........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 349

கால மாற்றம்..!

 

கொல்லைப் புறத்து
ஒதுக்கு அறையில்
உழைத்து உருக்குலைந்த
நார் கட்டில், சாய்வு நாற்காலி
மரக்குதிரை, தகரப் பெட்டி
விறகு அடுப்பு, வால்வ் ரேடியோ
ஆட்டுக் கல், அம்மி...
ஒன்றன் மேல் ஒன்றாய்
ஓய்வெடுக்கின்றன..!

ஆசையாய் அன்று
அப்பா படித்த
ஆன்மீகப் புத்தகங்கள்
பழுப்பேறி
பாதி கிழிந்து
படிக்கும் அறையில்
பல்லிகளுக்கும்
பாச்சான்களுக்கும்
புகலிடம்...

படுக்கும் அறை
ஜன்னலுக்கு மேல்
ஆணியில் தொங்கி
ஆடிக் கொண்டிருக்கும்
அழுக்குப் படிந்த
கருப்பு வெள்ளை
அப்பாவின் அப்பா படம்;
அதன் அருகில்
அப்பாவுக்கு அம்மா
சீதனமாய்க் கொண்டு வந்த
பெண்டூலம் கிளாக்-ஓடாமல்,
ஒற்றை முள்ளோடு...

மாடியில்
சுவரில் தொங்கும்
மான் கொம்பு- அதில்
காலங் காலமாய்
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
குதூகலித்து வாழும்
குருவிக் குடும்பம்- அதோடு
குழவியும்,
ஒட்டடைப் பூச்சிகளும்...

அடுக்களையில்
அதிக நேரம்
அசமந்தமாய்த் தூங்கும்
அம்மா விட்டுச் சென்ற
ஆண் பூனை...

நீரின்றிக் காய்ந்து
இலை உதிர்த்து
நிழல் தராமல்
முற்றத்தில் நிற்கும்
அப்பா வைத்துப் போன
வேப்பமரம்...

ஆனாலும்
அலைகடல் தாண்டி
அயல் நாடு சென்ற
அருமை மகளின்
அதே பேச்சுக் குரல்- என்
உள்ளங்கை
செல்போனில்..!

-பாளை சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.