கவிதை: 274
விதவைக்கும்
உண்டு உரிமை!

வேலியில்லா பூவையும்,
துடுப்பில்லா மிதவையும்
போலத்தான் இந்த
மாங்கல்யமில்லா விதவையும்.
இளம்பெண் என்றழைத்த
நாவால் இனி கூசாமல்
கைம்பெண் என்றழைக்கும்
மூட சமூகம் இனி
முக்காடிட்டு முகத்தை மூடி
வெட்கமின்றி அவளை
இரவுக்கு அழைக்கும்
ஓரக்கண்களால்... ஆனால்
அபசகுனம் இவளென்று
ஒதுக்கி வைக்கும்...
நிறங்களை நிராகரிக்கச் சொல்லி,
உப்பில்லா உணவை உண்ணச் சொல்லி,
நான்கு சுவர்களுக்குள் அடைந்து
அறுசுவைகளையும் மறந்து
கைதியைப் போலொரு வாழ்க்கை
வாழ்ந்தால் மட்டுமே
உத்தமி என்போமென்கிறது உலகம்...
பட்டம் முடித்தபின் பள்ளிப்பாடம்
என்பதுபோல,
மணமுடித்து மனவிளிம்புகளையும்
தாண்டித் தளும்பி நிறையும்
அன்பை உடலில் ஏந்தி
பரிமாரப் பழகியவளுக்கு
இந்திரியங்களை அடக்கும்
பயிற்சி எதற்கு மீண்டும்...
வெம்மையின் வெக்கையுள்ளவரை
உடல் தடுமாறும்
உடலில் வேட்கையுள்ளவரை
மனம் தடுமாறும்
வாழ்க்கை தடம் மாறும்.
மணமுறிந்த பெண்ணுக்கு இதனை
மனமுவந்து அளித்திட வேண்டா.
மறுமணமொன்றே
ஈடுசெய்யும் அவள் இழந்தவைகளை
அது முறையாக்கும் அவள்
உடல் வேட்கைக்கான வடிகாலை.
அஃதொன்றே திருப்பித்தரும் அவள்
மனம் களைந்தவைகளை...
மணமுறிவு என்பதோர்
பக்கத்தின் முடிவே...
அத்தியாயத்தின் அடுத்த பக்கங்களில்
எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்து
வாழ்க்கைப் புத்தகம்
தொடரவே செய்யும்...!
அந்தப் பக்கங்களில்
தன் வரிகளைச் சேர்க்கும் உரிமை
அவளுக்கும் உண்டு,
ஆண் மகனைப் போல...!
-ராம்ப்ரசாத்.
|
|