........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-26

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

26. பெருமை பேசுபவர்களைக் கண்டால்...?

சிலர் இருக்கிறார்கள், மற்றவர்களை மட்டமாக நினைத்துக் கொள்வதுடன் எதையாவது சொல்லி வெறுப்பேத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களை எல்லாம் தாழ்ந்தவர்களாகவும் நினைத்து எதையாவது பேசுவார்கள்.  இவர்களிடம் நாம் எதைப் பேசினாலும் நமக்குத்தான் கெட்ட பெயர் வந்து சேரும். இவர்களைக் கண்டு நாம் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. 

ஒன்றுக்கும் உதவாத விஷயத்தையெல்லாம் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்ளும் இவர்கள் மற்றவர்கள் செய்த பயனுள்ள விஷயத்தைக் கூட ஏளனமாக நினைத்துச் சிரிப்பதுடன் அதில் ஆயிரம் குறைகள் இருப்பதாகப் புதிய விளக்கம் கண்டுபிடிப்பார்கள். மேலும் இவர்களால் பயனுள்ள எதையும் செய்ய முடியாது. இவர்களைப் போன்று இருவர் சேர்ந்து விட்டால் போதும் அங்கிருக்கும் மற்றவர்கள் பாடு திண்டாட்டம்தான். வலியச் சென்று வம்பிழுப்பார்கள். ஒதுங்கிப் போனாலும் விட மாட்டார்கள். வலிமையுடையவர் எவரிடமாவது இவர்கள் மாட்டிக் கொண்டு அவமானப்பட்டாலும் அதை அப்போதே மறந்து விடுவார்கள். இவர்களிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டுமே தவிர தர்க்கம் செய்து தாழ்ந்து போகக் கூடாது.

ஒரு சமயம் சர்தார் வல்லபாய் படேல் ஒரு பிரெஞ்சுக்காரனையும், ஒரு ஆங்கிலேயனையும் சந்திக்க நேர்ந்தது.

அவர்கள் இருவரும் வல்லபாய் படேல் ஒரு இந்தியர் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

பிறகு அவர்கள் தங்கள் நாட்டு பெருமைகளாகப் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

அவர்களின் பேச்சைக் கேட்ட படேல் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். இதனால் வெட்கப்பட்ட அவர்கள் வேறு மாதிரியாகப் பேசத் துவங்கினர்.

பிரெஞ்சுக்காரன், "நான் மட்டும் பிரெஞ்சுக்காரனாக பிறந்திருக்கா விட்டால் நிச்சயம் ஒரு ஆங்கிலேயனாகத்தான் பிறந்திர்ப்பேன்" என்றான்.

ஆங்கிலேயன், "நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்கா விட்டால் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்" என்றான்.

அப்போதும் பேசாமலிருந்த படேலைப் பார்த்து எரிச்சலடைந்த பிரெஞ்சுக்காரன், " நாங்கள் இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே!" என்றான்

"நான் பேசாமலிருப்பது நல்லது என்றிருந்தேன். பேசத்தானே வேண்டும், பேசுகிறேன். ஒருவேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்கா விட்டால் அதற்காக வெட்கித் தலை குனிந்திருப்பேன்" என்று கூறி அவர்களின் வாயை அடைத்தார்.

இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் வாயை அடைக்க முயற்சிக்கலாம். இல்லாத போது நாம் வாயை மூடிக் கொண்டிருப்பதே நமக்கு நல்லது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் பெருமை பேசுபவர்களைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது. .

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-25                                                                                                                                          வழிமுறை-27

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு