........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-31

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

31. இருந்தும் இல்லை என்பதா?

தனக்குத் தேவையான அனைத்தும் இருந்த போதிலும் சிலர், தன்னிடம் குறிப்பிட்ட ஏதாவது ஒன்று இல்லை என்று நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் குறைகள் எதுவுமில்லை என்றாலும் எதையாவது குறைகளாக நினைத்துப் புலம்பிக் கொண்டிருப்பார்கள். இவர்களது இந்தக் குறைபாடு மற்றவர்களிடம் அவப்பெயரையேப் பெற்றுத் தருகிறது.  வாழ்க்கையில் இவர்கள் இருப்பதைக் கொண்டு வாழாமல் அதிலுள்ள குறைகளை மட்டும் நினைத்து வேதனைப்படுகிறார்கள். அதன் மூலம் நிம்மதியின்றி வாழ்விலும் திருப்தியின்றி அவதிப்படுகிறார்கள். 

குறைகள் யாருக்குத்தான் இல்லை. அந்தக் குறைகளை மறைத்து அல்லது மறந்து, நம் வாழ்வின் நிறைகளை நினைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கையின் முக்கியத் தேவைகளில் ஒன்று நிம்மதி. இந்த நிம்மதியில்லாமல்தான் சிலர் தவிக்கிறார்கள். இதற்கு இருப்பது போதும் என்கிற மனம் இருக்க வேண்டும். இது ஒன்று மட்டும் இருந்து விட்டால் போதும், மனம் மகிழ்ச்சிக்குப் போகாவிட்டாலும்  அமைதியில் இருக்கும். இந்த அமைதியே நிம்மதியைத் தந்துவிடும்.

ஒரு சமயம் மிகுந்த துக்கத்தோடு நாரதர், கண்ணனை சந்திக்கச் சென்றார். "பேரானந்தத்தில் இருக்கும் என்னருகில் நீயும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். ஆனால், துக்கப்படுகிறாயே... உன் துயரத்தை நீக்க ரிஷிகேசம் போய் வா..." என்றார் கண்ணன்.

போகும் வழியில் கங்கையில் அவர் நீராடிய போது, ஒரு மீன் மேலே துள்ளி வந்து, "நாரதரே, நலமா? என்றது.

பதிலுக்கு "நீ நலமா?" என்றார் நாரதர்.

"நாரதரே, எனக்கு இங்கு தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் துன்புறுகிறேன்" என்றது மீன்.

"தண்ணீரிலேயே இருந்து கொண்டு தாகத்திற்குத் துன்புறுகிறாயா? என்ன இது வினோதமாக உள்ளதே!" என்றார் நாரதர்.

பேரானந்தராகிய கண்ணனின் அருகிலே இருந்து கொண்டு எப்போதும் துக்கப்படுவதை விட, இது ஒன்றும் வியப்பில்லையே?" என்றது மீன்.

நாரதர் தன் தவறை உணர்ந்தார்.

மீன் உருமாறி, கண்ணன் காட்சி தந்தார்.

இப்படித்தான் எல்லோரும் தன்னிடம் இருந்தும், அதைத் தேவையாக நினைத்து மனமுடைந்து போகிறார்கள். இவர்கள் முதலில் தன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டு விட்டால் நிம்மதியும் அதன் மூலம் மகிழ்ச்சியையும் பெற்று விடலாம். மகிழ்ச்சி என்று வந்து விட்டாலே நமக்கு நல்ல பெயர் தானாக வந்து விடும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-30                                                                                                                        வழிமுறை-32

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு