தொடர் கட்டுரை-1.
பகுதி-21

நல்ல பெயர்
வாங்கலாம்.
-தேனி.எம்.சுப்பிரமணி.
21. விபரீத ஆசைகளா? விட்டு விடுங்கள்!

ஒவ்வொருவருக்கும் விபரீதமான ஆசைகள் வந்து
அவர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்த விபரீத ஆசைகள் தவறானது என்ற போதிலும் இந்த
ஆசைகளை நிறைவேற்ற எந்தத் தவறுகளையும் செய்யத் தயாராகிவிடுகிறார்கள். இதனால்
அவர்கள் சேர்த்து வைத்த நல்ல பெயரை இழந்து அவமானப்படுகிறார்கள். இந்த அவமானங்கள்
முதலில் அச்சமாக இருந்தாலும் தொடர்ந்து வரும் போது அலட்சியமாக்கிக்
கொள்கிறார்கள். இவர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டாலும் விபரீத ஆசைகளை
மட்டும் கைவிட விரும்புவதில்லை. இந்த விபரீத ஆசைகளுக்காக எதையும் விலையாகக்
கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள். சில சமயம் இது அவர்கள் உயிரைக் கூட பறித்து
விடுகிறது.
தங்களுடைய நிலைக்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டது என்கிற எண்ணம் இருந்தாலும்
விபரீத ஆசைகள் வந்துவிட்டால் அதை அடையவே முயற்சிகள் தொடர்கிறது. இந்த நிலையில்
இருப்பவர்களிடம் யார் எந்த நல்லக் கருத்தைச் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக்
கொள்வதில்லை. இதனால் அவர்கள் குடும்பத்திலும் நட்பு வழியிலும் பலரை இழக்க
வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் விபரீத ஆசைகளை விட்டுவிடுவதில்லை.
இதைத்தான் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படக் கூடாது என்கிறார்கள். யார்
கேட்கிறார்கள்?
கடலில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அது கடலில் இருந்து சில சமயம் கரைக்கு வந்து
மணலில் விளையாடி விட்டுச் செல்லும். இதைப் பார்த்த மீன்கள், "ஆமையே உமக்குத்தான்
திறமையிருக்கிறது. கடலில் நீந்தித் திரியும் நீ கடற்கரைக்கும் சென்று
விளையாடிவிட்டு வர முடிகிறது." என்றன.
இதனால் ஆமைக்கு பெருமை பிடிபடவில்லை.
அது வானத்தைப் பார்த்தது. "வானத்தில் பறந்து செல்லும் பறவைகளைப் போல் தானும்
பறக்க வேண்டும். உயர்ந்த மரக்கிளைகளில் அமர வேண்டும். மலை உச்சிகளில் தங்க
வேண்டும்"என்று ஆசைப்பட்டது.
இந்த ஆசையை மீன்களிடம் தெரிவித்தது.
மீன்களும் "ஆமையே, உன் ஆசை நியாயமானதுதான். உன்னால் தண்ணீரில் நீந்த முடிகிறது.
தரைக்குச் சென்று நடக்க முடிகிறது. உன்னால்
வானத்திலும் பறக்க முடியும்.
அதற்கான தகுதிகள் உன்னிடம் மட்டுமே இருக்கின்றன" என்று ஆமையின் ஆசைக்குத் தூபம்
போட்டன.
ஆமைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "தன்னால் மட்டுமே முடியும்" என்று மீன்களே
சொல்லி விட்டன என்று அவ்வப்போது கரைக்கு வந்து பறக்க முயற்சி செய்து பார்த்தது.
முடியவில்லை.
இது இப்படி குதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கழுகு ஒன்று, "ஆமையே என்ன இப்படி
குதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டது.
ஆமையும் அந்த கழுகிடம் தனக்குப் பறக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும்
அதற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.
"ஆமையே இந்த ஆசை ஒரு விபரீத ஆசை! உம்மால் இயலாததற்கு நீர் ஆசைப்படுகிறீர்.
பறப்பதற்குத் தேவையான இறக்கைகள் உம்மிடம் இல்லை. பறக்கும் எண்ணத்தைக்
கைவிட்டுவிடுங்கள்" என்றது.
"என்ன கழுகாரே, மீன்கள் எல்லாம் என்னால் பறக்க முடியும் என்று சொல்கின்றன.
வானத்தில் பறக்கும் நீர் உமக்கு போட்டியாக வந்து விடுவேனோ என்றுதானே
பயப்படுகிறீர்" என்றது ஆமை.
உடனே கழுகு "அப்படியெல்லாமில்லை. உமக்கு விபரீத ஆசை வேண்டாம்" என்றுதான்
சொன்னேன்.
ஆனால் ஆமையோ மீண்டும் மீண்டும் கழுகை வற்புறுத்தியது.
"ஆமையே நான் உனக்கு எப்படி பறப்பதற்குச் சொல்லித் தரமுடியும்?" என்று கழுகு
கேட்டது.
"கழுகே, வானத்திற்கு என்னைத் தூக்கிச் சென்று அங்கிருந்து பறக்கவிடு" என்றது ஆமை.
கழுகு,"ஆமையே வேண்டாம் இந்த ஆசை" என்று சொல்லிப் பார்த்தது.
ஆமை கேட்பதாக இல்லை.
வேறு வழியில்லாத கழுகு ஆமையைத் தூக்கிக் கொண்டு சிறிது உயரம் சென்றது. "இங்கிருந்து
பறக்கக் கற்றுக் கொள்கிறாயா?" என்றது.
ஆமை,"கழுகே சிறிது உயரத்திலிருந்து பறப்பதா? அந்த மலை உச்சியின் உயரத்துக்குக்
கொண்டு போ அங்கிருந்து பறந்தால்தான் நன்றாக இருக்கும்" என்றது.
கழுகும் மலையின் உயரத்திற்கு ஆமையைத் தூக்கிச் சென்றது.
"ஆமையே இப்போது கூட ஒன்றுமில்லை. நான் உன்னை மறுபடி கீழே கொண்டு போய்
விட்டுவிடுகிறேன். விபரீத ஆசை வேண்டாம்" என்றது.
"கழுகே, நான் ஒன்றை நினைத்து விட்டால் அதை முடித்தே தீர்வேன். இப்போது என்னைக்
கீழே விடு. நான் பறக்கிறேன்" என்றது ஆமை.
கழுகு வேறு வழியின்றி ஆமையைக் கீழே விட்டது.
ஆமை பறக்க முடியாமல் கீழிருந்த பாறையில் விழுந்து செத்தது.
-இப்படித்தான் பலரும் தங்கள் நிலையை உணராமல்
இருக்கிறார்கள். இவர்கள் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்வதுடன்
விபரீத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டு
விடுகிறார்கள். இவர்களுக்கு மீனைப் போன்று சிலர் தூபம் போட்டு விட்டால் போதும்.
இந்த விபரீத ஆசைகளை வேண்டாமென்று சொன்னவர்கள் எல்லாம் எதிரிகளாக ஆக்கிக் கொண்டு
விபரீத ஆசையில் தங்களையே முடித்துக் கொண்டு
விடுகிறார்கள்.
(வழிமுறைகள் வளரும்.)
வழிமுறை-20
வழிமுறை-22
|