ஐந்து மணிக்கு எழுந்தவள்தான் ஷோபனா. அது வழக்கமான ஒன்றுதான். போரூரில் இன்று கிராம சபை நடக்கும் நாள். போன வாரம்தான் வார்டு மெம்பர் நோட்டீஸ் கொடுத்தார். கூட்டத்தில் அதி தரித்திரமாக வாழ்பவர்களுடைய பிரச்சனை பற்றி ஒரு விவாதம் இருக்கிறது. “பதினோராம் தேதி. அக்கா நீங்க கண்டிப்பா வரணும். ரேஷன் கார்டையும் எடுத்துக்கிட்டு வரணும்”
புறப்படுவதற்கு முன்பு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருக்கும் குழாயில் அடித்து நீரை சேகரித்து வைக்க வேண்டும். ஷோபனா தினமும் செய்யும் வேலைதான் இதுவும். அப்புறம் அடுத்த நாள் காலை பத்து மணிக்குத்தான் தண்ணீர் வரும். வாய்க்காலோடு சேர்ந்து டஹான் வீடு.
ஒரு மழை பெய்தால் கூட வீட்டுக்குள் வெள்ளம் வரும். அந்த வாய்க்காலில் இருந்து யாரும் தண்ணீரை எடுத்து உபயோகிப்பது இல்லை. அதில் ஏதாவது செய்தால் உடம்பு முழுவதும் அரிக்க ஆரம்பித்துவிடும். அந்த அளவுக்கு அது மாசுபட்டிருந்தது. வீட்டுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க நான்கு அடி உயரத்தில் ஒரு படி கட்ட வேண்டும்.
இதற்காகப் பஞ்சாயத்துடைய அனுமதி தேடி மூன்று வருடங்களாக அவள் நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி அவர்கள் அனுமதி தருவதை தவிர்த்து வந்தார்கள். நடக்காது என்று உறுதியான போது ராமச்சந்திரன் அந்த எதிர்ப்பார்ப்பு இடை நிழலில் கருங்கற்களைப் பரப்பினார்.
சிபாரிசு செய்ய தனக்கு யாரும் இல்லையே என்பதை அவன் சங்கடத்தோடு நினைத்துப் பார்த்தான். நான்கு மூங்கில் கழிகள் கட்டி தகர ஷீட்டில் கூரை போட்ட வீடு அது. உட்கார்ந்து ஒரு வேலையும் செய்யமுடியாது. படுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு மோசம். மகளுடைய கல்யாணத்துக்குப் பெரிய கவலையாக இருந்ததும் அந்த வீடுதான்.
ஷோபனா மூன்று நான்கு பசுக்களை வளர்த்து வந்தாள். அந்த வருமானத்தில் மிச்சம் பிடித்து கொஞ்சம் பணத்தை வங்கியில் போட்டு வைத்தாள். மகள் கல்யாணத்தை நடத்த அந்தப் பணம் போதுமானதாக இருக்கும். வாழ்க்கை இப்படி வாழ்க்கை தட்டுத்தடுமாறிப் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகள் ஷோபனாவை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது.
பசுக்களை விற்காமல் வேரு வழியில்லை. விற்று வந்த காசையும் சேர்த்து வங்கியில் போட்டாள். விரும்பினால் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொள்ளத் தேவையான பணம் வங்கியில் இருந்தது. ஆனால் இப்போது அத்தியாவசியமானது வீடு இல்லை.
மகளுடைய கல்யாணம்தான். அதனால் அவள் அவ்வாறு செய்யத்துணியவில்லை. ஒரு பையன் மகளை வந்து பார்த்தான். பொருத்தமானவந்தான். தனியார் கம்பெனியில் வேலை. மோசமில்லாத சம்பளம். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே வீட்டைப் பற்றி பேச்சு வந்தது.
“பொண்ணோட வீட்டப் பாக்கவேண்டிய அவசியம் இல்ல. பொண்ண நாங்கதான் கூட்டிகிட்டுப் போகப்போரோம். கல்யாணத்துக்கு இது ஒரு தடை இல்லை”. பையனுடைய அப்பா சொன்னார். அதில் வேறு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. அவர்கள் தங்கத்தையோ பணத்தையோ கேட்கவும் இல்லை. “பொண்ணுக்கு அத்தியாவசியமாத் தேவைப்படற நகைங்கள மட்டும் போடுங்க. கூடுதலா ஒன்னும் வேணாம். அப்படியே நகையே போடாட்டாலும் பரவாயில்ல. இதச் சொல்லி புகுகுந்த வீட்டுல இருந்து ஒரு கொடுமையும் ஏற்படாது. வாழறதுக்கு போதுமான பணம் இருக்கு. கல்யாணச் செலவுக்கு ஒன்னும் பணம் வேணாம். அது எங்ககிட்ட இருக்கு. கல்யாணம்னு சொல்றது ஒரு ஆளோட இல்லை ஒரு குடும்பத்தோட தேவை மட்டும் இல்லை இல்லயா?”
அவர்களுடைய நிலையைப் பற்றிக் கேட்ட போது ஷோபனாவுக்கும் குடும்பத்துக்கும் சந்தோஷம் ஏற்பட்டது. அதிர்ஷ்டம் செய்த ஜென்மம் என்று அவர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள். இரண்டு மாதங்களுக்குள் கல்யாணம் நடந்தது. நகைகளும் கல்யாணச் செலவும் மற்ற செலவுகளுமாக எல்லாம் சேர்ந்து வங்கியில் இருந்த மொத்த காசும் கரைந்து போனது.
இதற்கு நடுவில்தான் ஷோபனா வீட்டுக்கு உதவி கோரி பணம் கேட்டு மனு கொடுத்தாள். வெள்ளப்பெருக்கில் இருந்தும் முகாம் வாழ்க்கையில் இருந்தும் ஒரு விடுதலை. இவ்வளவுதான் அவர்கள் ஆசைப்பட்டது. பட்டியலை வெளியிட்டபோது பெரிய எதிர்பார்ப்புகளோடுதான் ராமச்சந்திரன் பஞ்சாயத்தை அடைந்தான்.
நிராசையோடு வீட்டுக்குத் திரும்பினான். “உங்கள விட கஷ்டப்படறவங்க இருக்காங்க இல்லயா? அந்தத் தடவை மனோகரந்தான் வீட்டுக்கு உதவி கேட்டவர்களுக்கு பணத்த அனுமதி கொடுத்தது. அடுத்த வருடம் நிச்சயமா கிடைக்கப்போற உதவி ராமச்சந்திரனுக்கா இருக்கும்”
வார்டு மெம்பர் அவனைத் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார்.
“இப்படி ஆறுதல் சொல்லிச் சொல்லியே நாலு வருஷம் ஓடிப்போச்சு” அவனுடைய நெஞ்சு பிளர்ந்தது. ஒரு வீடு என்ற கனவு அவனுடைய கண்களுக்கு முன்பு மணற்குவியல் போல தகர்ந்து விழுந்தது. இனிமேலயும் நம்பிக்கையோட இருக்க வழியில்லை என்று அவனுடைய நெஞ்சு மந்திரித்தது. அன்று இரவுதான் கடுமையான நெஞ்சு வலி அவனுக்கு ஏற்பட்டது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போவதற்கு முன்பே அவனுடைய உயிர் பறந்து போனது.
திறமையோ வயதுக்கு ஏற்ற வளர்ச்சியோ இல்லாத மகனையும் நோயாளியான மனைவியையும் தனிமையில் தவிக்க விட்டுவிட்டு ராமச்சந்திரன் விடை சொல்லிச் சென்ற போது எல்லாம் ஸ்தம்பித்தது போல இருந்தது. அரசாங்கத்திடம் இருந்து ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் மட்டுமே அந்தக் குடும்பத்தைப் பட்டினியில் இருந்து காப்பாற்றியது.
மீதித் தேவைகளுக்கு அவசியமான பணம் மகளுடைய பொறுப்பாக ஆனது. மகளின் கணவன் மதித்தன்மை உள்ளவனாக இருந்ததால் அவனுடைய வருமானத்தில் இருந்து சிறிய ஒரு தொகையை மிச்சம் பிடித்து அவள் அம்மாவுக்குக் கொடுத்தாள். அதில் ஷோபனாவுடைய சிகிச்சைச் செலவுகள் இடம்பெறவில்லை.
ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கூடத்தில்தான் கிராம சபை இருந்தது. அவ்வளவு தூரம் அங்கு நடந்து போகக்கூடிய அளவிற்கு ஆரோக்கியவதியாக ஷோபனா இல்லை. அதனால் 120 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் ஏறி ஸ்கூலை அடைந்தாள். அப்போதுதான் எல்லோரும் வர ஆரம்பித்திருந்தார்கள்.
அரசியல்வாதிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் பஞ்சாயத்து பிரெசிடென்டும் வார்டு மெம்பர்கள் என்று எல்லோரும் வந்திருந்தார்கள். இது தவிர, ஏழாவது வார்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் இருந்தார்கள். பிரார்த்தனைக்குப் பிறகு சபை நடவடிக்கைகள் தொடங்கின. பால்காரியான லிஸ்ட்டில் மிக மோசமான வறுமையில் இருந்தவர்களின் பெயர் பட்டியலை பிரசிடெண்ட் வாசித்தார்.
எட்டு பேர்கள் ஏழாவது வார்டில் இருந்தார்கள். ஆனால் ஷோபனாவுடைய பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. பொருளாதார நிலையையும் சமூக நிலைமையையும் கணக்கில் கொண்டே பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்ததாம். அதைப் பற்றி யாரும் எதிர்கருத்தையும் சொல்லவில்லை. எல்லோரும் கை தட்டி அதை ஆமோதித்து நிறைவேற்றினார்கள்.
ஷோபனாவுடைய இதயம் துடிதுடித்தது. கண்களில் நிறைந்த கண்ணீர் நிரம்பி வழிந்தது. புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சபை நடவடிக்கைகள் முடிவதற்குச் சில நிமிடங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும் போது ஷோபனா எழுந்திருந்தாள்.
அவள் பேச ஆரம்பித்தாள். “சார். எனக்குச் சில விஷயங்களச் சொல்லணும். தயவோட கேக்கணும்” என்ற முகவுரையோடு பேசத் தொடங்கினாள் “அதி தரித்திரமானவங்கள எந்த அடிப்படையில தேர்ந்தெடுத்தீங்க. தெரிஞ்சுக்க விரும்பறேன். நான்கு மூங்கில் கழிய வச்சு கட்டியிருக்கறதுதான் என்னோட வீடு. தகர ஷீட் போட்ட வீடு. மழ பெஞ்சா ஒழுகறதுதான் அந்த வீடு. இதப் பத்தி எல்ல்லாருக்கும் நல்லாத் தெரியும். லேசாக் கொஞ்சம் பலமான காத்து அடிச்சுதுனால் இடிஞ்சு கீழ விழுந்துடற அளவுக்கு மோசமா இருக்கற வீடு. மழ பெஞ்சா முகாமுக்கு ஓடவேண்டிய அவலம். என்னோட வருமானம் வாழ்க்கை நிலைம பத்தி தெரியாதவங்க இந்த வார்டுல யாராச்சும் இருக்காங்களா? இங்க ஓட்டு கேக்க மட்டும் வர்ற கட்சி மெம்பருங்க இருக்காங்க இல்லயா? அவங்களுக்கு எல்லாமிதப் பத்தி தெரியாதா என்ன?”
திகட்டி வந்த சங்கடங்கள் ஷோபனாவை தளர்த்தின. என்றாலும் சபை முழுவதும் திடுக்கிட்டுப் போய் இருந்தது. அவள் தொடர்ந்தாள்.
“எனக்கு ஒரு காரியம் மட்டும் உருதியாத் தெரிஞ்சு போச்சு. உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கும் உங்கக் கட்சிக் காரங்களுக்கு மட்டும்தான் நீங்க சலுகைங்கள வாரி வழங்குவீங்க. தகுதியானவங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. மக்களோட நன்மைக்காக அப்பப்ப வந்து போற அரசாங்கங்க எத்தனையோ அறிவிப்புங்கள வெளியிடறாங்க. ஆனா அதையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டிய மேலதிகாரிங்களும் அதிகாரிங்களும் அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு மட்டும் எல்லாத்தயும் கொடுப்பாங்க. இது எல்லாத்தயும் முன்னாலயே புரிஞ்சுகிட்டு இருந்தா இதுக்கெல்லாம் நான் மெனக்கிட்டிருக்கவே மாட்டேன். இப்பதான் என்னோட தப்பு எனக்குப் புரிஞ்சுது. உதவி தேவையில்ல. நீங்க என்னமோ உங்க சொந்தக் கையிலேர்ந்து தர்ற மாதிரி கொடுக்கற பாழாப் போன சலுகைங்க ஒன்னும் வேணாம். அது எனக்கு இனிமேல அவசியமும் இல்ல. இந்தாங்க நீஉங் கொடுத்த ரேஷன் கார்டு. இது இனிம வேணாம். நாங்க எப்படியாச்சும் வாழ்ந்துக்கறோம். இனிமேல ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வராதீங்க”.
எல்லோரும் ஸ்தம்பித்துப் போய் நிற்க கூட்டத்தின் தலைவருடைய மேசையின் மீது ரேஷன் கார்டை வைத்துவிட்டு உறுதியான காலடிகளை எடுத்து வைத்து ஷோபனா அறையை விட்டு இறங்கி நடந்தாள்.