........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-23

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

23. எதையும் தூக்கி வீசி விடலாமா?

சிலர் இருக்கிறார்கள் எவரையும் கண்டு கொள்வதேயில்லை. தங்களுக்கு எவருடைய உதவியும் தேவையில்லை. தம்மால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்கிற தவறான எண்ணத்தில் மற்றவர்களைத் தூக்கியெறிந்து பேசுவதுடன் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், எந்த ஒரு செயலையும் செய்யத் தயாராகி விடுகிறார்கள். எவரையும் அணுகித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். அதே சமயம் அந்த வேலை முடிந்தவுடன் உதவியவர்களைக் கழற்றியும் விட்டு விடுகிறார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசி விடுகிறார்கள். சமயம் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் இவர்கள் குறிப்பாக தங்களுக்குப் பயன் தருவதை மட்டுமே விரும்புகிறார்கள். தற்போது இவர்களால் பயன் இல்லை என்று கருதுபவர்களைத் தூக்கி வீசி விடுகின்றனர்.  பின்னால் ஒரு சூழ்நிலையில் அவர்களுடைய சிறு உதவி தேவைப்படும் போது அவர்களை வலியத் தேடிச் செல்கின்றனர்.

அன்னை சாரதா தேவியார் எந்தப் பொருளும், எந்த விதத்திலும், அது மிகமிகச் சாதாரணமாக இருந்தாலும் கூட வீணாவதைப் பார்த்து வருத்தப்படுவார். ஒருமுறை நீண்ட தூரத்திலிருந்து ஒருவர் அன்னைக்கு ஒரு கூடைப் பழங்கள் அனுப்பி இருந்தார். பழங்களை எடுத்துக் கொண்டதும் சீடர் ஒருவர், அந்தக் கூடை எதற்கும் உதவாது என்று நினைத்து வெளியே தூக்கி எறிந்தார். அன்னை, அந்தக் கூடை நன்றாகவும், பயன்படுத்தக் கூடியதாகவும் இருப்பதைப் பார்த்தார். உடனே வெளியேயிருந்து அதைக் கொண்டு வரச்செய்து, நன்றாகக் கழுவி பிறகு தேவைப்படும் என்று வீட்டிற்குள் வைக்கச் சொன்னார்.

பின், "மகனே! உலகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் உபயோகம் இருக்கிறது. மக்களுக்கு எது பயன்படுமோ அதை ஆடு, மாடுகளுக்குப் போடாதே. ஆடு, மாடுகளுக்குப் எது பயன்படுமோ அதை நாய்க்குப் போடாதே. ஆடு,, மாடு, நாய்களுக்கு எது பயன்படுமோ அதை மண்ணில் போடாதே. அவற்றை குளங்களில் உள்ள மீனுக்குப் போடு. எந்தப் பொருளும் யாராவது ஒருவருக்கு நிச்சயம் பயன்படும். ஆதலால் எதையும் வீணாக்காதே." என்று உபதேசம் செய்தார்.

உணவுப் பொருள்களுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை நடமுறைகளுக்கும் இது பொருந்தும். வாழ்க்கையில் நாம் தேவையில்லை என்று எதைக் கருதுகிறோமோ அது பின்னால் சில சமயம் தேவையானதாக ஆகிவிடுகிறது. இதை உணராமல் நாம் இருப்பதை மாற்றிக் கொண்டு, நமக்குத் தேவையில்லை என்று எதையும் அல்லது யாரையும் ஒதுக்காமல் என்றாவது பயன்படும் என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நமக்கான நட்பு வட்டம் விரிவடையும். அவர்கள் மூலம் நமக்கு வேறு பல நல்ல செயல்கள், உதவிகள் கிடைக்கலாம். நாமும் இவ்வுலகில் நல்ல பெயர் வாங்கலாம்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-22                                                                                                                               வழிமுறை-24        

                                                                                                                                                                                                        

 
                                                                                                                                                                                                                 முகப்பு