........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-17

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

17. சமநிலையில் நடந்து கொள்ளலாமே?

ஒரு சிலர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமின்றி, அடுத்தவர்கள் வேலையிலும் அக்கறை எடுத்து அவர்களுக்கும் உதவுகின்றனர். இதன் மூலம் மற்றவர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதுடன் அந்தத் தொழிலையும் கற்றுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஏதாவது ஒரு வேலை என்றால் போதும் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வது எப்படி என்றும் அதை அடுத்தவர் தலையில் எப்படிக் கட்டி விடலாம் என்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்கள் எந்த வேலையையும் ஈடுபாடுடன் செய்வதில்லை. எந்த வேலையையும் செய்யாமல் ஏமாற்றும் நோக்கத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். 

முதல் வகையைச் சேர்ந்தவர்கள் எதிலும் ஆர்வமாக இருப்பதால் அவர்களுக்கு அதிகப்படியான வேலைகள் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் ஈடுபாட்டால் அந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து விடுவதால் அவர்களுக்கான வேலைப்பளு சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு அவர்களால் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கூட செய்யாமல் பிறரிடம் கொடுத்து அந்த வேலைகளை முடித்துக் கொள்வதுடன் தானே அனைத்து வேலைகளையும் செய்தது போல் மிகைப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் முக்கியமானவர்களை ஏமாற்றி தாங்களே உயர்ந்தவர்கள் என்பது போல் காட்டியும் கொள்வார்கள்.

இதனால் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் அனைத்து வேலைகளையும் செய்து நல்ல பெயரையும் வாங்க முடியாமல் அந்த வேலையைக் கூட இழக்க வேண்டியிருக்கிறது.

இப்படி முதல் வகையினர் இழப்பு இரண்டாம் வகையினருக்கு சுமையாகப் போய் விடுகிறது. 

முன்னொரு சமயம் ஒரு வியாபாரி இருந்தான். அவனிடம் ஒரு கழுதையும், ஒரு குதிரையும் இருந்தன. வியாபாரி இரண்டின் மீதும் பாரம் ஏற்றிச் செல்வது வழக்கம்.

ஒரு சமயம் கழுதையும், குதிரையும் பாரம் சுமந்து சென்றன. வழியிலேயே குதிரையின் மீது இருந்த பாரம் ஒரு கடையில் இறக்கப்பட்டு விட்டது. அதனால் குதிரை ஒரு சுமையும் இல்லாமல் நிம்மதியாகச் சென்றது.

அன்றைக்கென்று கழுதையின் மீது சுமக்க முடியாதபடி அத்தனை பாரம் ஏற்றப்பட்டிருந்தது. அதனால் கழுதை, குதிரையைப் பார்த்து, "இத்தனை மூட்டைகளை என்னால் சுமக்க முடியவில்லை. நீ இரண்டு மூட்டைகளை உன் முதுகில் ஏற்றிக் கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்." என்றது.

பாவம் கழுதையால் அத்தனை பாரத்தையும் துக்க முடியவில்லை. அதனால் பாதி வழியிலேயே அது கீழே விழுந்து இறந்தது. உடனே வியாபாரி, கழுதையின் மீது ஏற்றினான். அது போதாதென்று செத்துப் போன கழுதையின் உடலையும் குதிரையின் மீது வைத்தான்.

அப்பொழுதுதான் குதிரை நினைத்துக் கொண்டது. கழுதைக்கு உபகாரம் செய்திருந்தால் இந்தக் கஷ்டம் ஏற்பட்டிருக்காதே" என்று.

இந்தக் கழுதையின் இறப்பு குதிரைக்குச் அதிகச் சுமையாகப் போய் விட்டாலும் அந்த வியாபாரிக்குத்தான் உண்மையான இழப்பு. இந்த வியாபாரிகளைப் போல் ஒரு சிலர் நன்றாக வேலை செய்கிறார்கள் என்று அவர்களுக்கே அதிகப்படியான வேலையைக் கொடுத்து அவர்களை விரைவில் இழந்து விடுகின்றனர். ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து ஏமாந்தும் போகிறார்கள்.

எதையும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து சமமாக நடந்து கொள்வதிலும் நல்ல பெயர் வாங்கலாமே?

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-16                                                                                                                                வழிமுறை-18        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு