........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-41

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

41. மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்.

சிலர் தங்களால் இயலாது இதைப் பிறராலும் செய்ய இயலாது என்று எண்ணிக் கொள்வார்கள். சிலருக்கு தங்களால் எதையும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அதிகமாக இருக்கும். முதலில் சொன்னவர்கள் முயற்சிக்காமலே முடிவெடுக்கிறார்கள். பின்னால் சொன்னவர்கள் முயற்சியுடன் முன்னேற்றமடைகிறார்கள். எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அந்த செயலைச் செய்வதற்கான நிலை முடியாது என்கிற போதிலும் மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும் போதுதான் நமக்கு புதியதொரு விடையைக் காணமுடியும்.

ஆகாயத்தில் பறந்த பறவைகளைப் போல் மனிதன் தானும் பறக்க வேண்டும் என்று ரைட் சகோதரர்கள் ஆசைப்பட்டனர். பறவைக்கு இருக்கும் இறக்கை தமக்கில்லை என்றாலும் அவனுடைய எண்ணத்தைச் செயலாக்க மாற்று வழிகளைச் சிந்தித்தனர். ஆகாய விமானத்தைக் கண்டனர். இப்படி ஒரு வழி சரியானதில்லை என்று மாற்று வழிகளைத் தேடியவர்கள் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். பல புதுமைகளைக் கண்டிருக்கிறார்கள். மாற்று இல்லை என்று முடங்கிப் போனவர்கள் அப்படியே இருந்தார்கள். பிறரின் செயலைக் கண்டு அசந்து போனார்கள். இப்படி அடுத்தவரை அசத்தும் வகையில் நல்ல பெயர் வாங்குவது நம் கையில் மட்டுமில்லை, நம் முயற்சியிலும்தான் இருக்கிறது.

எகிப்து நாட்டின் பிரமிடுகளைப் பார்வையிட்டபடி பேராசிரியர் நியூக்ளிட் தன் சக பேராசிரிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் ஒரு நண்பர், "நியூக்ளிட், எல்லோரும் உங்களை அறிஞர் என்று சொல்கிறார்கள். இந்த பிரமிட் சரியாக உயரம் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களிடம்தான் அளக்கிற டேப் உள்ளதே!" என்றார்.

யாராலும் பிரமிட் ஏறி உயரத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அதன் அடிப்பகுதி அகலமாகவும் மேலே செல்லச் செல்ல குறுகிக் கொண்டும் செல்கிறது. அங்கிருந்து டேப்பைத் தொங்கவிட்டு அளக்க முடியாது என்பதும் நியூக்ளிட்டுக்குப் புரிந்தது.

அங்கிருந்த எல்லோரும் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள்.

"நண்பர்களே! இயலாத செயல் என்று என்னிடம் எதுவுமில்லை. எதற்கும் ஒரு வழி இருக்கிறது." என்றார் நியூக்ளிட்.

பிறகு தன் கையிலிருந்த டேப்பால் பிரமிட்டின் நிழலை அளந்தார். அதைக் குறித்துக் கொள்ளச் சொன்னார். அதன் பின்பு தன் நிழலை அளந்தார். தன் நிழலையும், உயரத்தையும் வைத்து ஒரு கணக்கிட்டார்.

அதைக் கொண்டு பிரமிட்டின் நிழலைக் கணக்கிட்டு பிரமிட்டின் உயரத்தைச் சரியாகச் சொன்னார்.

அவர் சொன்ன பிரமிட்டின் உயரம் துல்லியமாக இருந்தது கண்டு அசந்து போனார்கள் அவர்கள். 

எதையும் முடியாது என்று முதல் கட்டத்திலேயே ஒதுங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு கட்டமாக மாற்றுக்களைக் கொண்டு முன்னால் செல்ல வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். அதன் மூலம் நல்ல பெயரையும், நல்ல நிலையையும் நாம் தொட முடியும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-40                                                                                                                              வழிமுறை-42                                                                                                      

 
                                                                                                                                                                                                                 முகப்பு