ஒரே நாளில் நான்கைந்து அருங்காட்சியங்கள் பார்க்கும் போது அவைகளுக்குள் பல வகை இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் சலித்துப் போரடித்து விடும். எங்கு எதனை எந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம் என்கிற நினைவுக்குழப்பம் வந்து விடும்.
இதோ நாங்கள் நேஷனல் ம்யூசியம் ஆப் எஜிப்சியன் சிவிலைசேஷன் என்கிற அருங்காட்சியத்துக்குள் பிரவேசிக்கிறோம். சுருக்கமாக (NMEC - என் எம் ஈ சி) தமிழில் ‘எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகம்’ என அழைப்பர்.
இந்த அருங்காட்சியகம் மார் கிர்கிஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில் அய்ன் அல் சேரா குளக்கரையில் அமைந்துள்ளது.
14 ஹெக்டேர் பரப்பளவு. 135000- 140000 சதுர மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியக காலரிகள், நுழைவுக் கட்டணம் வெளிநாட்டினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய். இந்த அருங்காட்சியகம் பழைய கெய்ரோவின் புஸ்டாட் நகரில் 03.04.2021 அன்று நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 50,000 காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியத்தின் நிர்வாக இயக்குநர் அல்டாயெப் அப்பாஸ். இதன் ஆர்க்கிடெக்ட் அல் கஸாலி கசிபா.
இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுக்கு முந்தைய, புராதன எகிப்து, கிரீக், ரோமன், காப்டிக், இஸ்லாமிய நெசவு மற்றும் நவீன காட்சிப் பொருட்கள் நிறைந்துள்ளன. இந்த அருங்காட்சியகம் அமைப்பதில் யுனெஸ்கோவின் தொழில்நுட்ப உதவியும் உண்டு. அருங்காட்சியகத்தின் முதன்மைக் காட்சியகத்தில் கீழ்க்கண்ட காட்சிப் பொருட்கள் உண்டு.
* நஸ்லெட் கட்டார் காலத்து எலும்புக்கூடுகள்.
* சுத்திக்கரிப்புக் கூடாரம்.
* 19 ஆவது ராஜவம்சத்தை சேர்ந்த சென்னட்ஜெம் சவப்பெட்டி.
* நைல் நதியின் கிரீக்கோ ரோமன் கடவுளான நிலோஸ் சிலை.
* அபூபக்கர் இப்ன் முஸிரின் மிம்பர்.
* சிற்பி மெஹ்மூத் மொக்தர் செதுக்கிய அல் பலாஹா சிலை.
நெசவு மற்றும் நூற்புக்கான காட்சியகத்தில் 600 காட்சிப் பொருட்கள் உள்ளன. சாயமேற்றும் பகுதியில் கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாயப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை ஆர்னிகா பார்க்க வந்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
அது இங்குள்ள 22 மம்மிகளைக் கண்ணாரக் கண்டு களிக்கவே.
மத்திய கெய்ரோ ம்யூசியத்திலிருந்து இந்த மம்மிகள் இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுள்ளன.
அந்த ஊர்வலத்தை ‘பிர்அவ்னின் தங்க ஊர்வலம்’ என அழைக்கின்றனர்.
இங்குள்ள 22 மம்மிகளில் 18 மம்மிகள் அரசர்கள் 4 மம்மிகள் ராணிகள்.
அந்தப் பட்டியல் இதுதான்;
* 17ஆம் ராஜவம்சம் - மன்னர் செகெனென்ரோ தாவோ II - ஹிக்சோஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த மன்னர்.
* 18ஆம் ராஜவம்சம் - அரசி அஹ்மோஸ் நெஃபர்டாரி -முதலாம் அஹ்மோஸ் மன்னரின் மனைவியும் முதலாம் அமென்ஹோடெப் மன்னரின் தாயாரும் ஆவார் இவர்.
* மன்னர் முதலாம் அமென்ஹோடெப் (Amenhotep I) நவீன காலத்தில் இன்னும் கட்டுக்கள் பிடிக்கப்படாமல் மலர்மாலைகளுடன் பாதுகாக்கப்படும் ஒரே அரசமம்மி இவர்தான்.
* அரசி அஹ்மோஸ் மெரிட்டாமுன் - முதலாம் அமென்ஹோ டெப் மன்னரின் சகோதரியும் மனைவியும் ஆவார் இவர்.
* மன்னர் முதலாம் துட்மோஸ் - மன்னர்களின் பள்ளத்தாக்கில் கல்லறை அமைத்த முதல் பிர்அவ்ன் இவர் தான்.
* மன்னர் இரண்டாம் துட்மோஸ் - அரசி ஹட்ஷெப்சாட்டின் கணவர்.
* அரசி ஹட்ஷெப்சுட் பண்டைய எகிப்தை ஆண்ட மிகவும் சக்தி வாய்ந்த பெண் பிர்அவ்ன் இவர்.
* மன்னர் மூன்றாம் துட்மோஸ் - எகிப்திய பேரரசை விரிவு படுத்திய மாவீரர்.
* மன்னர் இரண்டாம் அமென்ஹோடெப் - வில்வித்தையில் சிறந்தவர்.
* மன்னர் நான்காம் துட்மோஸ் - கிசாவின் பெரிய ஸ்விங்ஸ் சிலையை மணலில் இருந்து மீட்டெடுத்த மன்னர்.
* மன்னர் மூன்றாம் அமென்ஹோடெப் - எகிப்தின் பொற்காலம் இவர் ஆட்சி காலம்.
* அரசி தியே - மூன்றாம் அமென்ஹோடெப்பின் பட்டத்து அரசியும் மன்னர் அகெனட்டனின் தாயாரும் ஆவார்.
19 ஆவது ராஜவம்சம்
* மன்னர் முதலாம் செட்டி - நேர்த்தியாகப் பதப்படுத்தப்பட்டு முக அமைப்பு இன்னும் தெளிவாகத் தெரியும் மம்மி இவருடையது.
* மன்னர் இரண்டாம் ராமேசஸ் - (மகா ராமேசஸ்) எகிப்தை 66 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
* மன்னர் மெர்னெப்டா - இரண்டாம் ராமேசஸின் மகனும் வாரிசும் ஆவார்.
* மன்னர் இரண்டாம் செட்டி - மெர்னெப்டா மன்னரின் மகன்.
* மன்னர் சிப்டா - இளம் வயதிலேயே அரியணை ஏறி குறுகிய காலம் ஆட்சி செய்த மன்னர்.
20 ஆம் ராஜவம்சம்
* மன்னர் மூன்றாம் ராமேசஸ் - பண்டைய எகிப்தின் மாபெரும் போர் வீரர்.
* மன்னர் நான்காம் ராமேசஸ் - மூன்றாம் ராமேசஸின் மகன்.
* மன்னர் ஐந்தாம் ராமேசஸ் - பெரியம்மையால் பாதிக்கபட்டு உயிரிழந்த மன்னர்.
* மன்னர் ஆறாம் ராமேஸஸ் - ஐந்தாம் ராமேசஸின் சிறிய தந்தை.
* மன்னர் ஒன்பதாம் ரமேசஸ் - இருபதாம் ராஜவம்சத்தின் கடைசி ஆட்சியாளர்.
அரசி அஹ்மோஸ் மெரிட்டாமுன் மற்றும் தியே இருவரின் மம்மிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அருங்காட்சியத்தின் சிறப்பு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மம்மிகளை ஒளிப்படம் எடுக்க அனுமதியில்லை. அரச மம்மிகள் கூடத்தில் சாரைசாரையாய் ஊர்ந்து மம்மிகளைப் பார்த்தோம்.
ஆர்னிகா 30 வருடங்களுக்கு முன்பு ‘மம்மி’ என்கிற திகில் நாவல் எழுதியது என் நினைவுக்கு வந்தது.
‘ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்குத் தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா?’
முணுமுணுப்பாய் பாடினார் ஆர்னிகா.
மம்மிகளிடம் விடை பெற்றுக் கொண்டு காப்டிக் அருங்காட்சியகத்திற்குப் பறந்தோம்.
காப்டிக்-கெய்ரோ பகுதியில் உள்ள பழமையான ரோமன் பாபிலோன் கோட்டை வளாகத்தில் இந்த காப்டிக் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
உலகிலேயே காப்டிக் கிறிஸ்துவத்தின் மிகப்பெரிய கலை மற்றும் தொல்பொருள் தொகுப்பு இங்குதான் உள்ளது.
இந்த காப்டிக் அருங்காட்சியகத்தை 1908ல் ஆரம்பித்து 1910-ல் திறந்து வைத்தார் மார்குஸ் சிமைக்கா பாஷா.
பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை. நுழைவுக் கட்டணம் 280 எஜிப்சியன் பவுண்ட். இந்த அருங்காட்சியகத்தில் கையெழுத்துப் பிரதிகள், ஜவுளிகள், சின்னங்கள், மரவேலைப்பாடுகள், கல்வெட்டுகள், நாக் ஹம்மதி கோடெக்ஸ் (நாக் ஹம்மதி எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நாஸ்டிசிச கிறிஸ்துவ நூல்கள்) அடங்கிய 16, 000 காட்சிப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காப்டிக் அருங்காட்சியகம் காப்டிக் கிறிஸ்துவர்களின் பண்டைய வாழ்வியல் தொகுப்பு.
காப்டிக் கிறிஸ்துவர்கள் எகிப்து நாட்டின் பூர்வீகக் கிறிஸ்துவச் சமூகத்தினர். இவர்கள் காப்டிக் ஆர்தடெக்ஸ் சர்ச்சை பின்பற்றுபவர்கள். எகிப்தில் இவர்கள் சிறுபான்மையினர். 5 லிருந்து 15 சதவீதத்தினர் காப்டிக் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.
காப்டிக் கிறிஸ்தவர்கள் கீழ்க்கண்ட ஏழு திருவருட்சாதனங்களைப் பின்பற்றுகின்றனர்.
* ஞானஸ்தானம்.
* உறுதி பூசுதல்
* பாவ மன்னிப்பு
* நற்கருணை
* திருமணம்
* நோயுற்றவருக்கு எண்ணெய் பூசுதல்.
* குருத்துவம்.
காப்டிக் கிறிஸ்துவர்கள் தெய்வீகத் திருப்பலி வழிபாட்டு முறை கொண்டவர்கள். புனித பசில் வழிபாட்டு முறை, புனித கிரிகோரி வழிபாட்டு முறை, புனித சிரில் வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள். இவர்களின் வழிபாட்டு மொழி காப்டிக் மற்றும் அரபு. நின்று கொண்டேதான் வழிபடுவர். ஒரு நாளைக்கு ஏழு முறை ஜெபம் செய்வர். இவர்களிடம் தூப வழிபாடும் நற்கருணையும் உண்டு. இவர்கள் வருடத்திற்கு 210 நாட்கள் விரதம் இருக்கின்றனர். சுருக்கமாகக் கூறினால் பண்டைய எகிப்து மரபுகளையும் தொடக்கக்காலக் கிறிஸ்துவ அப்போஸ்தலிக்க பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய ஆன்மிகச் சடங்கே காப்டிக்காகும்.
காப்டிக் அருங்காட்சியகம் சுற்றிப் பார்த்தது வித்தியாசமான அனுபவம் இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அனுபவம்...!