........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-15 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
15. தேவையற்ற சுமைகளை சுமக்கலாமா?
சிலர் செய்யும் செயல்கள் படு முட்டாள்தனமாக இருக்கும். ஆனால் தாங்கள் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம்? என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஒரே நோக்கமுடையவையாக இருக்கும். இவர்கள் தாங்கள் நினைப்பது மட்டும் நடக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இருப்பதுடன் தன்னைப் பற்றியோ, மற்றவர்கள் நிலையைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்வதில்லை. இவர்கள் செயல் தவறு என்று யார் சொன்னாலும் அவர்களைத் தவறாகப் பார்க்கும் எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால் அதனால் வரும் பயன்கள் மற்றும் பாதிப்புகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அதை முடிக்க வேண்டும் என்கிற ஒரே நிலையில் இருப்பார்கள். இதற்காக எதையும் இழக்கவும், எந்தச் சுமையையும் சுமக்கவும் தயாராயிருப்பார்கள். இந்த சுமை நமக்குத் தேவையா என்று கூட சிந்திப்பதில்லை. இதனால் இவர்களுக்கு சுமைகள் வலியை ஏற்படுத்தினாலும் இந்தச் செயல் என்னால்தான் முடிந்தது என்பார்கள். இந்தச் செயலால் அவர்கள் பயனடைந்திருப்பார்களா? என்றால் அது பெரும் கேள்விக்குறிதான். ஒருவன் அடிமுட்டாளாக இருந்தான். அவனுக்கு எதையும் உணர்ந்து கொள்ளும் புத்தியும் கிடையாது. அவனை நினைத்து அவனது மனைவி மிகவும் வேதனைப்பட்டாள். அங்கு இராமாயணப் பிரசங்கம் ஒன்று நடந்தது. அந்தப் பிரசங்கம் கேட்டாலாவது தனது கணவருக்கு புத்தி வரும் என்கிற எண்ணத்துடன் கணவனைப் பிரசங்கம் கேட்டு வரும்படி அனுப்பினாள். அவனும் அந்தப் பிரசங்கத்துக்குச் சென்றான். கூட்டமாக இருந்தது ஒரு ஓரமாக அவனுக்கு உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து கொண்டான். அவன்பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் ஒருவன் அவன் தோளில் ஏறி அமர்ந்து கொண்டான். இவன் அதைக் கவனித்தாலும் அவனது மனைவி சொன்னபடி பிரசங்கம் கேட்பதை மட்டும் கவனமாய்க் கொண்டிருந்தான். அவன் உடலில் ஏறியிருந்த சுமையையும் தாங்கிக் கொண்டான். கடைசியில் பிரசங்கம் முடிந்து வீடு திரும்பினான். மனைவி கேட்டாள் இராமாயணப் பிரசங்கம் கேட்டீர்களே... எப்படி இருந்தது? என்றாள். அதற்கு அவன், ஒரு ஆள் சுமையிருந்தது என்று சொன்னான். இப்படித்தான் பலர் தேவையற்ற சுமைகளைச் சுமந்து தேவையானவற்றை கவனிக்க முடியாமல் மனமுடைந்து போகிறார்கள், அவமானமுமடைகிறார்கள். எந்தச் செயல் செய்வதும் பெரியதல்ல. அதில் நம்முடைய உண்மையான உறவுகளும், நட்புகளும் பாதிப்படையாமல் தேவையற்ற சுமைகளைத் தவிர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நமக்கு நல்ல பெயர் வாங்குவது கேள்விக்குறிதான். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |