........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-40 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
40. விருப்பம் அறிந்து உதவுங்கள்.
சிலருக்கு ஏதாவது ஒன்றில் நாட்டமிருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு அவர்களின் விருப்பத்தை விட அவரைச் சார்ந்து இருப்பவர்கள் கொடுக்கும் அழுத்தங்களே காரணமாயிருக்கின்றன. இதனால் பிறரது விருப்பத்திற்காக ஒன்றைச் செய்ய விரும்பும் இவர்கள் அதில் சிறப்பாக வரமுடியாமல் எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்க வேண்டியிருக்கிறது. இன்றைய வாழ்க்கையில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் அவரைச் சார்ந்துள்ளவர்களின் விருப்பங்களின்படி வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஒருவருக்கு அறிவுரை அல்லது ஆலோசனைகளை அளிக்க வேண்டிய நிலை வரும் பொழுது முதலில் அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அந்த விருப்பங்களுடன் தொடர்புடையதாக நம்முடைய ஆலோசனைகள் அமைய வேண்டும். அப்படி அமைந்து விட்டால் அவர் விருப்பப்படி செயல்பட முடிவதுடன் அவர் அதில் சிறப்பான பெயர் பெறுவதுடன் நம்முடைய ஆலோசனையால்தான் சிறப்பை அடைய முடிந்தது என்கிற நல்ல பெயரும் நமக்குக் கிடைக்கும். ஒருவருடைய விருப்பங்கள் தவறாகத் தெரியும் போது அதை மாற்று வழிகளில் மாற்றி, சரியான வழியையும் காட்டி உதவலாம். ஒரு இளைஞன் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, "சுலபமாக ஞானம் பெற வழி என்ன? என்று கேட்டான். "தினமும் கீதையைப் படி, நிவேதனம் செய்த பிறகு திராட்சைப் பழம் சாப்பிடு" என்று உபதேசம் செய்தார். பரமஹம்சரிடம், "எவ்வளவு திராட்சைப் பழம் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்" என்று கேட்டான் அந்த இளைஞன். "தினமும் எத்தனை ஸ்லோகங்கள் கீதையில் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தாயானால் உனக்கு ஞானத்தில் நாட்டம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு திராட்சைப் பழம் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும் என்றால் உனக்கு வயிற்று வலி பெறுவதற்குத்தான் தகுதி இருக்கிறது. இப்போது ஞானத்தைப் பற்றிப் பேசாதே போய் வா..." என்றார் ராமகிருஷ்ணர். நம்முடன் நெருங்கிய ஒருவருடைய விருப்பங்களை அவர்கள் பேச்சுக்களிலும், செயல்பாடுகளிலும் எளிமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதால் விருப்பம் அறிந்து உதவுங்கள். விருப்பம் தவறெனில் ஒதுங்கி விடுங்கள். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |