........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-33

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

33. உண்மை அறியாமல் ஓடக் கூடாது.

சிலர் ஒன்றைப் பற்றி மேலோட்டமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தானும் அதைப் போல் செய்து விட வேண்டும் என்று எதையாவது செய்கிறார்கள். பின்னர் அதில் விழுந்தும் விடுகிறார்கள். அதன் பின்பு அதிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். தான் விழுந்ததற்கான காரணத்தை அறியாமல் அந்தச் செயலைத் தன்னால் செய்ய முடியாது என்று முடிவுக்கு வந்து அதை அப்படியே விட்டுவிட்டு ஓடியும் விடுகிறார்கள்.

இவர்கள் இப்படி செய்வதால், தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலிலும் வெற்றியைப் பெற முடியாமல், எந்தச் செயலையும் செய்ய முடியாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்ததை அடைய முடியாமல், இருப்பதைக் கொண்டு வாழப் பழகி விடுகிறார்கள். பின்னால் தன்னுடைய தோல்விக்கான காரணம் தெரிய வரும் போது இந்த சிறிய விபரம் அன்றே தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுகிறார்கள். இவர்கள் வெற்றியைத் தொட முடியாததால் நல்ல பெயரையும் பெற முடியாமல் போய் விடுகிறது.

ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி சேர்ந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தது.

அந்த ஆசிரமத் துறவிகள் இரண்டு பேர் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். புதிதாகச் சேர்ந்த துறவியும் அவர்களுடன் சென்றார்.

அந்த ஆற்றங்கரையில் தியானச் செய்யலாம் என்று அமர்ந்தார்கள்.

அவர்களில் ஒருவர், "இங்கு ஈரமாக உள்ளது. நான் அக்கரைக்குச் சென்று அங்கு கிடக்கும் பனை ஓலையை எடுத்து வருகிறேன் என்று புறப்பட்டார்.

தண்ணீரின் மேல் நடந்து ஆற்றின் அக்கரைக்குச் சென்றார்.

இரண்டாம் துறவி நானும் அந்தக் கரைக்குப் போய் அங்கேயே தியானம் செய்கிறேன் என்று சொல்லியபடி அவரும் தண்ணீரின் மேல் நடந்து அக்கரைக்குச் சென்றார்.

மூன்றாவது துறவி அவர்கள் இருவரும் தண்ணீரில் நடந்து சென்றதைப் பார்த்து தானும் தண்ணீரில் நடக்க முடியும் என்று நம்பி அடியெடுத்து வைத்தார். தண்ணீரில் விழுந்தார்.

மற்ற துறவிகள் செய்ய முடிந்ததைத் தன்னால் செய்ய முடியவில்லையே. இனியும் துறவியாக இருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

ஊர் திரும்பிய அவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டார். அவருக்குத் திருமணம் நடந்தது. குழந்தைகளும் பிறந்தது.

ஒரு முறை தன் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் சென்ற அவர் தான் துறவியாக இருந்த போது தியானம் செய்த இடத்தைக் குடும்பத்துடன் சென்று அடைந்தார்.

தன் மகனைப் பார்த்து அவர், "இங்குள்ள துறவிகள் தண்ணீரில் நடக்கும் ஆற்றல் பெற்றவர்கள்." என்றார்.

அப்பொழுது ஒரு துறவி தண்ணீரில் நடந்து அவர்கள் அருகே வந்தார்.

"மகனே! நான் சொன்னது உண்மை என்று இப்பொழுது தெரிகிறதா?" என்று கேட்டார்.

வியப்புடன் அந்தத் துறவியைப் பார்த்த அவர் மகன், "எப்படி உங்களால் ஆற்றில் நடந்து வர முடிந்தது?" என்று கேட்டான்.

"இங்கு எங்கு கால் வைக்கிறோம் என்று தெரிந்தால் நீயும் ஆற்றில் நடக்கலாம். இந்த ஆற்றின் நீர் மட்டத்திற்குக் கீழே குறுகிய பாலம் ஒன்று இருக்கிறது." என்றார் அந்தத் துறவி.

- எந்த ஒரு செயலிலும் தோல்வி ஏற்பட்டால், பிறருக்கு வெற்றியாகும் சில செயல்கள் தனக்கு மட்டும் தோல்வியாவது ஏன்? என்று வெற்றியடைந்தவர்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். அவர்களிடம் உண்மையைத் தெரிந்து வெற்றியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். தானாக முடிவு செய்து ஒதுங்கிப் போய் விட்டுப் பின்னால் வருத்தப்படுவதை விட முன்பே சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பெயரும், நல்ல நிலையும் நாம் அடைவது நிச்சயம்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-32                                                                                                                    வழிமுறை-34

                                                                                                                                                                                                                        

 
                                                                                                                                                                                                                 முகப்பு