கவிதை: 224
உறக்கம் வேண்டாம் விழித்திடுவீர்!

உறக்கம் உமக்குப் போதும்
உண்மை விழிக்கும் நேரம்
உன்னைத் தேடுது எதிர்காலம்
உறுதியோடு எழுந்து வாரும்
கொள்கைகள் என்பன
உள்ளத்தினுள்ளே மறைந்தால்
கனவு என்றே கரைந்துவிடும்
காரியம் ஆயிரம் ஆற்ற வேண்டும்
கன்னியர், காளையர் உழைத்திட
உறுதி கொண்டிட வேண்டும்
புதிதாய் ஒரு சமுதாயம்
புவியில் இனிமேல் புலர்ந்தாலன்றி
புலராது வாழ்வில் சமநீதி
புரிந்திடும் எம் இளம் சந்ததி
உழைப்பவர் சிந்திடும்
உதிரத்தின் பலத்தினில் தாம்
பெருக்கிட்ட செல்வத்தை
பகிர்ந்திடும் உள்ளம் இழந்ததன் காரணம்
பாரினில் எங்கும் நிறைந்தது
பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்கள்
அரசியல் என்றுமே போர்க்களமாக
அவசியம் இருப்பது அவசியமில்லை
ஏற்காத கொள்கைகள் ஆயிரம் இருக்கும்
ஏற்றிடும் கொள்கைகள் ஒன்று போதும்
ஒற்றுமை எம்மிடை மலர்ந்திடவே.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று
ஒருவருக்கொருவர் அடிதடிச் சண்டை
அறவே வேண்டாம் உணர்ந்திடுவீர்
மாற்றுக் கருத்தாயினும் அதை
மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றே
மதித்து நடத்தும் அரசியல் அரங்கம்
மனிதர்கள் காண்பது அவசியம்
அடிப்படை இடுவது இளையவர் கையில்
அகிலத்தின் மாற்றம் உங்களின் நெஞ்சில்
மாறி, மாறி ஏய்த்திடும் அரசியல் மாற்றி
மாற்றமுடைய அரசியலமைப்பீர்
மாறாத கனவை மனந்திறந்து சொன்னேன்
மாபெரும் இளைய சமுதாயமே !
உறக்கத்தினின்றும் விழித்துக் கொள்வீர் !
-சக்தி. சக்திதாசன், லண்டன்.
|
|