........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-30

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

30. வீண் பேச்சு அவசியம்தானா?

சிலர் வீணாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படி பேசுவது அவர்களுக்குப் பொழுது போக்காய் இருந்தாலும் அவர்கள் பேச்சு அடுத்தவர்களிடம் கெட்ட பெயரையே வாங்கித் தருகிறது. இப்படி வீணாகப் பேசும் சிலர் ஒன்று சேர்ந்து விட்டால் அங்கு வாக்குவாதங்கள் அதிகமாவதுடன் அதனால் தேவையற்ற சண்டையும், அதன் மூலம் பிரிவினைகளும் கூட ஏற்பட்டுப் போய்விடுகிறது. அந்த அளவிற்கு இந்த வீண் பேச்சுக்களால் பல ஆபத்துக்கள் வருகின்றன. இருந்தாலும் பலர் தங்கள் வீண் பேச்சுக்களை விட்டுவிடத் தயாரில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

தன் பேச்சு அடுத்தவருக்கு நன்மை செய்வதாய் இருக்க வேண்டும் அல்லது அடுத்தவருக்கு எவ்விதமான இடையுறுகளையும் ஏற்படுத்தாததாகவாவது இருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் வீண்பேச்சு பேசும் சிலர் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. தன்னை அந்த இடத்தில் பெரியவராகக் காட்டிக் கொள்ள இவர்கள் தங்கள் பேச்சையே பெரிதாக்குகிறார்கள். இந்த வீண் பேச்சால் அவர்கள் பெயர் மேலும் கெட்டுப் போகிறதே என்று அறியாமல் தவறு செய்கிறார்கள். இந்தத் தவறுகள் எத்தனையோ நபர்களிடம் இருக்கிறது.

கடவுளைத் தியானிப்பது பற்றி ஒரு மரத்தடியில் கூடிய சில முனிவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். "கடவுளிடம் எதைக் கேட்பது?" ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

"உணவு கேட்கலாம்" என்றார் ஒருவர்.

"இல்லை, உடல் வலு கேட்கலாம். உடல் ஆரோக்கியமின்றி உணவு உண்டாகாது?" என்றார் இரண்டாமவர்.

"வலிமையை விட, அறிவை வேண்டுவதே நல்லது." என்றார் மூன்றாமவர்.

"அதைவிடச் சிறந்தது. அமைதியை வேண்டுவதுதான்' என்றார் இன்னொருவர்.

"எல்லாவற்றையும் விட அன்பை வேண்டுவதுதான் சிறப்பு" என்றார் அடுத்தவர்.

"என் கருத்து என்னவென்றால், அன்பைக் காட்டிலும் தியாகத்தை வேண்டுவதே நல்லது. தியாக உணர்வுதான் எல்லா நலன்களுக்கும் அடிப்படை" என்றார் ஆறாமவர்.

இந்த வாக்குவாதம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மரம், கனிவுடன்  "வீண் பேச்சில் ஏன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்? முதலில் பிரார்த்தனை செய்யுங்கள்... எதை வேண்டுமானாலும் கேளுங்கள்... கேட்பதை விட அதிகமாகக் கொடுப்பதுதான் இறையருள்" என்று சொன்னது.

வீண் பேச்சுக்களால் எந்தப் பயனுமில்லை என்றாலும் அந்தப் பேச்சுக்களில்தான் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தப் பேச்சுக்குச் செலவிடும் காலத்தில் பயன் தரும் ஏதாவது ஒன்றைச் செய்தால் வீண் பிரச்சனைகளைத் தவிர்ப்பதுடன் பயனும் கிடைக்கும். நல்ல பெயரும் கிடைக்கும். 

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-29                                                                                                                         வழிமுறை-31

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு