உன் கண்ணில் நீர் வழிந்தால்...!
உள்ளத்தே ஒளியாய் உயிரிதிலே வளியாய்
வெள்ளத்து நீருருவாய் விண்ணுயர் நிலமாய்
அண்டத்தே துகள்நிறை அணுத்திரள் தொகுப்பாய்
கண்டேனுனை அன்பே காரிகைக்கு நல்வரமே !
என்றெனை கரம்பிடித்தாய் அன்றிலிருந்து நிழலே!
சென்றெங்கு வந்தாலும் முன்னிற்கும் அகமே!
சோலையோ சுடுதழலோ சொல்லாக்கும் துணையே!
வாலையோ வயோதிகமோ வருவேன் உன்னோடே!
செங்குருதி நாளமெலாம் சுழல்வது உயிர்க்கே!
தங்கிடுமோ ஒரிடமே தடைவரின் சவமே!
மங்காது வாழ்விதனை மாண்புற செய்தே
பொங்கிடும் புனலாக்கி புத்துணர்வு அளித்தாய்!
சொல்லாத உணர்வெலாம் சொல்லாமல் உணர்ந்தாய்!
அல்லாதவை அணுகாது அகலாமல் காத்தாய்!
உன் கண்ணில் நீர் வழிந்தாலிங்கு
என்னுடலே நீறாகும் கனலாலே வெந்து!
- மாலதி இராமலிங்கம், புதுச்சேரி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.