........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-19

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

19. தவறுகள் தவறாகவே தெரிவதில்லை.

எது நல்லது? எது கெட்டது என்று தெரியாமலே பலரும் இருக்கிறார்கள். ஒரு விசயம் தவறு என்று தெரிந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கெட்ட பெயரை வாங்கிக் கொள்கிறார்கள். அந்தத் தவறுக்கு ஆயிரம் விளக்கமளிக்கும் அவர்கள் தவறு செய்யக் கூடாது என்கிற மனநிலைக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். தான் செய்யும் தவறு அவர்களுக்குத் தவறாகவே தெரிவதில்லை. மேலும் அந்தத் தவறை நியாயமாக்கப் பார்க்கிறார்களே தவிர திருத்தம் செய்து கொள்ள விரும்புவதில்லை. தன்னுடைய தவறுகளை அடுத்தவர்கள் செய்யும் பிற பெரிய தவறுகளுடன் ஒப்பிட்டுத் தன்னுடைய தவறு அதை விடச் சிறியதுதான் என்று பிறருக்குத் தான் பரவாயில்லை எனபது போன்றே இவர்களின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்களுடைய ஒப்பீடு அவர்களை விடத் தாழ்ந்திருப்பவர்களுடன்தான் இருக்கிறது. இவர்கள் நிலையும் தாழ்ந்து கொண்டே செல்கிறது.

ஆனால் இதே நிலையில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை விட உயர்ந்தவர்களுடன் ஒப்பிட்டு அவர்களைப் போல் நம்மால் இருக்க முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். சிறு தவறுகள் வந்து விட்டாலும் அதிலிருந்து தங்களைத் திருத்திக் கொண்டு தங்களை நல்லவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் நல்ல பெயருடன் நல்ல முன்னேற்றத்தையும் பெறுகிறார்கள்.

இந்த இருவேறு குணமுடையவர்களுக்கிடையே இருக்கும் மனநிலைதான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்தி வேறுபடுத்துகிறது. இது எப்படி என்கிறீர்களா?

ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பியர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்க்கை நடத்தத் துவங்கினர்.

மூத்தவன் குடிகாரனாக ஆனான். எல்லாத் தீய பழக்கங்களும் அவனிடம் இருந்தது.

இளையவன் நற்பண்புகள் அனைத்தும் நிரைந்து விளங்கினான். ஊர் மக்கள் எல்லோரும் அவனை மதித்தார்கள்.

அவர்களுக்கு உறவினரான பெரியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார்.

மூத்தவனைச் சந்தித்த அவர், "ஏன் இப்படிக் குடிகாரனாக இருக்கிறாய் ஊரில் உன்னை எல்லோரும் தீயவன் என்று பழிக்கிறார்களே... நீ திருந்தக் கூடாதா?" என்ரு வருத்ததுடன் கேட்டார்.

"நான் என்ன செய்வேன்? என் தந்தை குடிகாரராக இருந்தார். அவரைப் பார்த்து அவருடைய தீய பழக்கங்கள் எல்லாம் எனக்கும் வந்து விட்டன. நான் என்ன முயன்றாலும் என்னைத் திருத்திக் கொள்ள முடியாது. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள்" என்றான் அவன்.

அடுத்ததாகத் இளையவனிடம் வந்தார் அவர். "உன் அண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தீயவனாகி விட்டான். நீ மட்டும் எப்படி நல்லவன் என்று பெயர் எடுத்தாய்?" என்று கேட்டார்.

"என் தந்தைதான் அதற்குக் காரணம்" என்றான் அவன்.

"உன் தந்தை குடிகாரராக இருந்ததால்தான் உன் அண்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிக் கெட்டு விட்டான் என்று சொல்கிறான். நீ மட்டும் எப்படி?" என்றார் அவர்.

"என் தந்தை குடிகாரராக இருந்ததால் எல்லாத் தீய பழக்கங்களும் கொண்டவராக இருந்தார். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவரைக் கேலி செய்தார்கள். அவரால் எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மதிப்பு இல்லாமல் போனது. என் தந்தையைப் போல் நடந்து கொள்ளக் கூடாது எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி நடந்து கொண்டேன்." என்றான்.

இப்படித்தான் ஒரே செயல் இரு விதமான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதில் எது நல்லது என்பதை நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். நல்ல பெயர் வாங்கிக் கொள்ள வேண்டும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-18                                                                                                                                வழிமுறை-20        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு