அபிராமி... அபிராமி...!
காயத்ரி மாணிக்கம்
நல்ல பதிலை எதிர்பார்த்து, அதிலே தனக்கான கமிஷன் வரவையும் சேர்த்து, வெளியில் தெரியாத படபடப்பாக ஒற்றைச் சோபா முனையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. கல்யாண வரன் பார்க்கும் ‘தரகர்’ ன்னு சொல்ல வேண்டாமே என்று தோணுது. அவரின் வயதுக்கும், அனுபவத்துக்கும் ‘வரன்’ பார்த்து, இரு மனசை இணைத்து வைக்கும் நல்ல மனிதர் என்று, கூறலாம்!
இன்றைய நவீனத்தில், இணையம் வழியாக வரன்களைத் தேடுவோருக்கு மத்தியில், நேரில் வரன் பார்க்கும் இவர் மாதிரி ஒரு சிலரே இருக்கின்றனர்.
குடும்ப மருத்துவர் போல, சுந்தரேஸ்வரர் குடும்பத்தில், இந்த ராமமூர்த்தி வரன் பார்க்கும் நெருக்கமான நண்பர். தாத்தாக்கள் வழித்தொடர்பு, இன்று வரை அப்படியொரு, நம்பிக்கை!
சுந்தரேஸ்வரர் மீனாட்சி இணைப்பு, ராமமூர்த்தியின் தாத்தா, அப்பாவின், கூட்டு ஏற்பாட்டில் முடிச்சிட்ட பந்தம். தம்பதியர் மூன்று பெண்களுக்கும் இவரின் தனி, முயற்சியில் வரன்கள் பார்த்து அமைந்தது, வாழ்க்கை!
ஆண்பிள்ளை வேண்டுதல் வரமாக வந்த, மகன். மூன்று அக்காக்களின் செல்லத்தம்பி சுரேந்தர். அவனுக்கு இப்போது பெண் பார்க்கிறார்கள்.
வரும் டிசம்பர், ரயில்வே பணியிலிருந்து ஓய்வாகிறார் சுந்தரேஸ்வரர். மனைவி மீனாட்சி, போஸ்டலிருந்து ஓய்வுக்கு இன்னும் நான்காண்டு இருக்கிறது. பணியில் இருக்கும் கெளரவத்தோடு மகன் கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்ற விருப்பம். பெரும் கடமையும் அதுதானே... மகள்களின் திருமணத்திற்குப் பிறகு,கடைசிப் பையனின் கல்யாணத்தை ‘மதுர… குலுங்க…’விதமா விஷேசம் வைப்பது பெருமைன்னு எண்ணினர்!
ராமமூர்த்தியும் பத்து மாதமாக மெனக்கிட்டு, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி பெண் தேடினார். ஏற்கனவே பத்துக்கும் மேலான பெண் படங்கள் காட்டியாகிவிட்டது. செல்வச்செழிப்பான குடும்பத்துப் பெண்கள், அதிகமாய்ச் சம்பளம் வாங்கும் ஐடி பெண்கள், சில வணிகத்துறைப் பெண்கள்.
படத்தில், நல்ல லட்சனம் ஒட்டி இருந்தாலும், ஏதோவொரு குறை உள்ளதெனச் சொல்லி வைத்தது மாதிரியே, எல்லோரும்... குறிப்பாக அக்காக்களுக்குப் பிடித்தம் இல்லை. ‘பார்த்ததும் பிடித்துப் போகும் ஈர்ப்பான பெண், தம்பிக்கு வேணும்.’ என்றே ஒவ்வொரு முறையும் கூறினார்கள்.
இன்று, கைமேல் பலன் கிடைத்து விட்டதா வந்திருக்கிறார், ராமமூர்த்தி.
வீடியோ கான்பரன்ஸில் பேசியதால், சீரியல் குடும்ப முறையில் இதோ ஹாலில் இருக்கிறார்கள். ‘நல்ல பதில் இருக்கும்…’ என்ற நம்பிக்கையில், சாதகமானால், மேற்கொண்டு விசாரிப்பில் இறங்கிடலாம்னு, எண்ணத்தை, வளர்த்துக்கொண்டே ராமமூர்த்தி, காத்திருக்க… உறுப்பினர்களின் கைகளில் மாறி, மாறி நிறைவாக சுரேந்தர் கைக்கு ஆப்பிள் போன் வந்தது. பெண் அழகாக இருந்தாள். ‘ஆசை’ சினிமாப்பட நாயகி சுபலட்சுமியின் அச்சசல் சாயலில், ரத்தினச் சுருக்க விளக்கம் போதும்னே தோணுது.
சுரேந்தரின் மென்மையான புன்முறுவல் சம்மதத்தை சீரியல் குடும்பம் புரிந்தாலும், ‘ம்… ஆனா..,’ என்னும் மூக்கு நீண்டதில், “அங்கிள்..,” ஏதோ வினவ மூத்தவள், முற்படவும்.
“போன்ல அப்பாட்ட சொன்னதுதாம்மா… உங்கள் குடும்பத்துக்கும் பொண்ணு குடும்பத்துக்கும் காததூரம். அஹ்ரகாரத்தில் பழைய வீடு: அதுவும் ஒத்தி, ‘பிளஸ்டூ’ படிப்பு, பொண்ணு வீட்லதான் இருக்கு, அப்பா அறநிலையத்துறை கிளார்க், அம்மா இல்லை ஒரு அண்ணன், திருப்பரங்குன்றம் பிரகாரத்திலே பேன்சி சாப் வைத்து இருக்கார். கல்யாணம் ஆகிவிட்டது. தனிக்குடித்தனம். வசதி வாய்பு தேவையில்லை, பொண்ணுக்கு அழகு, அறிவு, நல்ல குணம், லச்சனம் இருந்தா போதும்னு சொன்னதால, வெள்ளிக்கிழமை என்னிடம் விபரம் பேசிட்டு, போட்டோவ அனுப்பியது இந்தச் சம்பந்தம். பொண்ணோட ஜாதகம், ராசி, நட்சத்திரம், கட்டமும் பார்த்தாச்சு. தம்பி ஜாதகத்தோடு ஏகப்பொருத்தம். நீங்க எதிர்பார்க்கற மொத்தம் நிறைந்த பொண்ணுன்னு என் மனப்பட்சி உணர்த்தவும் கிளம்பி வந்தேன்.” என்றதும், இடைவெளிவிட்டு,
“உங்கள் பதிலைப் பொருத்து, மத்தபடி விசயங்களைத் துல்லியமா விசாரித்து வருகிறேன். ம்... பின் குறிப்பு, வரதட்சணை நீங்கலாக...” என்றார். அவருக்கே ஆன வெள்ளந்தி சிரிப்புடன்.
“பொண்ணு சூப்பர்தான் அங்கிள், அதுக்கு சும்மாவா கட்டிக்கனும்..? அவங்களே தருவதாகச் சொன்னாலும் நீங்க விடமாட்டீங்க போல,” என்றாள், காத்திருந்தது போல் இரண்டாமானவள்.
“உள்ளதை உண்மையா சொல்லுவேன்னு அப்பாவுக்கு தெரியும்மா…” தனது தரகு நேர்மைக்குக் கட்டியம் கூறினார்.
“ஓத்தப் பொண்ணுல… அதெலாம் ஐம்பது, அறுபது பவுனாவது வரும், சீரும் கொடுப்பாங்க, நமக்குச் சமமான செய்முறை இல்லைனாலும் பெண்ணின் அழகுக்கு பாதகமில்லை.” இதுவும், மூத்தவள் தான்.
“சுரேந்தர்... போட்டோ இருக்கட்டும்…” இப்படியாக சில கிண்டல் பேச்சுகளும், அத்தான்கள் நகைச்சுவையில் சிரித்து, மகிழ்ந்த போது…
“நீ…சொல்லுப்பா போட்டோவில் இருக்கும் பெண் பிடிச்சுருக்கா..?” இதுதான் பெற்றவள், மகனின் மனசைத்தொட்டு விருப்பம், கேட்டாள்.
“வெளிப்படையாச் சொல்லு சுரேந்தர்,” அப்பாவும்.
“ஓகே…” என பொதுவாகக் கூறி, போட்டாவை ‘டீ’ பாயில் வைத்தது, எழுந்த, ரூமுக்குள் சென்று விட்டான் சுரேந்தர்.
“ராமமூர்த்தி, உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு, அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அதிகமாக அக்கறை எடுத்து மத்த விபரங்களையும் விசாரிக்கனும்.” என்று சற்று நிறுத்தி, “அப்படியே செய்முறையும்...” பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், சம்பிரதாய எதிர்பார்ப்பு சுந்தரேஸ்வரரிடம் வெளிப்பட்டதைத் தெரிந்தார் ராமமூர்த்தி.
“ஆமா அண்ணே…. பெண் கொடுக்கறதுக்கு அதுதான கெளரவமா இருக்கும், கல்யாணச் செலவு மொத்தமாப் பார்த்துக்குறோம். இதை மட்டும் பேசுங்க,” மீனாட்சியும் இதைக் கெடுபிடியா இல்லாம வேண்டுதல் போல் சொன்னார்.
“இதோ பாருங்கப்பா, எங்களுக்கு ஒரே செல்லத்தம்பி, திரும்பக் கிடைக்காத கல்யாண நிகழ்ச்சி, அதனால…. பொண்ணுக்கு என்ன விலை பட்டுச் சேலை எடுக்குறீங்களோ, அதே மதிப்பில் எங்களுக்கும் இருக்கனும்...” பெண்களின் ஒரு சேர்ந்த அட்வான்ஸ் அச்சாரம் வார்த்தையில் உரிமை கொண்டாடியது.
படத்தில் பார்த்தப் பெண், சுரேந்தருக்கு அமைந்ததாக வேறு வேறு திசையில் பேச்சு நகரவும், கல்யாண யோகம் அந்த இல்லத்தில் வந்து நின்ற பூரிப்பு அனைவரிடமும்.
