தொடர் கட்டுரை-1.
பகுதி-18
நல்ல பெயர்
வாங்கலாம்.
-தேனி.எம்.சுப்பிரமணி.
18.
படித்தால் மட்டும் போதுமா?
இன்று பலருக்கும் தாங்கள் படித்திருக்கிறோம். இந்த படிப்பு ஒன்று இருந்தால்
போதும் மற்ற எதுவும் தேவையில்லை என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தங்களுடைய
படிப்பு தங்களுக்கு அனைத்தையும் தந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் படிப்பில் திறனுடையவர்கள் வாழ்க்கையில் முன்னிலைக்கு வந்து
கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் வாழ்க்கையில் பொதுவான விசயங்களில்
கவனம் செலுத்துவதுமில்லை. அதைக் கண்டு கொள்வதுமில்லை. இதனால் பின்னால் வரப்
போகும் இழப்புகள் தெரியாமல் ஒருவழிப் பயணமாக அதாவது பணம், தன் குடும்பம் என்கிற
குறுகிய பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாதையில் குறுக்கிடும்
அனைவரையும் ஒதுக்கி விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அனுபவம் என்கிற எண்ணத்தில் அறிவுரைகள் வழங்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு
இடையூறாகத் தெரிகிறார்கள். இவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் "உங்கள் காலம் வேறு,
எங்கள் காலம் வேறு" என்கிற வாசகத்தை வீசி எறிகிறார்கள். இந்த
எதிர்ப்புகளுக்குப் பயந்து பெரியவர்கள் பேசாமல் இருப்பதுடன் "பட்டுத்
திருந்தட்டும்" என்று வாசகத்தை மட்டும் சொல்லி அடங்கிக் கொள்கிறார்கள்.
பெரியவர்கள் சொல்லும் பட்டுத் திருந்தட்டும் என்பது "அனுபவப்பட்டுத்
திருந்தட்டும்" அல்லது "அடிபட்டுத் திருந்தட்டும்" என்று இருக்கிறது. பலரும்
உரிய காலத்தில் கேட்காமல் எல்லாம் இழந்த காலத்தில்தான் உணர்கிறார்கள். பின்னால்
அவர்கள் உணர்கிற காலத்தில் இழப்புகள் தான் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஊரில் பிரபல ஜோதிடர் ஒருவர் இருந்தார். வர் சொல்வது சொன்னபடி பலிப்பதால்
பலர் அவரைத் தேடி வந்து அறிவுரை பெற்றுப் பயனடைந்தனர். இதனால் அவரிடம் பணம்
அதிகமாகச் சேர்ந்தது. அதைக் கொண்டு ஊரில் சில நிலங்களை வாங்கிப் போட்டு
விவசாயமும் செய்து வந்தார்.
அவருக்கு வயோதிகம் ஆனபோது தனது மகனைக் கூப்பிட்டு, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டு
அத்தொழிலைச் செய்வதுடன் விவசாயம் செய்து வாழ்க்கையை மேலும் வளமாக்கிக் கொள்"
என்று அறிவுரை சொல்லி ஜோதிடக் கலையையும் கற்றுக் கொடுத்தார். அவனும்
ஜோதிடக்கலையை விரைவில் கற்றுத் தேர்ந்தான்.
ஜோதிடர் இறக்கும் தருவாயில் மகனிடம், "நீ ஜோதிடத்தை நன்றாகக் கற்றுக் கொண்டாய்.
இருந்தாலும் அனுபவப்பூர்வமாக பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பல
ஊர்களுக்குச் சென்று ஜொதிடம் சம்பந்தமான சகுனம், பரிகாரம் போன்றவற்றை
அனுபவப்பூர்வமாகக் கற்றுக் கொள். இதுபோல் வாழ்க்கைத் தேவைக்கும்
அனுபவப்பூர்வமாக பல கற்றுக் கொள்" என்றார்.
