கவிதை:36
மூளை
வளர்ச்சி குன்றிய குழந்தைகள்!...

சமுதாயத்துக்கு இறைவனால்
அருளப்பட்ட வரங்கள்!
மண்ணுலகில் தோன்றிய
தேவதைகள்!
பார்வைக் கெட்டா
ஊனங்கள் நிறைந்தவர்கள்
மத்தியில்
குறை தெரியப் பிறந்திட்ட
குணவாதிகள்!
இன்னாரே இவருக்குச்
சிறந்த பெற்றோர்!
இவரால் இக்குழந்தை
ஏற்றம் பெறும் என
இறைவனால்
தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு
மட்டுமே குழந்தையாய்
அருளப்பட்டவர்கள்!
இக்குழந்தைகளைப் பெற்றவருக்கு
குறை தெரியும்
வருத்தம் இருக்கும்
கவலை மிகும்
வேதனை பெருகும்
எதிர்காலம் கேள்வியாகும்
பொறுமை காப்பீர்!
சற்றே சிந்திப்பீர்!
குறைகளை மட்டுமே
கண்ணுறும் ஊனமிக்க
சமுதாயத்தில்....
இவர்களின்
பிறப்பின் சிறப்பு
இதயக் கண்ணுள்ளவர்க்கு
மட்டுமே புரியும்
உண்மை!
குறைகளை பந்தயமாய்
எதிர்கொள்வோர்
சாதனையாளராகின்றர்!
இருந்தும் வாழ்கின்றர்!
இறந்தும் வாழ்கின்றர்!
சுதா சந்திரனும்,
ஜெயபால் ரெட்டியும்
இன்றைய நட்சத்திரங்களாய்த்
திகழ வில்லையா?
வேகமாய் முன்னேறி வரும்
இப்புவியில் நிச்சயம்
ஒர் எதிர்காலம்
காத்திருக்கிறது!
உலக நடப்பில்
ஒரு நோட்டமிடுவீர்!
எத்தனை பெற்றோர்
தருதலைகளையும்
சமூகவிரோதிகளையும்
சதிகாரர்களையும்
சமூகக் கேடர்களையும்
முதிய பெற்றோரை வீதியில்
விட்டுச் செல்பவர்களையும்
குழந்தையாய்ப் பெற்றுவிட்டு
கண்ணீர் வடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
சொத்தும் சொந்தமும்
கைவிட்டுப் போதல் கூடாதென
நெருங்கிய இரத்த சொந்தங்களில்
மணம் முடித்தல்,
தாய்மையாய் இருக்கும் போது
கருகலைக்க முயற்சித்தல்,
கருவிலிருக்கும் போதும்
பிறந்த பின்னரும் நேரும்
விபத்துக்கள்,
மூளை காய்ச்சல் போன்றவைதான்
இத்தகையக் குழந்தை
பிறப்புக்குக் காரணம்!
இவர்கள்
பாவம் அறியாதவர்கள்
பாவம் நினையாதவர்கள்
பாவம் செய்யாதவர்கள்
பாவம் தூண்டாதவர்கள் .....
பாசம் வேண்டுபவர்கள்
நேசம் கொள்பவர்கள்
கனிவும் கவனிப்பும்
தேவையானவர்கள்
நிந்திக்கப்பட வேண்டியவரல்லர்-
இவர்கள் .....
சிந்திக்கப்பட வேண்டியவர்கள்!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
|
|