கவிதை:
391
ஏமாளித்
தமிழன்!

பிறப்பு இறப்பிடையே
பிறண்டு உழலும் தமிழா
பேடி இல்லை நாமடா
பிறர்பின் செல்லல் எதற்கடா?
இயற்கை உள்ளவரை
எதிர்காலம் நமதடா
ஏமாற்றுவான் இடுப்பொடிக்க
எதிர்நீச்சல் போடடா.
நன்றியுள்ள உயிர்கள் நாம்தான்
நாட்டைச் செழிக்க வைக்கிறோம்
நாலாந்தர அற்ப மனிதன்
நயந்து ஆளப் பார்க்கிறோம்.
பட்டம் பதவி கெட்ட ஊழல்
பகட்டு மேனி நகைக்குது
பணம்படைக்க இனம் அழிக்க
பாய்ந்து நாற்காலி பிடிக்குது.
தனக்காகவே திட்டம்போட்டு
தரணி பார்க்க சேர்க்கிறான்
தர்மதுரை பெயர் எடுக்க, பிறர்
தண்டுவடம் நசுக்கிறான்.
உடலுழைப்பை ஒழித்துக்கட்ட
ஓயாது சலுகை அளிக்கிறான்
உயர்ந்த ஆத்மா இயற்கைதனை
உதாசீனப் படுத்துறான்.
கடவுள் பார்ப்பான் என்பதெல்லாம்
கயவன் விதித்த அறிவுரை
கடிந்து சொல்லி சொத்துச் சேர்க்க
கயவன் ஓதும் நயவுரை.
கெட்டொழிவான் என்பதெல்லாம்
குட்டுபட்டோன் பயவுரை
கச்சிதமா முட்ட வேண்டும்
கணக்குப் பண்ணு முடிவுரை.
தமிழன் இன்று ஏமாளியடா!
தரணியெல்லாம் சிக்குது
தறுதலைகள் நாட்டை ஆள
தனக்குள் நொந்து பார்க்குது.
இருக்குமிடம் மறைத்தொழிக்க
இயற்கையும் மனம் விரும்புது
ஈன மகன் தமிழன் என்க
இயற்கையும் தலை குனியுது.
-பொன்பரப்பியான்.
|
|