தொடர் கட்டுரை-1.
பகுதி-22

நல்ல பெயர்
வாங்கலாம்.
-தேனி.எம்.சுப்பிரமணி.
22. நம்முடைய தேர்வு எப்படி இருக்க வேண்டும்?

சிலருக்கு யாரை எந்த இடத்தில் வைப்பது என்பதே
தெரிவதில்லை. யாரையும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்கிற
எண்ணத்தில் செயல்படுகிறார்கள். இதற்கு விளக்கம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில்
வித்தியாசமாக இருக்கும். அவர்களின் அளவுகோல் தவறானதாகவே இருக்கிறது. அந்த
இடத்திற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டாலும் வேறு சில தகுதிகளை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்தத் தகுதிகள் அவர்களுடையதாக
இல்லாமல் அவர்கள் குடும்பத்தின் பணம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது
குடும்பத்தினரின் பதவிகள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கிறது. இதனால் உண்மையான
தகுதியுடையவர்களுக்கு அந்த இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. பின்னால்
தகுதியற்றவர்களால் அவர்கள் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தவிக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தங்களுடைய
பொறுப்புகளுக்கும் சரி, நட்புக்கும் சரி, தகுதியுடையவர்களைத் தேர்வு செய்வதில்
அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பல நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாம் தேர்வு
செய்யும் நபர் அதற்குத் தகுதியுடையவர்தானா என்பது குறித்து முழுமையான ஆய்வைச்
செய்ய வேண்டும். அவர் பணக்காரர், அவரது குடும்பத்தினர் பெரிய பதவிகளில்
இருக்கிறார்கள் என்பது போன்ற தனது தேவைக்கு அப்பாற்பட்ட நிலையிலான
தகவல்களை முதலில் ஒதுக்கி விட வேண்டும். அவர்களால் பொறுப்புகளை முழுமையாகச்
செய்ய முடியாது. பிறர் உதவியின்றி அவர்களால் சுயமாகச் செயல்பட முடியாது.
பிறரையும் செயல்பட விடாத நிலையே அவர்களிடமிருக்கும்.
ஒரு மன்னனுக்கு இருவேறு நாட்டு அரசர்களிடம் இருந்து நட்பு கோரி தூது வந்தது.
இந்த இருவரின் நட்பில் எதை ஏற்பது என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
அவருடைய பிரச்சனைக்கு முடிவு காண முனிவர் ஒருவரைச் சென்று சந்தித்தான். யார்
நட்பை ஏற்கலாம்? என்று கேட்டான்.
அந்த முனிவர், "ஒருவன் குடை, மற்றவன் செருப்பு. முடிவு செய்வது உன் பொறுப்பு."
என்று சொன்னார்.
அவரது வார்த்தையின் பொருள் தெரியாமல் மன்னன் தயங்கினான்.
அவனது தயக்கத்தைக் கண்ட முனிவர் சொன்னார்.
"குடையை நம் தலைக்கு மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். உயர்வான இடத்தில் வைக்க
வேண்டும். அது போல, உயர்த்திப் புகழ்ந்து பேசினாலும் பெரிய பொறுப்பைத் தந்தால்
மட்டுமே உதவக்கூடிய நண்பன் ஒருவன்.
மற்றவன், செருப்பு போன்றவன். அதாவ்து, செருப்பை நாம் மிதித்தாலும், எவ்வித
அசிங்கமும் நம் மேல் படாமலும், கல், முள் குத்தாமலும் காப்பாற்றும். நாம் அதனை
மதிக்க மறந்தாலும், அதன் குணம் மாறாது. அப்படிப்பட்டவன் அவன். இப்போது புரிந்ததா?"
முனிவர் சொன்னதும் குழப்பம் நீங்கி யாரோடு நட்பு கொள்ள வேண்டும் என்பது
அவனுக்குப் புரிந்தது.
நட்பு மட்டுமில்லை. எந்த பொறுப்பிற்கும் நம்முடைய தேர்வு சரியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நம் பெயரைக்
காப்பாற்றிக் கொள்ள முடியும். எந்தத் தேர்விலும் நம்முடைய தேவைக்குத்
தகுதியானவைகளை முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதில் இடையில் எந்தக்
குறுக்கீடுகளையும் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டாலே நம் தேவைகளும் நிறைவேறும்.
நல்ல பெயரும் நமக்குத் தானாக வந்து சேரும்.
(வழிமுறைகள் வளரும்.)
வழிமுறை-21
வழிமுறை-23
|