ஓய்வு....!
அம்மாவின்
ஓயாமல் ஓடிய கால்களின்
கொலுசுச் சத்தம்
கேட்டவாறே கடந்த காலம் அது
அதிகாலைத் தொடங்கி
அம்மாவை பணிக்கும்
அன்றாட வேலைகளில்
அழகான ஒரு ஜதி அமைப்பு
அவசரத்திற்குத் தகுந்தாற் போல....
வகையாய்ச் சமைக்கும் சமையலில்
வளையல்கள் பாடும் சுதிகூட
சுவையூட்டக் கூடியது....!
சேவல்கள் கூவாது தூங்கும்
காலைப் பொழுதுகளை
உடைய வீட்டில்
விடியலின் கொக்கரிப்புக்கு மாற்று
அவள் கொலுசின்
மெல்லிய சலசலப்பு....
அன்றோ
புதியதொரு காலை எனக்கு....!
அம்மாவின் அவசரநடையின்
அவள் கொலுசின் குலுங்கலும்
வேகமாக வெந்த விடியலில்
வளையலின் சிணுங்கலும்
கேளாத காலை....
உடல்நலமின்றி ஓய்ந்தால் கூட
உறங்கும் அம்மாவின் குரலோடு
உறைந்த கொலுசின் சிணுங்கலும்
எனக்குக் கேட்டிருக்கும்...
அன்றிரவு தான்
அம்மா சொன்னாள்
அயர்ந்து தூங்கி
ஓய்வெடுக்க
அம்மாக்குப் பதில்
அப்பா
அவளின் அணிகளை
கொண்டுச் சென்று
அடகுக் கடையில் விட்டு வந்தார்
என்று...!
- கி. விக்னேஷ், கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.