கவிதை:160
கண்ணதாசன் நினைவுகளில்...

கவிதை உலகின் வரம்புகளில்
காவிய நாயகனாய் உலா வந்தாய்
கருத்துக்களால் எம்முணர்வுகளை
கற்பனை உலகில் பறக்க விட்டாய்
நிரந்தரமானவன் நான் அழிவதில்லை
நிதர்சனமான அறிந்தால் தானோ
நிரந்தர ரசிகர்களை உருவாக்கி நீயும்
நினைவாலே சிலை செய்வித்தாய்
பொன்னை விரும்பும் பூமியிலே
உன்னை விரும்பும் உள்ளங்கள் ஆயிரம்
என்னை எனக்கே புரிய வைத்தவன்
என்னுள் இன்றும் எழுத்தாய் வாழ்கிறாய்
விண்ணில் ஏகி மறைந்தாலும் கவிஞனே!
கண்ணில் என்றும் நட்சத்திரமாய் ஒளிர்கிறாய்
மண்ணில் நாமின்று படும்பாடுகளை உன்
பண்ணில் தானய்யா தேற்றுகின்றோம்
எடுப்பார் கைகளில் பிள்ளை நீயாய்
தடுப்பார் முன்னால் சீறும் சிங்கமாய்
கெடுப்பார் தன்னால் தேம்பும் குழந்தையாய்
முடித்தாய் உந்தன் வாழ்வைப் பாடமாய்
தித்திக்கும் தமிழெடுத்து அதைக் குழைத்து
சொக்கிக்கும் கவிதைகள் புனைந்து நமக்கு
எத்திக்கும் ஒலிக்கும் பாடல்களைத் தந்து
முத்திக்கும் வாழ்வை அடைந்தாய்
வாழ்வெனும் விளையாட்டு மைதானத்தில்
வாழ்க்கையின் வகைகளை வகைவகையாய்
வகுத்துத் தந்த உண்மையின் பிம்பம் நீ
வாராது வந்த வனப்புக் கவிஞன் நீ
எத்தனை கவி தந்தாய் அண்ணலே எமக்காய்
அத்தனை கவிதைகளிலும் எளிமையைச் சேர்த்து
சொத்தெனவே எம் நெஞ்சங்களில் காத்திருந்து
இத்தரையினில் உனக்கோர் ஆலயமைப்போம்
கவிஞனாய் நீ கண்ட ஆயிரம் கனவுகள்
கலைஞனாய் நீ படைத்த அற்புத இலக்கியம்
இளைஞனாய் நீ கண்ட அழகிய அனுபவம்
முதிஞனாய் நீ காட்டிய வித்தகு ஆன்மீகம்
நான் உன்னை அழைக்கவில்லை கவிதைநேசா
என் உயிரை அழைக்கிறேன் -என்றும்
என்னோடு துணையிருந்து என் உணர்வுகளை
எழுத்தாக்கி உண்மையானவனாய் வாழ வைப்பாய்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணதாசனே!!
தரிசாய் விட்டிடுவோமா உந்தன் நினைவுகளை!!
கண்ணீரால் காத்து நிற்போம் உன் கனவுகளை!!
காவிய மன்னன் உந்தன்
படைப்புகளை !!
-சக்தி சக்திதாசன், லண்டன்.
|