........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-35

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

35. எவரையும் அடிக்கடி சந்திக்கலாமா?

நட்பாயிருந்தாலும் சரி, உறவாயிருந்தாலும் சரி, அவர்களிடம் சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்பதே சரி. எவரிடமும் அடிக்கடி ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால் தேவையற்ற பகையும் கெட்ட பெயரும்தான் வந்து சேரும். ஒருவரை அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தால் அவருடனான நெருக்கம் அதிகரித்தாலும், அவரைப் பற்றி தாழ்வான எண்ணம் நம்மிடையே வளர்ந்து விடுகிறது. இதனால் சில சமயம் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதுடன் அவருக்கிடையிலான நட்போ அல்லது உறவோ முறிந்து போய் விடுகிறது. இதனால் இருவருக்கிடையிலான பகையும் தொடர்கிறது. இது தேவைதானா? என்பதை சிந்திக்க வேண்டும்.

அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்களிடையே முதலில் ஒளிவு மறைவில்லாத பேச்சுக்கள் இருக்கும். அதைத் தொடர்ந்து இருவருக்குமான குறைபாடுகள் வெளிச்சமாகி விடுகின்றன. ஒருவரின் குறை மற்றவருக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகள் தோன்றுகின்றன. அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் மோதல்கள் உருவாகி பிரிவும் ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பிரிவு வராமல் தடுக்க எவ்வளவு நெருக்கமாயிருக்கிறோம் என்பதை விட எவ்வளவு இடைவெளியுடன் இருக்கிறோமோ அவ்வளவு நல்ல பெயரைப் பெறுவதுடன் அனைவருடனும் ஒற்றுமையாகவும் இருக்கலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் மீது பேரன்பு வைத்திருந்த இளைஞன் ஒருவன் நபிகள் நாயகத்தைத் தினமும் சந்தித்து வந்தான். அவர் பேசுவதை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவனை அழைத்த நாயகம், “நம் அன்பு மேலும் மேலும் வளர வேண்டுமென்று நினைக்கிறேன். அதனால் நீ நாள்தோறும் இங்கு வருவதை நிறுத்திக் கொள். சில நாட்கள் இடைவெளி விட்டு என்னை வந்து பார்” என்றார்..

அவனும் சரி என்றபடி சென்று விட்டான்.

அங்கிருந்த நாயகம் அவர்களின் நண்பர் ஒருவர், “இறை தூதரே! உங்களிடம் அந்த இளைஞன் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான். தினமும் இங்கு வந்து உங்களை வணங்குகிறான். அவனிடம் சில நாட்களுக்கு ஒருமுறை இங்கு வா என்று சொல்லி அனுப்பி இருக்கிறீர்களே? அவன் மனம் வருத்தப்படாதா?” என்று கேட்டார்.

அதற்கு நாயகம் அவர்கள், “ நண்பரே! கதிரவனைப் போன்று பெருமையானதும் உலகத்திற்கு நன்மை செய்வதுமான பொருள் வேறு உண்டா? ஆனாலும் யாராவது கதிரவனைப் புகழ்ந்து பேசி கேட்டிருக்கிறீர்களா? இதற்குக் காரணம் என்ன? தினமும் வருவதுதான்.

மழைக் காலத்தில் கதிரவனை மேகம் மறைத்து விடுகிறது. சில நாட்கள் தெரிவதே இல்லை. அப்பொழுது மக்கள் கதிரவன் தோன்ற மாட்டானா? என்று ஆர்வத்துடன் வானத்தைப் பார்க்கிறார்கள்.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் அடிக்கடி தோன்றினால் மதிப்பு இழந்து விடுகிறது.” என்று விளக்கமளித்தார்.

- அடிக்கடி நடைபெறும் எந்த ஒரு செயலும் பெரியதாகத் தெரிவதில்லை. தொடர்ந்து உதவி செய்தவரை விட, என்றோ ஒரு நாள் உதவி செய்த ஒருவர்தான் பெரியவராகத் தோன்றுகிறார். வாழ்க்கையில் அன்றாடம் உதவிய உறவினர், நண்பர்களை விட புதியதாய் ஒருவர் செய்த உதவி மட்டுமே பெரிதாகத் தோன்றும். இதனால் ஏற்கனவே உள்ள உறவையும் நட்பையும் இழக்க வேண்டி வரும். இது போன்ற நிலைகளைத் தவிர்க்க எவரையும் அடிக்கடி சந்திப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-35                                                                                                                               வழிமுறை-36            

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு