கவிதை: 252
தனத் தேவதையே
நீ...?

தபால்பெட்டியை
திறந்தால்
தனம் தா.....தனம் தா...
எனத்தானம் கேட்டு
தாளம் போடுகின்றன
தண்டித்திரியும் துண்டுகள்.
கடிதங்களை உடைத்தால்
காசு.....காசு என்றே
கதைத்துப் பேசுகிறது
கடமை என்று
காதுக்குள் கத்தி
நெஞ்சில் உதைத்து
நொருக்குகின்றன.
தொலைபேசியும்
பணம்......பணம் என்றே
பேசுகிறது.
சதமில்லாதவனை
சனம் மதியாது
சலம் பிடக்கூட
சதம் தேவைப்படுகிறது
கண்டவனுடன்
கழிப்பில் கதைத்தால்
காசு கேட்கிறான்.
சிரிப்பதற்குக் கூட-இங்கே
சில்லறை தேவைப்படுகிறது.
பார்வை பட்டால்
பின்னால் வந்து விடுகிறார்கள்.
பாவையரை
பாதையில் பார்த்தால்
பணம் பாதியாகி
பயணமாகி விடுகிறது.
பிணம் கூட வாய்
பிளந்து கிடப்பதே
பணம் கேட்டே
உண்டியைக் காட்டி
உண்டியல் கொண்டு
மிண்டியடித்து
தட்டித் தட்டியே
உடைக்கப்படுகின்றனர்
வீட்டுக்கதவுகள்.
மனப்பெட்டியாலே
தனப்பெட்டியும்
தவறித்தொலைந்து விடுகிறது.
பணப்பெட்டியாலேயே
பிணப்பெட்டிகள் நிரப்புகின்றன.
காலனுக்கும்
கடவுளுக்கும்
இலஞ்சம் கொடுக்கும்
காலமிது.
சித்திரபுத்திரனாரும்
காசை வைத்தே
கணக்குப் பார்க்கிறார்.
காசே கடவுளாகியிருக்கியது.
காசில்லாக் கடவுளை யாரும்
கணக்கே எடுப்பதில்லை
நாடி...நாடி
தேடி...தேடி..
ஓடியோடித் தேடிய நாணயத்தை
வங்கியில் வைப்பதற்கும் நாணயம்
எடுப்பதற்கும் நாணயம்.
நாணயம் நாணயமின்றி
நாறுகிறது நானிலத்தில்.
தேவையை
தீர்க்கவேண்டிய
தேவதையால்
வாழ்வே
தேவ வதையானது.
தனத்தேவதை
இருந்தாலும் உபத்திரகம்
இல்லாவிட்டாலும் உபத்திரகம்
-நோர்வே நக்கீரா
|