கவிதை:
524
மனம்போன போக்கில்...!

கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய் ஓடுகிறாய்
கவின்நெஞ் சே!மார்
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு தித்தாடித்
தருக்கி யேசீர்
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம் தூண்டிப்பின்
கிளர்ந்தெ ழுந்து
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன் விளையாட்டால்
தூக்கங் கெட்டேன்!
அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள் நாளும்நீ
ஆடு கின்ற
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப் பிடியானேன்;
நினைவ கத்தில்*
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி சேமிக்கும்
தரவு மாகி
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும் ஒளிச்சுருளே!*
நீதான் நானா?
மேனியெனும் வன்பொருளில்* விரும்பியிறை
வன்நிறுவும்
மென்பொ ருள்நீ
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி* ஆகின்றாய்
சிலநே ரத்தில்
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி* யாயறிவு
மிளிர்ந்த போதும்
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம்* முழுதறியேன்
நவிலு வாயோ?
ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி வும்நீயும்
அமர்ந்தி ழுக்க
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல் வழியிலெனைச்
செலுத்த வேண்டி
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்; ஆனாலும்
அறிவும் நீயும்
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை புரிகின்றீர்
வலியைத் தந்தீர்!
நன்னூல்கள் பலநாடி நான்கற்க நல்லறிவு
நவின்ற போதும்
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி பின்செல்லும்
காட்சி போல
முன்னாலே நீபோக நானுன்னைப் பின்தொடர்தல்
முறைமை ஆமோ?
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம் என்பதனை
உணர்ந்த துண்டா?
மான்போன போக்கிலிரா மன்போக, மனம்போன
வழியில் சீதை
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ! மாரீச
தார்வேந் தென்னும்
மான்சாக இராவணன்தன் மனம்போன வழிபோன
வகையா லன்றோ?
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய் நானுன்பின்
அலைந்தேன் கெட்டேன்!
ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே! நீயென்னுள்
ஒளிந்து கொண்ட
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண் என்பேனா?
பிழைபொ றுத்து
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே என்பேனா?
நீயென் னொத்த
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற வுறுவேனா?
நீங்கு வேனா?
பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி, ஆசை,யன்பு
பொருந்தப் பெற்ற
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர் வுகள்பலவாம்!
நின்னால் நானும்
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச் சிலநேரம்
நின்னால் தானே
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய நிறைநிறையக்
குறிக்கோள் ஏற்பாய்!
(நிகழ்பட ஆட்டம் –video game; தரவு –data;
ஒளிச்சுருள் –film role;
வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware;
தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் –சூது)
-அகரம்.அமுதா.
|