உண்மையும் பொய்யும்..!
உண்மை
அதன் போக்கில் இருக்கும்
பொய் வளர்க்கப்படும்...!
உண்மைத்தன்மை
ஒருபோதும் அலங்கரிக்காது
பொய்யின் பகட்டுக்கு
வண்ணச்சாயம் அவசியம்….!
உண்மை குறுகிய பயணம்
இலக்கை அடைவது கடினம்
அடைந்த பின் நிமித்தம்
பொய்க்கு பல சுற்றுச்சாலை
முடிவு தெரிவதில்லை….!
உண்மை வைரம்
பதித்த சிம்மாசனம் அமர்வு
பொய் அந்தந்த நேரத்திற்கான
பச்சோந்தித் தாவல்….!
உண்மை மரக்கிளை தேன்தட்டு
அதிலான ஓர்துளியும் தித்திப்பு
பொய்யது கொமட்டிகாய்
தேவைக்கேற்ப எடுக்கலாம்
சுவைக்கவே முடியாது….!
உண்மை உணர்ந்தாலே
தலைக்கான கிரீடமாகும்
பொய் புரிந்தால் அறுந்த மிதியடி...!
உண்மை குழந்தை மாதிரி
புன்முறுவல் பொக்கிஷம்
பொய்யும் குழந்தைதான்
இறுக்கத்தின் வடிவமே….!
உண்மையை விரும்பினால்
உயர்ந்து விடலாம்
பொய்யை தொட்டால் கூட
அருகாமையே அருவெறுக்கும்...!
உண்மை இருளலாம்
ஒருநாள் வெளிச்சமாகும்
பொய் கூடவே வரலாம்
கூடாசெயலாக ஓடியே விடும்….!
உண்மை பொதுமைத்தேவை
பொய் எதற்கும் வேண்டாத ஒன்று...!
உண்மை கடவுள் நம்பிக்கை
பொய் கடவுள் இல்லையென்பது…!
உண்மை “அம்மா”
அவ்வளவுதான்
பொய் ‘பொய்’தான்
சொல்ல ஒன்றுமில்லை...!
- காயத்ரி மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.