காரணத்தை அறிவது, துக்கத்தைப் போக்க வழிகளை அறிவது, துக்க நிவர்த்திக்கு உரிய எட்டு மார்க்கங்களைக் கடைப்பிடிப்பது. இவையே நற்காட்சி எனப்படும்.
2. நல்லூற்றம்
காம எண்ணங்களிலிருந்து விடுபட்டிருத்தல், தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருத்தல்; கொடிய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருத்தல். இவையே நல்லூற்றம் எனப்படும்.
3. நல்வாய்மை
பொய் பேசாது உண்மையை மட்டுமே பேசுதல், நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருத்தல், மனிதர்களை ஏமாற்றாது இருத்தல், உறவினர்களிடத்தில், சமூகத்தில், அரச அவைகளில் பொய்ச் சாட்சி கூறாதிருத்தல், கொடுமையாகப் பேசாமை, வீண்பேச்சுப் பேசாமை, காதுக்கும் மனதுக்கும் இனிமையானவற்றைப் பேசுதல், கட்டுக்கதைகளைப் பேசாமை, சச்சரவு முதலியன ஏற்படும் வகையில் பேசாமை ஆகியவையே நல்வாய்மையாகும்.
4. நற்செய்கை
உயிர்களைக் கொல்லாமை, கொல்லும் செயல்களிலிருந்து விலகியிருத்தல், உயிரினங்களின் நன்மையில் நாட்டமுடன் இருத்தல், திருடாமை, திருட்டுச் சம்பந்தமானவற்றில் தொடர்பு கொள்ளாமை, சட்டத்துக்குப் புறம்பான மாதர்களுடன் உறவு கொள்ளாமை. இவை நற்செய்கைகள் ஆகும்.
5. நல் வாழ்க்கை
தீய நெறிகளில் பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தாமல், நல்ல நெறியில் நியாயமான நெறியில், பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்துவது நல் வாழ்க்கை எனப்படும்.
6. நன் முயற்சி
தவிர்க்க வேண்டியதில் முயற்சி, சமாளிக்க வேண்டியதில் முயற்சி, அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டியதில் முயற்சி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதில் முயற்சி என நான்கு வகைப்படும். காமம், குரோதம் போன்ற தீய எண்ணங்கள் மனதில் தோன்றாதபடி தவிர்க்க வேண்டும். மீறித் தோன்றிவிட்டால் அவற்றைச் சமாளிக்க முயல வேண்டும். மேன்மையான சூழ்நிலைகள் உருவாக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆர்வத்துடன் செயலில் இறங்க வேண்டும். உருவாக்கப்பட்ட மேன்மையான சூழ்நிலைகள் நீடித்து நிலைத்து நிற்க முயல வேண்டும்.
7. நற்கடைப்பிடி
எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதில் அதிகக் கவனத்துடன் இருத்தல்.
8. நல்லமைதி
மனதை ஒரு நிலையில் நிறுத்தித் தியானம் செய்தல், கிளைக்குக் கிளை தாவும் குரங்கைப் போல் மனதை அங்கும் இங்கும் அலையவிடாமல், மனதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ளல் இதனால் மனம் நல்லமைதியைப் பெறும்.
இவையே பௌத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நல்லொழுக்கங்களுக்குப் பௌத்த சமயம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.