“சரி, நல்ல முடிவு செய்தியை எடுத்துட்டு வாங்க ராமமூர்த்தி” தொண்டைக்குள் சக்கரை எச்சில் விழுங்கி, சோபா மொத்தமும் தன்னை திணித்துக் கொண்டார் ராமமூர்த்தி.
காஃபி, பிஸ்கெட் கொடுத்தார், மீனாட்சி.
கிளம்புகையில், கவர் கொடுத்து அனுப்பினார், சுந்தரேஸ்வரர்.
கனவுச்சாலை வெல்வெட் விரிப்பில் இதயத்தை இதமா நடக்க விட்டான் சுரேந்தர். படத்திலிருந்த பெண்ணோடு, அபிராமி…அபிராமி… பாடலில், தன்னைக் கற்பனை செய்து. குளிர்த்தென்றல் சுவாசித்து உள்வாங்கிச் சிலிர்த்து, யாரோ எழுதிய கவிதை வரிகளில், மெலோடி பாடல் கேட்டான்..! மஞ்சள் மாலை நேர வானத்தில் மேகம் ஓவியங்களை ரசித்தான். நேரம் நகர்வதை உணராத மாயத்தில் இருந்தவனை, வரதட்ணை விசயம் இடரிட, இயல்பு நிலைக்கு வந்த போது, பக்கத்தில், அக்காக்கள்!
“பொண்ணு அழகுன்னா நகை செய்தல் ஃப்ரினு சொல்வாங்களா...? தம்பிக்குச் சரியான ஜோடிதான் அவள். ஆனாலும் முறை இருக்குக்கே…” இப்படியாக, எதையெதையோ பேசிய, அக்காகளை ஏற இறங்க நோக்கினான் சுரேந்தர்.
இதையெல்லாம் பேசுறாங்க… ஒருத்தருக்காவது முக்கியமானது நேரில் சென்று பெண்ணைப் பாக்கனும்னு யோசனை வருதா..? படத்தில் இருக்கும் அந்த அழகு அபிராமியைப் பக்கத்தில் சந்திததால்… அவன்பாடு அவனுக்கு.
“சிஸ்டர்ஸ்… இந்தப் படத்திலிருக்கும் பெண்தான் ஓகே மாதிரி மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுறீங்க…செல்லில் படம் அவ்வளவுதான். அதுக்கே இந்த ஆர்ப்பாட்டமா?” இதை,அக்காக்கள் முன்னால், நகைச்சுவைப் பாத்திரம் ரஜினிகாந்தின் உடல் மொழியில் பேசி, அடுத்த நொடி,‘குறி வச்சா யெர விழணும்.’வேட்டையன் ரஜினியாக மாறி சில நிமிடங்கள், காத்திருக்கையில்…
“ஆமா… படத்தில் வேலைப்பாடு இருந்தா..?” - இத இதைத்தான் எதிர்பார்த்தான்
“போண்ணை நேரில் பார்க்கணும்… அப்பாட்ட விசயத்தைச் சொல்லலாம்.” அப்பா அறைக்கு அக்காக்கள் கிளம்ப, ‘இரை விழுந்த புன்சிரிப்புடன், சுரேந்தர்.
‘சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ… செவ்வந்திப் பூச்சரமோ…’ ரொம்பப் பழைய பாடல், சேனல் மாற்றி மாற்றி வைக்க, ஒரு சேனனில் ஒலித்த பாடலை விரும்பிக் கேட்டான். மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளமும் நினைவில் மலர, புன்னகை சூட்டிக் கொண்டான்.
மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சந்திப்பு… கூடலழகர் பெருமாள் கோயில் மேற்குப் பிரகாரத்தில் சந்திப்பு… திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சந்திப்பு… அவரவர் யோசனையில் வந்த எல்லாம் கேன்சலாகி அக்ரஹாரம் வீடே முடிவானது.
சபை முன் வந்து நின்றாள், பெண்… சுபலட்சுமியேதான்!
பரஸ்பரமான சம்பிரதாயங்கள் நிகழ்ந்து முடியவும்.
“மீனாட்சி.. ம்…” சாடை செய்தார் சுந்தரேஸ்வரர்.
எழுந்து சென்று, பெண்ணின் அருகே நின்ற மீனாட்சி,
“பேர் என்னமா..?” கேட்டார்.
“அபிராமி…” என்றாள்.
பெண்ணின் போட்டோ பார்த்த ஆர்வத்தில் விட்டுப்போன பெயர் ‘அபிராமி…’ சுரேந்தருக்குள்… ‘அபிராமி, அபிராமி…’ ஒளித்தது!
‘பெண் எங்களுக்குச் சம்மதம்…’ என்னும் உறுதியாக அபிராமியின் கழுத்தில் தனது கையில் வைத்திருந்த செயின் மீனாட்சி அணிய அங்கே இருந்தவர் மகிழ்ந்தார்கள்!
நிச்சய தேதியும், முகூர்த்தத் தேதியும் மேலோட்டமாகப் பார்க்க, ராமமூர்த்தி காலண்டரை வாங்கிய போது, ‘சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ…’ இதயத்தின் வெளியில் மெல்ல இசைந்துகொண்டு இருக்கையில் ஆனந்தமாய் சுரேந்தர்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.