........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:167

தாருங்கள் உலகில் அமைதி

சித்தம் சிறக்காரோ 
சித்தம் சிறக்காரோ இம்மானிடர் 
சிந்தை இரங்காரோ 
எந்தையும் தாயும் எண்ணியிரா 
வஞ்சைகள் நெஞ்சினில் கொண்டே 
வதைக்கின்றனரே உயிர்களை மேதினியில் 
வாழவும் வழி இனி இல்லையோ ? 

என்னுயிர் மா சக்தி நீ சொல்லாயோ? 
எம்மக்கள் கண்ணீர் மறைந்தே அவர் வாழ்வில் 
என்றும் அமைதி நிலவ வழி கூறாயோ? 
மானுடம் சிறிதும் இன்றி மண்ணில் 
மனிதவதைகள் செய்யும் மனங்களை 
மதங்கள் கொடுத்ததோ சொல்வீர் 
மதியினை இழந்ததும் ஏனோ அறியேன் 

விந்தாய் விதைக்கையில் அறிவரோ 
விலையிலா உயிர்களைப் பறித்திடும் மனமுடை 
மானிட ஜென்மமும் எடுத்திடும் என்றே 
மனிதர்காள் சித்தத்தில் ஏனிந்தப் பித்தம் ? 
யுத்தத்தின் சத்தத்தில் போதை கொண்டே 
மொத்தத்தில் தம்மையே இழந்திடும் மூடர் 
செத்தபின் வைகுண்டம் ஏகுவோம் என்றே 
மத்தம் கொண்டே சிலர் வாழ்வதும் முறையோ ? 

எத்தனை உயிர்களைக் களைந்தீர்? 
என்ன நீர் உலகில் விதைத்தீர் ? 
அத்தனை வாழ்க்கையின் அழிவுகளை 
ஆனந்தமாய் முடித்தீர் 

அன்றொரு அமேரிக்கா 
அதன் பின்னர் லண்டன் 
நேற்றொரு மும்பை 
நாளை உமக்கு எந்த ஊர் ? 

சிந்தை சிறக்கீரோ, மனிதரே 
சித்தம் தெளியீரோ நீவீர் 
எந்த மதமானால் என்ன? 
எந்தத் தெய்வம் என்றால் என்ன ? 
நாமனைவரும் ஒருதாய்ப் பிள்ளைகள் அன்றோ 
மானுடம் தாமெங்கள் ஜாதி அங்கே 
மனிதம் தானெங்கள் நீதி 

வணங்குகிறேன் அன்னை மகாசக்தி 
வேண்டுகிறேன் அல்லாவினை நோக்கி 
கேட்கின்றேன் அன்பு யேசுநாதரிடமே 
தாருங்கள் உலகில் அமைதி இனி வேண்டாம் 
உமது பெயரால் மோதிடும் நியதி !

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.