ஆனால் அவரது மகனோ, தான் கற்றிருக்கிறோம். இனி எதற்கு அனுபவம் என்கிற எண்ணத்தில்
தந்தையின் அறிவுரையை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான்.
ஜோதிடர் மறைவிற்குப் பிறகு அவருடைய மகனும் ஜோதிடத்தில் புகழ் பெற்றான். ஆனால்
அடுத்தவர்களின் அனுபவங்களைக் கேட்கவோ, தெரிந்து கொள்ளவோ விரும்பவில்லை.
இப்படியிருக்கையில் அந்த வருடம் அவனது நிலத்தில் அமோக விளைச்சல் ஏற்பட்டது.
அறுவடைக்கு நல்ல நாளாகப் பார்த்து ஆட்களை வரச் சொன்னார் அந்த ஜோதிடர் மகன்.
அப்போது அந்த வழியாக வந்த அந்த ஊரின் சலவைத் தொழிலாளி, "ஜோதிடரே, உங்கள்
குடும்பத்துடன் உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து எனக்கு நட்பு இருந்து
வருவதைத் தாங்களும் அறிவீர்கள். இன்று என்னிடம் உள்ள சிறு நிலத்தில் விளைந்த
நெல்லை அறுவடை செய்யப்போகிறேன். தாங்களும் உடனடியாக அறுவடை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் நிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உடனடியாக அறுவடை செய்யத் துவங்குங்கள்.
மழையும் காற்றும் வரப் போகிறது. தங்களது நெல்மணிகள் வீணாகிப் போய்விடக் கூடாது
என்பதால் சொல்கிறேன்." என்றார்.
ஆனால் ஜோதிடர் மகனோ அந்த சலவைத் தொழிலாளி கூறியதைக் காதில் வாங்கிக்
கொள்ளவேயில்லை. நான் அடுத்த வாரம்தான் நல்ல நாள் பார்த்திருக்கேன். நீங்கள்
உங்கள் நெல்லை அறுவடை செய்யுங்கள்" என்று கூறி அவரை அனுப்பி விட்டான்.
அன்றிரவு நல்ல மழை பெய்தது. காற்றும் பலமாக அடித்து விளைந்த நெல்லெல்லாம் கீழே
சிதறி வீணாகப் போயிற்று.
மறுநாள் காலை இதைப் பார்த்த ஜோதிடர் மகன் அந்த சலவைத் தொழிலாளியிடம் சென்று, "அய்யா,
நீங்கள் நேற்று சொன்னபடியே இரவு நல்ல மழை பெய்து என் நிலத்தில் இருந்த பாதி
நெல்மணிகள் வீணாகப் போய்விட்டது. உங்களால் மழை வரும் என்று எப்படி கண்டு
பிடிக்க முடிந்தது. இதற்கான சாத்திரத்தை எங்கே கற்றீர்கள்?" என்று கேட்டான்.
அவர், "நான் இதற்காக சாத்திரம் எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய கழுதை
மேட்டின் மீது ஏறி உடலை வளைத்து வடகிழக்குத் திசையைப் பார்த்து கத்திக்
கொண்டிருந்தது. அது அப்படிக் கத்தினால் மழை வரும் என்பதை பலமுறைக் கவனித்து
அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். நேற்று காலை என் கழுதை அப்படிக்
கத்தியது. நானும் மழைபெய்யப் போகிறது என்று தெரிந்து கொண்டேன்" என்றான்.
அப்போதுதான் ஜோதிடர் மகனுக்குத் தன் அப்பா சொன்ன அனுபவ அறிவு உயர்ந்தது என்கிற
உண்மை விளங்கியது.
-இப்படித்தான் பலர் தாங்கள் படித்திருக்கிறோம். தங்களுக்குத்தான் எல்லாம்
தெரியும் என்று வாழ்க்கையில் நல்ல பெயரையும் வாங்க முடியாமல் வாழ்க்கையையும்
உயர்த்திக் கொள்ளாமல் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
(வழிமுறைகள் வளரும்.)
வழிமுறை-17
வழிமுறை-19
|