........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 385

அறிவியலும் முன்னேற்றமும்!

ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி
ஒழிச்சல் இன்றி
களிக்க அழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல
கருவி கண்டோம்!

குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்
கொடுப்ப தற்கும்
எளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்
இன்று உண்டே!

உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்
உங்கள் ஐயம்
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்
உழவு செய்ய

நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க
நாட்டில் இன்று
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய
மண்ணுக் கேற்ற

பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்
பூச்சி கொல்ல
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்
வந்த திங்கே!

செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி
செய்துள் ளாரே!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்
நன்மை யுற்றோம்!

விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே
வியக்கும் வண்ணம்
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்
நோக்கில் ஒன்றி!

எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்
எல்லா நோய்க்கும்
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை
உணர்ந்தே உள்ளோம்!

இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்
இருந்தபோதும்
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று
செம்மை கெட்டும்

ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்
ஒழிந்து போக
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற
நோக்கில் ஆள்வோம்!.

-தமிழநம்பி.

பொருள் கொள்க:

நொய்ப்பம் = திறமை, ஒண்ணலுறும் = பொருந்துகிற, தகுதியான, நொவ்வுற்றோம் = நோயுற்றோம், நொய்ம்மை = கேடு.
 

 

 

 

 

 

m

 

தமிழநம்பி அவர்களின் மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.