........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-29

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

29. சறுக்கல்கள் வாழ்க்கையின் எச்சரிக்கைகள்

சாதாரணமாக சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் நாம் மனமுடைந்து போகிறோம். பிறர் ஏதாவது சொல்லி விட்டால் போதும், அந்த விஷயத்தில் அவர் சொன்னதை நினைத்து நினைத்து வருத்தம் அடைகிறோம். இத்துடன் நின்று விடுவதில்லை நம்மை நாமேக் குறைவாக எடை போட்டுக் கொண்டு தாழ்ந்து போய் விடுகிறோம். உண்மையில் நம்முடைய செயல் தவறாகவேப் போய் விட்டாலும் அதற்காக மனமுடைவதை விட அதில் மாற்றமடைவதுடன் வெற்றியைப் பெற்று நல்ல பெயரைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.

தவறு என்பது எல்லோர் வாழ்க்கையிலும் சாதாரணமாக வந்து விடக்கூடிய ஒன்றுதான். இந்தத் தவறைச் சரியாக்கி அதில் நாம் சிறப்பாக வந்து விட வேண்டும் என்கிற முயற்சி எல்லோரிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை தவறுகள் தவிர்க்கப்படுவதுடன் நம்முடைய நோக்கமும் சரியான பாதையை நோக்கிப் பயணிக்கும். இது தெரியாமல்தான் பலரும் சிறு சிறு தவறுகளில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ளாமல் அடுத்தடுத்து பல புதிய தவறுகளில் சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். நாம் எதையும் பாடமாக வைத்துக் கொண்டு முன்னால் செல்ல வேண்டுமே தவிர பயமாகக் கொண்டு அத்தோடு நின்று விடக்கூடாது.

கணிதமேதை ராமானுஜம் சொந்த ஊர் கும்பகோணம். இவர் பள்ளிப் பருவத்தில் விடுமுறையில் தன் உறவினரைப் பார்க்க சென்னைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு உறவினர் வீட்டுக்குச் செல்ல நகரப் பேருந்து ஒன்றில் போக வேண்டிய இடத்தைக் கூறி நடத்துனரிடம் பணத்தைக் கொடுத்துப் பயணச்சீட்டைப் பெற்றார். நடத்துனர் பயணச்சீட்டுக்கான தொகை போக மீதிச் சில்லரையையும் அவரிடம் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட ராமானுஜம் அதை வாங்கிப் பல முறை எண்ணிப் பார்த்தும் அதில் அவர் திருப்தி அடையவில்லை.

ராமானுஜம் நடத்துனரிடம் அதைத் திருப்பிக் கொடுத்து, "பாக்கி குறைகிறது" என்றார்.

நடத்துனர் அதை வாங்கி மீண்டும் எண்ணிப் பார்க்க சில்லரை சரியாக இருந்திருக்கிறது.

கோபமடைந்த நடத்துனர், "சில்லரை சரியாகத்தானே இருக்கிறது. கணக்குத் தெரியாத நீயெல்லாம் ஏன் என் உயிரை வாங்குறே" என்று சொல்லித் திட்டியிருக்கிறார்.

நடத்துனரின் "கணக்குத் தெரியாத நீ" என்கிற வாசகம் ராமானுஜரின் உள்ளத்தை மிகவும் பாதித்து விட்டது.

அன்றிலிருந்து மற்ற பாடங்களை விட கணக்குப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் தனி ஈடுபாடு கொண்டார். பின் உலகமே பாராட்டும் கணித மேதையாக உயர்ந்தார்.

எந்த சிறு சறுக்கலும் நம்மைப் பலமாகக் காயப்படுத்தி விடுவதில்லை. சறுக்கல்கள் வாழ்க்கையின் எச்சரிக்கைகள்தான். அவை நமக்கு அடுத்து எந்த சிக்கலுமில்லாமல் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க உதவுகின்றன. மேலும் நாம் உச்சத்தைத் தொடவும் வழிகாட்டுகின்றன.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-28                                                                                                                         வழிமுறை-30    

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு