........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-32 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
32. தற்பெருமையிலிருந்து தப்பிக்கலாம்.
தன்னுடைய சிறு செயல்பாட்டைக் கூட பெரிதாகப் பேசிக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய ஒவ்வொரு சிறு செயலையும் விரிவுபடுத்திச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் இல்லாவிட்டாலும் அந்தச் செயலை வேறு யாராவது, வேறு வழியில் செய்திருப்பார்கள். ஆனால், இவர்கள் யாரிடம் பேசினாலும் அந்த சிறு செயலைப் பற்றியே சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் இவர்களைப் பார்க்கும் பலரும் பயந்து ஓட வேண்டியிருக்கும். சின்ன செயலைக் கூடப் பெரியதாக்கிச் சொல்லிக் கொண்டே இருந்தால், இவர்கள் எப்படி நல்ல பெயர் வாங்குவது? தங்களுடைய பெருமையை தானே சொல்லிக் கொள்ளும் தவறான தற்பெருமையின் பிடிக்குள் ஆட்படும் இவர்கள் இதிலிருந்து மீள முயற்சிக்க வேண்டும். தங்களைப் பற்றி தானே சொல்லிக் கொள்வதை விட பிறரைப் பெருமையாய்ச் சொல்ல வைக்க வேண்டும். நம்முடைய செயல்பாடு மட்டுமல்ல, அவை குறித்த நம் பேச்சும் உயர்வாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்குக் கிடைத்த பாராட்டுகளை தக்க வைத்துக் கொள்வதுடன், அவமானப்படாமல் நம்மைக் காத்துக் கொள்ளவும் முடியும். ஒரு ஆசிரமத்தில் சீடர்களுடன் குரு ஒருவர் வசித்து வந்தார். ஒருநாள் குருவும், சீடர்களும் ஒரு குளத்தின் கரை மீது நடந்து சென்று கொண்டிருந்த போது, குரு கால் தவறி குளத்தில் விழ இருந்தார். உடனே பக்கத்தில் இருந்த சீடர்களில் ஒருவன் குருவின் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினான். குருவும் மற்ற சீடர்களும் பாராட்டினார்கள். குருவைக் காப்பாற்றிய சீடனுக்குத் தற்பெருமை வந்தது. ஆசிரமத்திற்கு வருபவர்களிடமெல்லாம் குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால் குரு இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்று பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தான். இந்தச் செய்தி குருவிற்கு எட்டியது. மறுநாள் குரு, சீடர்களை அழைத்துக் கொண்டு அதே குளத்தங்கரைக்குச் சென்று, குறிப்பிட்ட இடம் வந்ததும் தன்னை முன்பு காப்பாற்றிய சீடனை அழைத்து, "என்னைக் குளத்தில் தள்ளி விடு" என்றார். குருவின் வார்த்தைப்படி, குருவைக் குளத்திற்குள் தள்ளி விட்டான். குளத்திற்குள் விழுந்த குரு மறு நிமிடமே நீந்தத் தொடங்கி மூன்று முறை குளத்தில் நீச்சலடித்து விட்டு , கரையேறி அந்தச் சீடனைப் பார்த்து, "என்னை இப்போது நீதான் காப்பாற்றினாயா?" என்றார். சீடன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான். குரு சொன்னார், "ஒவ்வொருவருக்கும் பிறருக்கு உதவக்கூடிய வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அதையே எப்போதும் சொல்லி பெருமை அடித்துக் கொள்ளக் கூடாது." என்றார். சீடன் தன் தவறை உணர்ந்தான். சீடனைப் போல் தங்களுடைய தவறுகளை உணர்ந்து தங்கள் தற்பெருமைகளை விட்டு நற்காரியங்களைத் தொடர்ந்து செய்யத் துவங்கினால் நமக்குத் தெரியாமலே நல்ல பெயர் நமக்கு வந்து சேரும். (வழிமுறைகள் வளரும்.)
![]()
|
முகப்பு |