கவிதை: 456
இளைஞனே
எழுந்து வா...!

இளைஞனே எழுந்து வா...!
இமய ஏற்றமாய் நீ
மலைக்கும் எதிர்காலத்தை
நம்பிக்கையோடு வெல்லலாம்...
இயலாமையின் வெற்றுக் கண்ணாடியில்
உனது முகம் பாராதே
உழைப்பின் ரசம் பூசிப்பார்
உயர்வின் புன்னகை தெரியும்...
குறுக்குப்பாதையில் நடந்து
உறவுகள் வெறுப்பவனாக இராதே
உயிர் இருக்கும் வரைக்கும்
நேர்வழியில் கால்களை வைத்து
ஓர் லட்சிய இலக்கைத் தொடு...!
வாழ்கைப்பாதையில்
தோல்விக்கற்கள் இடறிவிடும்
சட்டென வீழ்ந்து விடாதே
தனக்கான கடமைகளை நினைத்து
மிடுக்குடன் முன்னேறு...!
கனவு ஊஞ்சல் சுகமானதுதான்
காலம் கடந்து தூங்கினால்
உன்னைத்தாண்டி நிஜம் போகும்
சோம்பல் வந்து ஒட்டிக்கொள்ளும்...!
வாய்பந்தல் உனை வளர்க்காது
மெளன சாதனைகள் வார்க்கும்
திறமையிருந்தால் உலகம்
முழுவதும் பெயர் நிலைக்கும்...!
நமக்கேன் என ஒதுங்காதே
சமுதாயக்கிணற்றிலே கிடக்கும்
சாதி மதபேத தூரை
ஒற்றுமை கைகள் சேர்த்து
சுத்தமாய் அள்ளியெடுத்துப்பார்
சமத்துவ நீர் ஊறிவரும்...
பயந்து ஒதுங்கியது போதும்
வன்முறையை வதம் செய்ய
உடனே வீர்கொண்டு வரிந்து கட்டு...
சுயங்களை நிரந்தரமாய் சுட்டெரிக்க
பொதுநல தீக்குச்சி உரசிப்போட்டுப்பார்
நாளைய பொழுதுகள் திறந்த வெளியாய்...
இளைஞனே எழுந்து வா...!
நீயொரு சிறகுகள் முளைத்த பறவை
பறக்கத்தெரியாத குஞ்சாய்
முடியாமைகூட்டுக்குள் முடங்கி விடாதே...
இந்த சமுதாய வானம் விரிந்தது
மீண்டும் மீண்டும் முயற்ச்சித்துப்பார்
உனக்கானதொரு இடம் தூரமில்லை...
சோம்பேறிக்கூட்ட கிளையிலே
விளையாட்டாய்க் கூட தங்கிடாதே
நிகழ்கால சூரைக்காற்று வீசும்
எதிர்கால புயல் மழை தாக்கும்
கடந்தகால கனவுகளை முன்னிருத்தி
விழிப்புணர்வுடனே பயணப்படு !
இளைஞனே எழுந்து வா...!
-பாரதியான்.
|