மிஸ்டர் கணவர்
காயத்ரி மாணிக்கம்
“இன்னைக்கும் ஏங்க லேட்..?” டூவீலரைப் போர்டிக்கோவில் நிறுந்தி, ஹாலுக்கு வரவும், கேள்வியோடு சமையலறையில் இருந்து வந்தாள் மனைவி, ராகவி. என்னை, எதிர்பார்த்து, தொண்டையருகே கேள்வியை நிறுத்திக் காத்திருந்திருப்பாள் போல்... பெயரில் மட்டுமே ராக - கவி மென்மையெல்லாம். அவளின் பார்வையில், பேச்சில், சில துகள் தவிர்த்து பல செயலிலும் அதுக்கெல்லாம் வாய்பு கிடையாது. கிட்டத்தட்ட கறார் போக்குதான் என்றாலும், அதுக்கும் இதுதான் என்ற நேர்நிலை அளவோடு, அதாவது, ‘தராசு’ முள் மாதிரி இருப்பாள்!
அந்த அளவு, ஒரு பக்கமே நிற்பதற்குக் காரணமிருக்கு. மனசுக்குள், ஒன்றை ஒன்று என்ன ஒன்று, என்னுடைய வெளி நடவடிக்கையைத் தெரிந்து கொண்டு தாமதமாக வீட்டுக்கு வரும் கேள்வியைத் தொடர்ந்து, வீசுகிறாளெனப் புரிந்து, வழக்கமான எனது இயல்பை மாற்றாமல், பெட் ரூமில் நுழைந்து கொண்டு, “அருண் மேலும் ரெண்டுநா லீவு சொல்லிட்டான். அவசர வேல அதாம்மா,” என்று ‘ம்மா,’ வார்த்தையில் கொஞ்சல் சாடையை செய்தவாறு கைலிக்கு மாறவும் முனைந்தேன்.
ஒரு வித வேகத்துடன் வந்து என் முன்னால் நின்ற ராகவி, “இங்க பாருங்க, என்னப்பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும், காரணம் இல்லாம மூர்க்கம் காட்ட மாட்டேன். தடித்துப் பேசவும் மாட்டேன்னு. உங்க கிட்ட ஏதோ மாற்றம் இருக்கு, நீங்களாச் சொல்லிட்டா நல்லது. இல்லனா…” என்றதும், கண்களிலே அக்னிவெயிலைச் சுட்டுக் காட்டினாள்.
எனக்குள் நடுக்கம் எட்டிப் பார்க்க, வெளிக்காட்டாமல் சுதாரித்துக் கொண்டு, மெத்தையிலே மடித்திருந்த கைலியை எடுப்பதாக பாவனை செய்தேன். சற்றும் இடைவெளி விடவில்லை, கேட்டதை, அதே பானியில் மறுபடியும் கேட்டாள். எதையோ விளக்கி, ஏதோ, சமாளிக்கையில், விளக்கத்திற்கே விளக்கம் கேட்டாள். மனைவியோட, குறிப்பிட்ட சில மேனரீஷம் எனக்குத் தெரியும். அதிலே இதுவும் ஒன்று. யோசிக்காமல், ‘டக், டக், டக்…’ னு, வேலை, சூபர்வைஸர், மேனேஜர் என்று சமாளித்தே இருந்தேன்.
இடையிடையே என்னிடம் பொய் கிடையாதென நம்பவேண்டி, கைகள், தோள்களை நாகேஷ் போல ஆட்டிக்கொண்டேன்!
சின்ன அமைதி.. ஒரு முடிவுக்கு வந்தவளாக தோரணைக் காட்டியவள், ஒரு நிமிடம், கீழிருந்து மேலாக பார்வை ஸ்கேன், செய்தாள்?
என்னைத்தான்!
“உக்காருங்க...” என்றவள், சட்டென்று, இரு தோள்களைப் பற்றி அழுக்கி, மெத்தையோரம் உட்கார வைத்து விட்டாள்..! இதை நான் கொஞ்சமும், எதிர்ப்பார்க்கவில்லை. பார்வை திருப்பி, மகள் விழிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினேன்.
ராகவியும் என்னைப்போல் கவனித்து விட்டு,
“அருண் அண்ணன் லீவுலேயே இல்லை, இப்பச் சொல்றீங்களா…” என்றாள். நம்ம சமாளிப்பு அனைத்தும் வீணாகிப் போச்சே.. . விபரங்களைத் தெரிந்தே தயாரா இருந்திருக்கிறாள்! சண்டாளி அதான் இந்தளவுக்கு கெடுபுடியை பிரயோகப்படுத்துகிறாள்!
“புதுசா வேலைக்குச் சேர்ந்த பேக்கிங் பொண்ணுகிட்ட உங்களுக்கு எந்த மாதிரிப் பழக்கம்..?” ராகவியின் இந்த கேள்வியில் வியர்த்துப் போய்விட்டேன். தொண்டை, எச்சில் முழுங்க, மெளனத்தில் தப்பிக்கவே பார்த்தேன். ‘இப்ப பதில் வரலேனா பிடியைத்தளர்த்த மாட்டேன்,’ என்னும் விதத்தில், கைகளுக்கு மேலும் இறுக்கம் கொடுத்தாள்.
விட்டால் தயவு தாட்சன்யமின்றி கழுத்தில் கைகளைப்போட்டு நெரித்து, விடுவாளோ! மெனக்கிட விரும்பல நான். இதுக்குமேல் எதைக்கூறியும் விசயத்த கடந்த முடியாத இக்கட்டான நிலையை உணர்ந்து, சரண்டராக யோசித்து, பதில் வார்த்தைகளைத் தயார் செய்தேன் என்றாலும், மெளனத்திருந்து மீளாது இருக்கையில், தனது போர்க்குணத்தில் ஒரு பகுதியா அப்படியொரு உலுக்கு, உலுக்கினாள். அப்படியே ஆடிப்போய், நிதானத்துக்கு வரவே நிமிஷங்களை எடுத்துப் பிறகே பேச ஆரம்பித்தேன்.
“ஒரு வாரம், உன்னோட பார்வ, பேச்சு, நடந்துக்கும் விதமெல்லாம் இதை நெனச்சி குழம்பிப் போய் இருக்குனு நெனச்சேன். ஆனாலும், என் மனைவி அந்த மாதிரி யோசனைக்கு இடம் தரவே மாட்டாள், விதர்ப்பமாக எதையும் சிந்திக்கவும் அவளால் முடியாது, கணவனிடம் இருக்கும் நம்பிக்கை, எந்தச் சூழலிலும் இழக்கக்கூடாது என்று உறுதி வைத்திருப்பான்னு எதார்த்தமாக இருந்தேன். அது எல்லாம் தப்புதான், நான் நினைத்த ராகவி.. . அதாவது, என்னோட மனைவி, வழக்கமான சராசரி பெண்ணுனு காட்டிட்ட,” என்றேன்.
இதுவும் கோர்வையான சமாளிப்பு, ஆனாலும், உண்மையென்ற சாயம் பூசி, அவளையே கவனித்தேன்.
“அதுக்காக, வயசுப் பொண்ணை பைக்கில் அங்க, இங்கனு கூட்டிப் போவது, வாரதும் தப்பு இல்லணு உங்களுக்கு படலாங்க, தெரிஞ்சவங்களுக்கு..? ஒரு நாள், ரெண்டு நாள்னா அது யாருடயக் கண்களுக்கும் உறுத்தலா இருக்காது.. அடிக்கடினா.. . அவ்வப்போது சாடைப் பேசுனவங்க, முகத்துக்கு நேராக வந்து சொன்னதுமில்லாம, என்ன விசயம்? ன்னுக் கேட்டுப் போறாங்க, பதில் சொல்ல முடியாமல் மனசுக்குள் சங்கடமாப் போகவும் தான், நேரிடையாக் கேட்கிறேன், சொல்லுங்க விபரம் என்ன..?” இப்பவும் பிடிய இறுக்கியே வைத்திருந்தாள்!
விடமாட்டாளோ? நெளிந்தேன். ‘சமாளிக்கலாம்.’ கண்களை உருட்டி முழிக்க, “ம்.. .” சீறினாள்.
அப்புறமென்ன ஆரம்பித்தேன்.
“அடுத்தவங்களுக்காகவா நாம வாழ்கிறோம் ராகவி..? என் கிட்ட உனக்கான நம்பிக்கை அவ்வளவுதானா? கம்பெனிக்கு வந்த புதுப்பொண்ணு. தங்க வீடு பாக்கணும்னு கேட்டது, அருணுதான் எனக்கு எல்லாம் தெரியும், அப்படி, இப்படின்னு பில்டப்பாப்பேசி கோர்த்து விட்டுட்டான், உதவும் நோக்கத்தில் அவ்வப்போது அழைத்துப் போனேன், மனசுல ஒண்ணுமில்லச் செல்லம்.” இணக்கமா, வெள்ளைக்கொடிய, ‘செல்லம்’ போட்டு அசடு வழிந்தேன்.
“உங்கள நல்ல விதமா, கெட்டதாக நினைக்கிறதில்லங்க இப்பப் பிரச்சனை, செய்ற உதவியை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அது சரியில்லயே.. . மனசுல ஒண்ணுமில்லங்கற வார்த்த பொய்யா இருக்குங்க, உங்களுக்கு ஞாபகமிருக்கும். புதுசா இங்க குடி வந்தப்போ, ஏரியாவைப் பத்தி எதுவுமே தெரியாததால் எதிர் மாடி வீட்டுப்பையன அழைத்து, அவசரத் தேவைக்கா பொருட்கள் வாங்கிவரச்சொல்வேன். அவனும் வாங்கியாந்து கொடுப்பான். நாளடைவில், அதைச் சாதகமாக்கி. அடிக்கடி இங்க வந்து அத, இத பேசவும் ஆரம்பித்தான். நீங்க கூட, நாலஞ்சி முறை சாடையாக அவனை, என்னை பாத்தீங்க…”
“நீங்க அத எப்படி, எடுத்துப் பார்த்திருந்தாலும், பார்வையின் ஏதோவொரு நோக்கத்தை நீட்டிக்க விடக்கூடாதுனு மட்டும் மனசுல பட, துரிதமா ஒரு முடிவுக்கு வந்து, ‘அவனை அழைத்து உதவி கேட்கத்தானே… வருகிறான். உதவியே வேண்டாம்னா?’ உடனே நிறுந்திட்டேன். நமக்கானதை நாமளே வாங்கிக்க பழகிட, தீர்வும் கண்டேன். புரிந்திருப்பான் போல.. . வருவதை நிறுத்திக் கொண்டான். அவ்வளவுதான் வெளித்தன்மை, மிஸ்டர் கணவர்..!”
“கணவன், மனைவி உறவு, இரண்டு இல்லை. மிஸ்டர் கணவர். புரிதலில் ஒண்ணா இருக்கணும். அதையும் குறைத்து மனசுக்குள் மனசா இருந்து. வாழ்க்கையச் சிறப்பாக்கணும் மிஸ்டர் கணவர்.” ராகவி சொல்லி முடிக்க, மெளனத்திலிருந்து வெளியே வந்தேன். இனம்புரியா கனமானேன். அதே நேரத்தில், புத்தகத் திருவிழாவில் பேராசிரியை ஒருவர் பேச்சைக் கேட்டப் புரிதலோடு, ‘மிஸ்டர் கணவர், மிஸ்டர் கணவர்…’ என்ற கறார் இல்லாத, ராகவியைக் கூட்டிப்பார்த்து, கொஞ்சம் வியந்துமே போனேன்!
தாய்மைக்குப் பிறகு தனது குணத்தில் பக்குவம் அடைந்திருந்த, மனைவியை ஆச்சரியமாக உள்வாங்கிப் பேசுவதற்கு வார்த்தைகளின்றி தவித்தும், எனது சின்னப் புத்திச் செயலுக்குத் தலை தொங்கினேன்... ஆண்களுக்கான கடைசி ஒப்புதல் அதுதானே..! சமயம் கிடைக்க, கம்பெனி, வேலை விசயங்களை கூறுவது, வழக்கம், புதுசா வேலைக்கு வந்து, உதவி கேட்டப் பெண்ணைப் பற்றிச் சொல்லி இருக்கணும். அவளின் தேவைக்கு வீடு பார்க்கக் கேட்டதைச் சொல்லி இருந்தால், மன உளைச்சல், தவிப்பு இல்லாமல் இருந்திருப்பாள், ராகவி.
உண்மையாக வெக்கப்பட்டு, வருந்தினேன்.
கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததை, அடுத்தவர் வந்து, வந்து அதையே கூறியதை, சகிக்காத சங்கடம், கோபம், ஆத்திரமெல்லாம். அதை நானே கூறியிருந்தால், தெளிந்த நீரோட்ட எதார்த்தமா இருந்திருக்கும்!
ஒரு நீளமான உணர்தலை உள்ளத்தில், பதித்துக்கொண்டு, “மறைக்கணும்னு எண்ணமில்லை, ராகவி. சொன்னா.. நீ ஏதாவது வேறு மாதிரி யோசித்தா சரியில்லாம போயிரும்னு, அருண் லீவுன்னது சும்மா, சீண்டல் விளையாட்டுக்கு, ஆனாலும், குற்றம் என்மேல்தான், மன்னிச்சுரு ராகவி,” இதை, உள்ளிருந்து அழுத்தமாக, இந்த விசயத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிடும் அழுத்தமாகவும் ஒரு மன்னிப்பு கேட்டேன்!
காந்தம் விட்டமாதிரி, தோள்களில் கைகள், எடுத்தாள், ராகவி. அதே நொடி, எனது எண்ணத்தின் மேல் மட்டத்திலிருந்த, புதுப்பெண்ணின் ஒட்டுதல் சலனத்தையும் சட்டுன்னு விட்டுத் தெளிந்தேன். மனைவியின் மகிமையை பெரியது என்றும் பூர்ணமாக, ஏற்றேன்!
மறந்தே போனது, துளியளவு எனக்குள் படிந்திருந்ததை துடைத்தும், இனி இப்படி கறைபடக்கூடாது என்ற ராகவியின் வெளிப்படையில், மொத்தமும் சுத்தமானவனா, மறுபடி அதற்கொரு மன்னிப்பை கைகூப்பி தெரிவிக்கையில், எனது செல்பேசியில், அருணுக்கான இசையழைப்பு…
சார்ஜ் இணைப்பில் இருந்த, பேசியை உறுவியதும், பச்சைப்பட்டனை அழுத்திய கையோடு வெளி ஸ்பீக்கர் சிம்பிள்ளை ‘ஆன்’ செய்து, எனது வெளிப்படைத்தன்மையை உறுதியாக்கி, “சொல்லு மச்சான்.” என்றேன்.
“அந்தப் புது பொண்ணு… வானதிக்கு நீ வீடு பார்த்து கொடுத்ததுக்கு நன்றி மழை அப்படிப்பொழியுது, ஏதோ பில்டப்புக்கு உன்ன மாட்டிவிட்டுடேன்னு நெனச்சேன், அதையே நீ கடமைன்னு உதவி பெரிய குணத்தைக் காட்டிட்ட மச்சான். பால் காச்சிக்கு வீட்டுக்கு நேர்ல வந்து அழைக்கனும்னு சொல்றா குடும்பத்தோட நீயும் வரணுமாம். சன்டே கூட்டி வரவா..?” அருண் குரல், இப்படிக்கேட்கவும், “அதெலாம் வேண்டாம் அருண், கம்பெனியில் சந்திக்கும் போது…” அடுத்து என்னைப் பேச விடாமல், ‘பரவாயில்ல வரச்சொல்லுங்க,’ என்பதை ராகவி, சாடையில் விளக்க, ‘சரி மச்சான் அழைச்சுவா,’ என்றேன்.
‘தராசு’ முள் நேர் நிலைக்கு வந்ததில் நிம்மதிப் பொருமூச்சும், விட்டேன்! மகளும், விழித்துவிட்டாள்.
அம்மாவின், நகல் போல் இருந்தாள். அழகா சோம்பல் முறிந்தாள்,
“அம்மு…” மெல்லத்தூக்கி, கொஞ்சுகையில், மனைவியும், சேர்ந்தாள்.
ராகவிக்கானக் கொஞ்சலில், சின்ன, சின்ன முத்தங்கள்…. புரிதலுடன் மகிழ்ந்திருந்த நிமிடங்கள், தொடரட்டும்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.