........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-36

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

36. நம்மை அடுத்தவருடன் ஒப்பிடலாமா?

சிலர் இருக்கிறார்கள். தனக்குத் தொடர்பில்லாத ஒருவருடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். பிறகு அவர்களைப் போல் தம்மால் வரமுடியவில்லையே என்று வருத்தமும் அடைகிறார்கள். இதனால் அவர்கள் மனம் பாதிப்படைவதுடன் அதற்காகப் பல தவறுகளைச் செய்யவும் துணிந்து விடுகிறார்கள். ஒப்பீடு என்பது நம்மோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஒப்பீடு நம்முடைய வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஒப்பீடு பயனுடையதாக அமையும். இதைத் தவிர்த்து தேவையற்ற ஒப்பீடு செய்வதால் நமக்குள் தாழ்வு மனப்பான்மை தோன்றுவதுடன் நம்மை பலவீனமாக்கி, பிறரிடமிருந்து பிரித்து விடுவதுடன் நல்ல பெயரையும் இழக்கச் செய்து விடுகிறது.

ஒரு நாட்டில் துறவி ஒருவர் இருந்தார். அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் சென்றனர். துறவிக்குக் கிடைத்த மரியாதையைக் கண்டு அந்நாட்டுப் படைத்தலைவருக்குப் பொறுக்கவில்லை.

ஒரு நாள் மாலை நேரம் துறவியைச் சந்தித்த அவர் தன் உள்ளக் குமுறலை அவரிடம் தெரிவித்தார்.

“நாட்டு மக்கள் தங்களுக்கு அதிக அளவு மதிப்பு தருகிறார்கள். படைத் தலைவரான எனக்கு மதிப்பளிக்க மாட்டேன் என்கிறார்கள். இது சரியா?” என்று கேட்டார்.

புன்னகைத்த துறவி அவரை அருகிலுள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ரோஜா உட்பட பல வகையான பூக்கள் பூத்துக் கிடந்தன. வானத்தில் முழு நிலா ஒன்றும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

“அன்பரே! இந்த ரோசாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போல் தன்னால் ஒளி வீச முடியவில்லை என்று வருந்தியது உண்டா? அல்லது அந்த நிலாதான் இந்தப் பூவைப் போல இனிய மணம் தனக்கு இல்லையே என்று வருந்தியது உண்டா?” என்றார்.

படைத்தலைவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.

“அடுத்தவருடன் ஒப்பிட்டு நம் மகிழ்ச்சியை நாம் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?” என்றார்.

கண் கலங்கிய படைத்தலைவர், “துறவியாரே! என்னை மன்னியுங்கள். என் அறிவுக் கண்கள் திறந்து விட்டன.” என்று விடை பெற்றுச் சென்றார்.

- படைத்தலைவரைப் போல் நேரடியாக கேட்டு விட்டால் நமக்கு வரும் கெட்ட பெயர் தவிர்க்கப்பட்டு விடும். ஒப்பீட்டு உண்மையும் தெரிய வரும். இதைத் தவிர்த்து பலர் முடியாத ஒன்றுக்கும், புரியாத ஒன்றுக்கும் ஆசைப்பட்டு அல்லல் படுகிறார்கள். அவர்களுக்குள்ள பெயரையும் இழந்து தவிக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பெயருக்கு முயற்சிக்க வேண்டும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-35                                                                                                                               வழிமுறை-37                                                                                                       

 
                                                                                                                                                                                                                 முகப்பு