........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-28 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
28. வெளிவேஷம் போடுவது அவசியம்!
பல ஆண்டுகள் ஒருவருடன் பழகினாலே அவரைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் போது, ஒரு ஆளைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி முழுமையாகச் சொல்லி விடுவேன் என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். இவையெல்லாம் சாத்தியமா? ஒருவர் முகத்தைப் பார்த்தவுடன் அவருடைய குணத்தையும், அவருடைய செயல்பாட்டையும் எப்படி கணிக்க முடியும்? இருந்தாலும் சில இடங்களில் முகத்தை வைத்துத்தான் பெரிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதும் உண்மை. இந்த இடங்களில் சிகப்பு நிறமுடைய பலர் நன்மை அடைகிறார்கள். கறுப்பு நிறமுடைய பலர் ஒதுக்கப்படுகிறார்கள். முகவாட்டமுடையவர்கள் மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவலட்சணமான முகமுடையவர்கள் அவமானப்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய திறமைகள் அனைத்தும் தூக்கி வீசப்படுகின்றன. இந்த இடங்களில் திறமையை விட அவர்களது முகத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் நல்ல பெயர் வாங்குவதற்கு நம்முடைய முகத்தையும் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளுக்குள் எதிர்நிலையில் இருந்தாலும் வெளிப்பார்வைக்கு வேஷம் போடும் அவசியம் ஏற்படுகிறது. திறமை இருக்கிறதோ இல்லையோ இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. வெளித்தோற்றமே இன்று ஒருவருடைய திறனைக் காட்டும் காரணியாக நம்பப்படுகிறது. இதில் சிறிது கூட உண்மையில்லை என்றாலும் அதை உணர்ந்து கொள்ள யாரும் தயாராய் இல்லை. தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த போது சாதாரணக் குழந்தை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தார். இவரின் தலை, உடல் அமைப்பு வேறுபட்ட காரணத்தினால் டாக்டர்கள் இவரைப் பரிசோதித்து விட்டு, "எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு வினோதமாக அமைந்திருக்கிறது. எனவே இவர் வளர்ந்து விரைவில் பைத்தியமாகப் போய் விடுவார்" என்று கூறினர். அவருடைய தாய் அவரைப் பள்ளியில் சேர்க்க அழைத்துக் கொண்டு போன போது ஆசிரியர் அவரின் தோற்றத்தைப் பார்த்து, "மனிதத் தோற்றத்திலிருந்து மாறுபட்டிருக்கும் இவரைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாது" என்று திருப்பி அனுப்பி விட்டார். இதனால் சோர்ந்து போகாத அவருடைய தாய் எப்படியும் தன் மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று அவரே பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். எடிசனும் விடாமுயற்சியுடன் தினமும் பாடங்களைக் கற்று தன் கடின உழைப்பின் மூலம் உயர்வைப் பெற்றார். "மனிதன் கடன்பட்டிருப்பது மூளைக்கல்ல... முயற்சிக்கவே! கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார். மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை எனும் அற்புத உண்மையை எடிசன் பிற்காலத்தில் உறுதிப்படுத்தினார். இவ்வுலகிற்குத் தேவையான பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். உலகின் மிகப்பெரும் விஞ்ஞானியாக இவர் சுமார் 1440 வகையான உயர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தன் ஆய்வு மூலம் கண்டறிந்து இவ்வுலகத்திற்கு வழங்கியிருக்கிறார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற தமிழ்ப் பழமொழிக்கேற்ப எடிசனின் தாய் அவரைப் படிக்க வைத்திருந்தாலும் எடிசனின் விடாமுயற்சி அவரை உயர்த்தியது. இது அவரது சுயமான முயற்சி என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறரின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் வெளிப்படையாக இல்லாமல் வெளிவேஷம் போட்டு நம்மையும் நம் பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமே. (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |