........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-37

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

37. ஒதுங்கிப் போவது நல்லது!

நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தாலும் நம்மை வம்புக்கிழுக்கும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன் வைத்து நம்மை ஏதோ வீரமான போட்டிக்கு அழைப்பதைப் போல் அழைப்பார்கள். ம்மை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவர்கள் நம்மை அழைத்து நாம் போகாமலிருந்தால் நமக்கு ஏதோ அவமானம் வந்து விடப் போகிறதாக எண்ணி முன்னே சென்று விட்டால் உண்மையிலேயே அவமானமடைய வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் ஒதுங்கிக் கொள்வதே நமக்கு சிறப்பு.

கோயில் யானை ஒன்று நன்றாகக் குளித்து விட்டு நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வந்து கொண்டிருந்தது.

அகலம் குறைவான பாதை ஒன்றின் அருகே வரும் போது எதிரில் சேற்றில் புரண்டு வந்த பன்றி ஒன்று வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை அந்தப் பன்றிக்கு ஒதுங்கி நின்று வழி விட்டது.

இதைக் கண்ட அந்தப் பன்றி மற்றொரு பன்றியிடம், “அந்தப் பெரிய யானையே என்னைக் கண்டு பயந்து விட்டது” என்றது கர்வமாக.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மற்றொரு யானை கோயில் யானையிடம், “பன்றியைப் பார்த்து நீ பயந்து விட்டாயாமே?” என்று விசாரித்தது.

அதற்கு கோயில் யானை, “ நண்பா நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றி மேலுள்ள சேறு என் மேல் பட்டுவிடக் கூடாதே என்பதற்காக அப்போது ஒதுங்கி நின்றென். நான் மிதித்தால் அது நசுங்கிப் போய்விடும். ஆனால் என் கால் சேறாகி விடுமே” என்றது.

- இப்படி பன்றியைப் போல் கறை படிந்த சிலர் நம்மைப் பற்றித் தவறாக செய்தியைப் பரப்பலாம். அதற்காக அவர்களிடம் சண்டைக்குப் போய் நம்மைக் கறைப்படுத்திக் கொள்வதை விட அவர்களைக் கண்டு ஒதுங்கிப் போய் விடுவது நல்லது. சிலர் ஒதுங்கினாலும் நம்மை விடாமல் தொடர்ந்து துரத்தி வருவார்கள். இவர்களிடம் தேவையில்லாமல் பேசி நம்மைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நம் தமிழ்ப் பழமொழியான “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பதை மனதில் கொண்டு ஒதுங்கிக் கொண்டால் நமக்கு நல்ல பெயரும்  கிடைக்கும். நல்ல நிலையும் கிடைக்கும்.  

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-36                                                                                                                               வழிமுறை-38 

                                                                                                                                                                                        

 
                                                                                                                                                                                                                 முகப்பு