........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-38

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

38. பேசாமலும் பெயர் வாங்கலாம்!

ஒரு சிலர் அவர்களைப் பற்றி அவர்களாகவே பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். எனக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது? இதையெல்லாம் நான் ஒருவனாகவே சமாளிக்கிறேன் என்று அவர்களாகவே சொல்வார்கள். பிறர் அவர்களைப் பற்றிப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பெருமையை அள்ளிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். இதையெல்லாம் கேட்கும் நிலையில் நாம் பேசாமல் இருப்பதே, நமக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். அவர்களிடம் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்வதை விட அமைதியாய் இருந்து விடுவதுதான் நல்லது.

தங்களைக் காட்டிலும் உயர்நிலையில் இருப்பவர்களைப் பற்றி எண்ணாமல் தாழ்வு நிலையில் இருப்பவர்களிடம் தங்கள் பெருமைகளை தம்பட்டம் செய்து கொள்ளும் இவர்கள் செயல் அவர்களுக்குப் பெரியதாகத் தோன்றுகிறது. மிகவும் குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் இவர்கள், பிறரின் செயல்பாடுகளைத் தாழ்வாகவும்  விட தங்களின் செயல்பாடுகளை மட்டுமே பெரியதாகவும் எண்ணுகிறார்கள்.  சுயநல நோக்கமுடைய இவர்களிடம் நாம் பேசாமலிருப்பதே நமக்குப் பெருமை.

இப்படி அவர்கள் பெருமையை மட்டும் சொன்னால் நாம் பேசாமலிருக்கலாம். அவர்கள் பெருமையுடன் நம்மைப் பற்றி நம்மிடமே குறையும் சொன்னால் எப்படி பொறுமையாக இருப்பது? என்று நமக்குள் கோபம் எட்டிப் பார்க்கலாம். அப்படி கோபம் வரும் நிலையில் நாம் அமைதியுடன் காத்திருந்து நமக்கு வாய்ப்பு வரும் போது அவருடைய குறையைச் சுட்டிக் காட்டலாம். அதுவரை பொறுமையாய் இருப்பதுதான் நமக்கு நல்ல பெயரையும், பெருமையையும் பெற்றுத் தரும். எப்படி என்கிறீர்களா?

ஒரு ஜப்பானியர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகிறார். வாடகை டாக்ஸி ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறார். டாக்ஸி சென்று கொண்டிருக்கிறது.

“என்ன டாக்ஸி இவ்வளவு மெதுவாகப் போகிறது?” என்று சத்தம் போடுகிறார். அந்த ஜப்பானியர்.

டிரைவர் பதில் பேசாமல் காரை ஓட்டுகிறார். ஆனால் ஜப்பானியரோ, இந்தியாவையும், இந்தியர்களையும் திட்டிக் கொண்டே வருகிறார்.

“என்ன நாடு இது? எல்லாமே மெதுவாகவே ஓடுகின்றன. பஸ் மெதுவாகப் போகிறது. கார் மெதுவாகப் போகிறது. ரயில் மெதுவாகப் போகிறது. மனிதர்களும் மெதுவாகப் போகிறார்கள்.”

குறிப்பிட்டைடம் வந்ததும் அந்த ஜப்பனியர் இறங்கிக் கொண்டார். மீட்டரைப் பார்க்கிறார். அது அதிகமான பணத்தைக் காட்டியதும் கோபம் வருகிறது.

“என்ன இது, இந்த மீட்டர் மட்டும் வேகமாக ஓடியிருக்கிறதே!” என்று கேட்டார் அவர்.

அதற்கு டிரைவர் சொன்னார், “சார் இந்த மீட்டர் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது” என்றார்.

அந்த ஜப்பானியர் வாய் பேசாது சென்று விட்டார்.

என்ன வாய்ப்பு வரட்டும், அதுவரை காத்திருங்கள், அது நமக்கு நல்ல பெய்ரையும் பலனையும் பெற்றுத் தரும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-37                                                                                                                               வழிமுறை-39                                                                                                       

 
                                                                                                                                                                                                                 முகப்பு