........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-39

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

39. முகத்தில் தெரியுமா தகுதி?

ஒருவருடைய தகுதியை, அவரது பேச்சுக்களோ, அவரது நடவடிக்கைகளோ தீர்மானிப்பதில்லை. அவர்களின் செயல்கள்தான் தகுதியைத் தீர்மானிக்கின்றன. தகுதியைத் தெரிவிக்கின்றன. ஒருவரின் செயல்பாடு திட்டமிட்டு அதன்படி சரியாகச் செய்யப்படும் பொழுது அது வெற்றியைத் தருகின்றது. இந்த வெற்றியை அடைந்த பின்பே அவரின் செயல்பாடுகள் அவருடைய தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வெற்றி பெறாத செயல்கள் வெறுமனே முயற்சியாக மட்டுமே இருக்கின்றன. முயற்சி மற்றும் பயிற்சி போன்றவைகளின் முடிவுகள்தான் வெற்றியைத் தேடித்தரும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இது தெரியாமல் ஒருவருடைய தகுதியை அவரின் முகத்தைப் பார்த்தேக் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். உண்மையில் இது சாத்தியமா? என்றால் இல்லை. ஆனாலும் சிலர் தமக்கு அந்தத் தகுதி இருப்பதாகக் கூறுவது அவர்களுக்கு ஏதோ நல்ல பெயரைப் பெற்றுத் தந்து விடும் என்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியே அடுத்தவர்களிடம் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் அவர்களின் மதிப்பும் பெயரும் உயர்ந்து விடும் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சிறந்த தமிழறிஞர். பன்மொழிப்புலவர். சைவ சமய ஞானி. தலையை முழுவதுமாக மழித்து ருத்திராட்சமாலை அணிந்திருப்பார். எப்பொழுதும் நெற்றி நிறைய விபூதி இருக்கும். கொலை வழக்கு ஒன்றில் அவர் சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு அவருடைய மாணவர்களும் வந்திருந்தனர்.

அந்தக் காலத்தில் நீதிபதிகள் ஆங்கிலேயர்கள். அதனால் சாட்சிகள் தமிழில் சொல்வதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அதிகாரிகள் இருப்பார்கள். நாவலர் ஆங்கிலத்தில் சாட்சி சொல்ல ஆரம்பித்தவுடன், "பரதேசிகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறார்களே..." என்று முணுமுணுத்த நீதிபதி, அவரைத் தமிழில் பேச உத்தரவிட்டார்.

"எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி" என்று நாவலர் தொடங்க, மொழிபெயர்ப்பாளரால் மொழி பெயர்க்க முடியவில்லை.

கோபமுற்ற நீதிபதி, நாவலரை ஆங்கிலத்திலேயே சாட்சியளிக்க உத்தரவிட்டார். ஆனால் அதை நாவலர் மறுத்து தமிழிலேயே கூற, அவரின் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார்.

"சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகைக்கு முன், கடற்கரை ஓரமாகக் காற்று வாங்கச் சிறுநடை புறப்பட்ட போது" என்பதுதான் இதன் பொருள்.

(எல்லி - சூரியன், ஆழிவரம்பு - கடற்கரை, கால்ஏற்று - காற்று வாங்க, காலோட்டம் - சிறு நடை, புக்குழி - புறப்பட்ட போது) .

ஒருவரின் உருவமோ, உடையோ அல்லது பிற வெளித்தோற்றமோ அவருக்கான தகுதியாகக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அவர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு இருக்கும் நல்ல பெயரை இழக்க வேண்டியிருக்கும். பெரும் ஏமாற்றத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-38                                                                                                                              வழிமுறை-40 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு