........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-24

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

24. ஆசைப்படு... ஆனால் அளவோடு ஆசைப்படு!

சிலருக்கு, தான் மட்டும் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும். தன்னிடம் மட்டும் எல்லாம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இதனாலேயே அவருக்கு நல்ல பெயர் என்பது இல்லாமல் போய்விடுகிறது. மேலும், ஒரு விசயத்தில் வெற்றி பெற்றவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே அடுத்தடுத்து பல புதிய விசயங்களில் நுழைந்து அதிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலை வைத்து அதில் வெற்றி பெற முடியாமல் அதிலிருந்து வெளியேறவும் முடியாமல் தவிக்கும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். இந்நிலையில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என யார் சொன்னாலும், எவரையும் மதிக்காமல் செயல்படுகின்றனர்.

எந்த ஒரு செயலில் வெற்றி அடைந்தாலும் அந்த வெற்றியின் பயனை முழுமையாகப் பயன்படுத்தி அதில் தன்னிறைவு பெற வேண்டும். அதன் பிறகு மாற்றுச் செயலை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். படிப்படியாக ஒவ்வொன்றாகச் செய்யும் செயல்கள் வெற்றியை மட்டுமல்ல நல்ல அனுபவத்தையும் பெற்றுத் தருகிறது. ஆனால் எடுத்தவுடனே மேலே போய் அமர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் மனம் தாவும் போதும் அளவுக்கு அதிகமான ஆசைகளின் போதும், இருப்பதையும் இழக்க வேண்டிய நிலை தானாகவே வந்து விடுகிறது. 

ஒரு துறவி இருந்தார் அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார். "சுவாமி என்னிடம் நிறைய பணம் இருந்தும் நிம்மதி இல்லாததுக்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

துறவி பதில் சொல்லவில்லை.

குழந்தை ஒன்றை அருகே அழைத்தார். அந்தக் குழந்தையிடம் ஆப்பிள் பழத்தைக் கொடுத்தார். குழந்தை அதை வலது கையால் பெற்றுக் கொண்டது.

இன்னொரு ஆப்பிள் கொடுத்தார் இடது கையால் பெற்றுக் கொண்டது.

மூன்றாவதாக ஒரு ஆப்பிள் கொடுத்தார். முதல் இரண்டு பழங்களையும் நெஞ்சில் அணைத்தபடி மூன்றாவது பழத்தையும் வாங்குவதற்கு முயற்சி செய்தது. அதனால் ஆப்பிள் நழுவி கீழே விழுந்தது. விழுந்த பழத்தைப் பார்த்து குழந்தை அழுதது.

துறவி அந்தப் பணக்காரரிடம் கூறினார், " இந்தக் குழந்தையைப் பார்த்தாயா! இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இப்போது அது அழவேண்டிய அவசியம் வந்திருக்குமோ? அதே போன்றுதான், போதும் என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்சனை வராது. நிம்மதி கிடைக்கும்".

ஆசைதான் வெற்றிக்கு வழிகாட்டுகிறது. ஆனால் அந்த ஆசை அளவோடும் திட்டமிட்ட செயலோடும் இருக்க வேண்டும். இல்லா விட்டால் நமக்கு நல்ல பெயர் மட்டுமில்லை... நிம்மதியான வாழ்க்கைக்கும் வழியில்லை.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-23                                                                                                                              வழிமுறை-25        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு