........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-20

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

20. மகிழ்ச்சியும் கவலையும் சமமாகுமா?

ஒரு நல்ல விஷயம் நடந்து விட்டால் போதும், அதில் குதூகலித்துப் போய்விடுகிறோம். அதே சமயம் ஒரு சிறிய தவறு நடந்து கெட்ட விஷயம் ஏதாவது நடந்து விட்டால் போதும், அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறோம். மகிழ்ச்சி வந்தால் துள்ளிக் குதிப்பதும், கவலை வந்தால் முடங்கிப் போவதுமாக இருக்கிறோம். இது சரியா?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை பலரிடமும் இருப்பதில்லை. வாழ்க்கையில் நடக்கும் சிறு நல்ல சம்பவம் அவர்கள் வாழ்க்கையை அப்படியே உயர்த்தி விடுவதாகவும், சிறு கெட்ட விஷயம் அவர்கள் வாழ்க்கையை அப்படியே முடித்து விட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். சாதாரணமான விஷயங்களைப் பெரியதாக்கிக் கொள்ளாமல் இரண்டு நிலைகளையும் சமமாகவும், சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நல்ல பெயரை வாங்கிக் கொள்ள முடியும். நல்ல நிலையை அடைய முடியும்.

ஞானி ஒருவரிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர் இன்பத்தில் மகிழ்ச்சி அடைவதோ துன்பத்தில் சோர்வு அடைவதோ இல்லை.

இதுபற்றி சீடன் ஒருவன் அவரிடம், "நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சி அடைவதும் இல்லை. துன்பத்தில் சோர்வு அடைவதும் இல்லை. இரண்டையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறீர்கள். இந்தப் பண்பு உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.

"கழுதையிடமிருந்து கற்றுக் கொண்டேன்" என்றார் அவர்.

"என்ன கழுதையிடமிருந்தா?" என்று எல்லோரும் வியப்புடன் கேட்டார்கள்.

"ஆமாம். கழுதையிடமிருந்துதான். காலையிலும் மாலையிலும் இந்த வழியே செல்லும் கழுதையை நீங்கள் பார்த்தது இல்லையா?"

"பார்த்திருக்கிறோம். அதனிடமிருந்து எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?"

"காலையில் அந்தக் கழுதை அழுக்கு உடைகளைச் சுமந்து செல்லும். அழுக்கு உடைகளைச் சுமந்து செல்கிறோமே என்று அதன் முகத்தில் வருத்தம் தெரிவது இல்லை. மாலையில் சலவை செய்த துணிகளைச் சுமந்து திரும்பும். தூய்மையான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று அது மகிழ்ச்சி அடைவதும் இல்லை. இந்தக் கழுதையிடமிருந்துதான் இந்த நல்ல பண்பைக் கற்றுக் கொண்டேன்" என்றார் அவர்.

இந்தக் கழுதை எதையும் பெரியதாக எடுத்துக் கொள்ளாததற்கு மிகப்பெரிய காரணம் அது அழுக்குத் துணிகளையும், சலவை செய்த துணிகளையும் சமமாகவே கருதுகிறது.  அந்தத்துணிகளில் அழுக்குத் துணி, சலவை செய்த துணி என்கிற வேறுபாடுகளைக் கருதுவதில்லை. கழுதை அந்தத் துணிகளை அதனுடைய சுமையாகவும், கடமையாகவும் மட்டுமே கருதுகிறது.

இதுபோல் வாழ்க்கையில் நாமும் பல விஷயங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்த சுமைகளைப் பொதுவானதாகக் கருத வேண்டும். அவைகளை நல்லது கெட்டது என்று தரம் பிரித்துப் பார்ப்பதாலேயே நாம் மனமுடைந்து போகிறோம். மன அழுத்தத்திற்கு ஆளாகிப் போகிறோம். வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பம் என்று இரண்டையும் பாடங்களாய்க் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றமடையப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு நல்ல மனநிலையும் அதன் மூலம் நல்ல நிலையும் கிடைக்கும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-19                                                                                                                                வழிமுறை-21        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு