வாழ்க்கைப் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் நம்மால் எதுவும் செய்ய முடியாத பல சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படிப்பட்ட நிலைகளினூடே கடந்து போகும் மனிதனின் மன எண்ணங்களும் தனி நபர்களுக்கு ஏற்ப வேறுபடுவதுண்டு. நமக்கு ஒன்றுமில்லை என்று தோன்றும் பிரச்சனைகள், மற்றொருவருக்கு வேதனை தருபவையாக இருக்கக்கூடும். வாழ்வின் மாலைப்பொழுதுகளில் தோல்விகள், புகார்கள், கவலைகளையும் வாழ்க்கையின் பச்சை யதார்த்தங்களையும் பற்றி மனோகரன் என்ற கதாபாத்திரம் நம்முடன் பேசுகிறது.
******
நிற்காத குழந்தையின் அழுகையைக் கேட்டுத்தான் மனோகரன் எழுந்தான். அவன் கொஞ்சம் கூட கண்களை மூடவில்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டி வேலை அவனுக்குக் கொஞ்சமும் சரிப்பட்டுவரவில்லை. வேறு வழியில்லாமல் அதில் தொடர்ந்தான். முப்பத்து ஆறு வருஷம் ஒரு கம்பெனியில் ஃபோர்மேனாக வேலை பார்த்தவன் அவன்.
2,300 ரூபாய் பென்ஷன். கிடைத்த கிராஜுவிட்டி மகள் கல்யாணத்துக்கு செலவானது. வீட்டுச் செலவுகள் இருக்கு இல்லையா? மருந்துக்கே அதிகக் காசு வேண்டும். முன்பு சம்பளம் என்று ஒன்று இருந்தது. முதலில் கிடைத்தது எல்லாம் தங்கைகளின் கல்யாணத்துக்காக செலவாக்கப்பட்டுவிட்டது. பிறகு வீட்டுக் கடன்.
குழந்தைகள் எல்லோரும் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார்கள். மனைவி தையல் வேலை செய்தும் சின்னப் பசங்களுக்கு டியூஷன் எடுத்தும் வீட்டுச் செலவுக்கு உதவினாள். குழந்தைகள் நினைத்தது போல படிப்பில் பெரிய அளவில் உயரவில்லை. எப்படியோ தட்டி முட்டி டிகிரி வாங்கியாயிற்று. கோச்சிங் சேர்ந்தார்கள். தர வரிசைப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
ரிடையர்மெண்ட் காசை வைத்து மூத்த மகளுக்குக் கல்யாணம் செய்தாயிற்று. எப்படியோ ஒருவிதமாக அவள் நன்றாக வாழ்கிறாள். சின்னவளுக்கு கல்யாணம் பெரும் பிரமிப்பாக இருந்தது. ஜாதகம்தான் காரணம். கடைசியாக இருந்த வீட்டையும் நிலத்தையும் அவளுடைய பெயரில் எழுதிக் கொடுத்த பிறகுதான் அவளுடைய கல்யாணம் நடந்தது.
பிறகு இருந்த ஒரே ஒரு வருமானம் பென்ஷன் காசு மட்டும்தான். அப்போதுதான் அருகில் இருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை பார்க்க ஒரு ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆறாயிரம் ரூபாய் கிடைக்கும். சாயங்காலம் ஆறு முதல் காலை ஆறு வரை. சும்மா இருந்தாப் போதும் என்றுதான் சொன்னார்கள்.
இரண்டு நாட்கள் கழித்துத்தான் கஷ்டம் புரிந்தது. குடியிருப்பில் இருந்த பெரிய ஆட்கள் ராத்திரி இரண்டு மூன்று மணிக்குத்தான் வந்தார்கள். அவனால் கொஞ்சமும் தூங்க முடியவில்லை. வேறு வழியில்லாததால் நிறுத்தவும் முடியாது. வேறு எங்கே வேலை கிடைக்கும்? இந்தக் காலத்தில் சின்னப் பசங்களுக்கே வேலை கிடைப்பதில்லை. வயசான ஆளுங்களுக்கு இந்த வேலை மட்டும்தான் கிடைக்கிறது.
“நடக்கற மட்டும் நடக்கட்டும்” அப்போதுதான் உயர்ந்த சம்பளத்துக்கு ஏற்பக் கூடுதல் பென்ஷன் கிடைக்க வழி செய்யும் கோர்ட் தீர்ப்பைப் பற்றி அவன் கேள்விப்பட்டான். அதை வாங்கக் கொஞ்சம் காசு கட்டவேண்டும். நண்பர்கள் சிலருக்கு கூடுதல் காசு கொடுத்ததால் கூடுதல் பென்ஷன் கிடைத்ததாக பென்ஷன்காரர்களின் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் அவனுக்குச் செய்தி தெரிந்தது.
“எங்கேர்ந்து காசு கிடைக்கும்? அடகு வைக்கக் கூட ஒன்னுமில்ல”. அவன் நினைத்துப் பார்த்தான். “என்ன பெரிசா யோசிச்சுகிட்டு இருக்கீங்க?”. அனிதா கேட்டாள். “ஒரு ஒன்றரை இரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்தா பென்ஷன் 6,500 ஆகும்னு கேள்விப்பட்டேன்”
“ம். பத்தாயிரத்துக்கே வழியக் காணோமாம்”. பிறகு அவள் எதையோ புலம்பிக் கொண்டிருந்தாள். “என்ன செய்யறது?”
மனோகரனுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. “எதுவா இருந்தாலும் கம்பெனிக்குப் போய்ப் பாக்கலாம்”. பஸ் ஸ்டாப்பில் நிற்கத் தொடங்கி அரை மணி நேரமாயிற்று. கம்பெனி வாசல் வரை போகும் பஸ்ஸைக் காணவேயில்லை. அவனுக்கு அழவேண்டும் போல இருந்தது. “அய்யோ! ஆம்பளப் பசங்க அழுவாங்களா?”. அம்மா சொல்வது அவனுக்கு ஞாபகம் வந்தது.
கடைசியாக வந்த பஸ்ஸில் அவன் ஏறினான். அவனுடைய பழைய ஸ்கூட்டியை பெரிய மகள் போன மாதம் வந்தபோது எடுத்துக்கொண்டு போய்விட்டாள். சின்ன மகளுக்கு வீட்டை எழுதிக் கொடுத்ததில் பெரியவளுக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. அனிதாவிடம் இதைப் பற்றி அவள் அவ்வப்போது சுட்டிக்காட்டிப் பேசுவதுண்டு.
“குழந்தைங்கள நர்சரிக்கு அனுப்பணும்” என்று ஏதேதோ காரணங்கள் சொன்னாள்.”எப்படியோ நடக்கட்டும். இப்ப விக்கற விலைக்கு பெட்ரோல் போடறதே பெரிய கஷ்டம்தான். அதுக்கு ஒரு வழியும் இல்ல”. நைட் டியூட்டி முடிந்து வந்து பகலில் படுத்துக் கொள்வான். பொண்ணுங்களோட வீட்டுக்கு கைய வீசிகிட்டுப் போக முடியாது. ஒரு கிலோ சிப்ஸ் விலை ஐநூறு ரூபா.
போனா அப்பறம் புகாரையும் கேக்கணும். மெனக்கெட்டுப் போய் நிம்மதியக் கெடுத்துக்க வேணாமே. கம்பெனி வாசலில் பஸ் இறங்கி கேட்டில் பெயர் எழுதினான். செக்ஷனுக்குப் போன போது அறிமுகமான ஒருவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். ஓய்வு பெற்று ஐந்து வருஷம் ஆகிவிட்டடு. “ஹையர் பென்ஷன் விண்ணப்பம் கொடுக்க வந்தேன்”
பெயரையும் ஓய்வு பெற்ற தேதியையும் சொன்னான். “சார் போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க. அக்கவுண்ட்டப் பாக்கணும்”. படியிறங்கும்போது இடது பக்கம் பார்த்தான். முப்பத்தி ஆறு வருடங்கள். வேலை பார்த்த செக்ஷன். அங்கு போகவேண்டும் என்று ஒரு ஆசை. அடுத்த நிமிடம் வேண்டாம் என்று தோன்றியது.
வீட்டுக்குப் போனபோது அனிதா கேட்டாள். “போன விஷயம் என்னவாச்சு?”
“அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்காங்க”
“சாப்பாடு எடுக்கட்டுமா?”
“கொஞ்சம் நேரம் படுக்கணும். சாயங்காலம் டியூட்டிக்கு போகணும். பென்ஷன் அதிகமா கிடைச்சதுன்னா இத விட்டுடலாம். முன்னால அடகுக்கு வச்ச நகைங்க வேற இருக்கு.
வர்றது வரட்டும். அனிதா தன்னோட உடம்பப் பத்திக் கவலப்படறதே இல்ல” அடுத்த வாரம் அவன் கம்பெனிக்குப் போனான். ஹையர் பென்ஷன் வேண்டுகோளுக்கான படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
“சார் இத நேரா பென்ஷன் ஆபீசுக்குப் போய் கொடுக்கறீங்களா? இல்ல தபால்ல அனுப்பினாப் போதுமா?”
“தபால்ல அனுப்பினாப் போதும்ப்பா”
பஸ் சார்ஜ் மிச்சமாகும். அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இரண்டு மாதம் கழிந்த போது அவனுக்கு பென்ஷன் ஆபீஸில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் கட்டச்சொல்லிக் கடிதம் வந்தது. அவன் வாட்ஸ் ஆப் குரூப்பில் பார்த்தான். அவனுடன் ஓய்வு பெற்ற சசிக்கும் மோகனுக்கும் ஹையர் பென்ஷன் வந்துவிட்டது என்று அவர்கள் செய்தி அனுப்பியிருந்தார்கள்.
மனோகரனும் தனக்கு வந்த கடிதத்தின் போட்டோவை குரூப்பில் போட்டான். அனிதாவைப் பார்க்கவே முடியவில்லை. மகளுடைய பிரசவ வேலைகள். பிறகு வீட்டு வேலைகளும். எல்லாவற்றையும் அவள் தன்னந்தனியாகத்தான் செய்து கொண்டிருக்கிறாள்.
என்றாலும் அவள் ஒரு புகாரும் சொல்வதில்லை. சாயங்காலம் அவன் வேலைக்குக் கிளம்பிய போது கேட்டான். “நீ நினைச்சா ஒரு ரெண்டு லட்சம் ரூபாய யார்கிட்டேர்ந்தாச்சும் வாங்கித் தரமுடியுமா?”
“நானா? என்ன சொல்றீங்க நீங்க? நான் கேட்டா நூறு ரூபாக் கூட கொடுக்கறதுக்கு யாரும் இல்ல. என்ன விளையாடறீங்களா?”
அப்புறமும் அவள் குரலைத் தாழ்த்தி ஏதோ புலம்பினாள்.
இருட்டும் நேரத்திலும் காசை எப்படி யாரிடமிருந்து வாங்குவது என்ற யோசனையில் இருந்தான். மகள் பிரசவத்திற்காக வந்த போது நகைகள் போட்டிருந்தாள். அதில் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும். பலரும் நகையை அடகு வைத்துத்தான் காசு வாங்கி ஹையர் பென்ஷனுக்கு கேட்ட தொகையை அடைத்ததாகச் சொல்லியிருந்தார்கள்.
அரியர் கிடைத்தால் வட்டியை முதலில் கொடுத்துவிடலாம். இரண்டு மாதம் கடந்தது. “சசிக்கும் மோகனுக்கும் அதிகமாப் பென்ஷன் கிடைக்குது. நான் மட்டும் காசை கொடுக்கல”
அடுத்த நாள் காலையில் காபி குடிக்கும்போது அனிதா பக்கத்தில் இருந்தாள்.
தயங்கியபடி அவன் சொன்னான். “அனிதா. மகளோட அந்த பெரிய மாலையை கொஞ்சம் கேளு. அத அடகு வச்சு இரண்டு லட்சம் ரூபா வாங்கலாம். அரியர் வரும் போது நகையை மீட்டு எடுத்துக் கொடுத்துடலாம். இப்பக் காசு கொடுத்தா ஒரு மாசத்துக்குள்ள புது பென்ஷன் கிடைச்சிடும். அரியரும் கிடைக்கும்”
அனிதா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. “எப்படி கேக்கறதுன்னுதான் ஒரு தயக்கம்”
“நீ கேளு. நம்ம பொண்ணுதானே? நீ கேளு. நான் வாங்கிக் கொடுத்ததுதானே?”
“பாக்கறேன்”. பிறகு அவள் போனாள். இரண்டு நாட்கள் ஓடியது.
காலையில் வேலை முடிந்து வந்த போது அனிதா நகையைக் கொடுத்தாள்.
“அவ ஏதாச்சும் சொன்னாளா?”. அதைக் கேட்டது போலக் காட்டிக் கொள்ளாமல் அனிதா அந்த இடத்தை விட்டு போனாள்.
குளித்து முடித்து அவன் வங்கிக்குப் போனான். அடகு வைத்தான். காசை வாங்கினான். அதை டி டி எடுத்து பென்ஷன் ஆபீசில் கொண்டு போய் கொடுத்தான். ஒரு மாதம் கழிந்த பிறகும் ஒரு அசைவும் இல்லை. ராத்திரி டியூட்டி நேரத்தில் அவன் வாட்ஸ் ஆப் குருப்பில் பார்த்தான். அங்கே ஒரு செய்தியைப் பார்த்து அவன் சுய உணர்வு இல்லாமல் நின்றான்.
பென்ஷன் சங்கத் தலைவரை அழைத்தான். “மனோகரா. கூடுதல் பென்ஷன் தரச் சொல்லி வந்த ஹை கோர்ட்டு உத்தரவுக்கு எதிரா பென்ஷன் ஆப்பீஸ் சுப்ரீம் கோட்டுல அப்பீல் கொடுத்திருக்கு. அதோட தீர்ப்பு வந்ததுக்கு அப்புறம்தான் ஹையர் பென்ஷன் கிடைக்கும்னு சொல்றாங்க”
“சார். காச கொடுத்திருக்கேனே?”
“அத அவங்கிட்டேர்ந்து திரும்பி வாங்கினா அப்பறம் உனக்கு ஹையர் பென்ஷன் எப்படிக் கிடைக்கும்? ஆறு மாசத்துல சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்துடும்”
மனோகரனுடைய தொண்டை வறண்டு போனது.
“மகளை திருப்பிக் கூட்டிகிட்டுப் போக வந்துடுவாங்க. அப்ப அவளோட நகைய அவகிட்ட கொடுக்க வேணாமா? மூனு மாசமாச்சு. ஊர்க்காரங்க கேக்க ஆரம்பிச்சுட்டாங்க”. அடுத்த நாள் அவன் பென்ஷன் ஆபீசுக்குப் போனான்.
அங்கிருந்த ஆபீசர் அப்பீல், கீழ் கோர்ட் உத்தரவு என்று ஏதேதோ சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“கடவுளே! என் பொண்ணோட நகை!”. அவன் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான். பட்டென்று அம்மா சொல்வது ஞாபகத்துக்கு வந்தது. அவனுக்குக் கோபம் வந்தது.
“நீ சும்மா இரு அம்மா. ஆம்பளைங்களும் அழவேணாமா?”
அவனுடன் சேர்ந்து இயற்கையும் மழையாக அழுதது.