கவிதை:
543
நெஞ்சு பொறுக்குதில்லையே...

முதியவர், மகளிர், குழந்தைகள் என்னும்
இரக்கமும் இன்றி அனைவரும் கூடும்
பொது இடங்களில்,
வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து
கொன்று குவிக்கின்ற
கொடியவர் செய்யும் கொடுஞ்செயல் எல்லாம்
கனவிலும் நினைத்துப் பார்க்கும் போதிலும்
நெஞ்சு பொறுக்குதில்லையே-என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
போலி மருந்து, காலம் கடந்து
போன மருந்து ஆகியவற்றை
விற்றுப் பிழைக்கும் அற்ப நரிகள்!
காலம் கடந்த உணவுப்பொருள்கள்
கலப்படம் செய்த உணவுகள் அனைத்தையும்
விற்பனை செய்யும் நச்சுப் பாம்புகள்ஸஸ
மருத்துவம் பார்ப்பதாய்க் கூறி ஏய்த்திடும்
போலி மருத்துவர் ஆகிய கழுகுகள்!
கள்ள நோட்டுகள்
அச்சடித்து, புழங்கவிட்டு
நம்தேசத்தின்
பொருளாதாரக் கப்பலை கவிழ்க்கும்
கள்ள நோட்டுத் திமிங்கிலங்கள்ஸஸ
முதலிய சமுதாயப் புற்று நோய்கள்
செய்யும் செயல்களைச் சிந்தித்துப் பார்த்தால்
நெஞ்சு பொறுக்குதில்லையே!- என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
அரசின் பற்பல துறைகளில்
அலுவல் பணியும்
பணிக்குரிய ஊதியப் பணமும்
ஓய்வூதியம் போன்ற ஒளிமிகும் பயன்களும்
பெற்றும் அவை போதாமல்
கையூட்டும் பெற்றுக் காரியம் ஆற்றும்
திருடர்தம் கூட்டத்தின் தீய செயல்களை
எண்ணுந்தோறும், எண்ணுந்தோறும்
நெஞ்சு பொறுக்குதில்லையே! – என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
பெற்று-சிறப்புடன் பேணி வளர்த்த
தாய் தந்தையரை-அவர்தம்
முதுமையில்
ஆதரிக்காமல் வேதனைப்படுத்தும்
முடத்தெங்குகள்-மூடப்பிள்ளைகள்
அவர்களை நினைத்துப் பார்த்தால்...
நெஞ்சு பொறுக்குதில்லையே! – என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
திரைப்படம் என்னும்
திருப்பெயராலே
ஆபாசக் களஞ்சியம்
அபத்தம்-முறைகேட்டுப் பேழைகள்
ஆகியவற்றை அவிழுத்துக் கொட்டி
அரங்கேறச் செய்து
பண்பாட்டின் மீது போர் தொடுக்கின்ற
நச்சுக் கிருமிகள் ஆன மானிடர்
தம்மை எண்ணிப் பார்த்தால்
நெஞ்சு பொறுக்குதில்லையே! – என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
கடவுள் பெயரால்
காசுகள் சேர்த்துச்
காமுகராக வாழ்வை நடத்தி
ஊரையும் உலகையும் ஏய்த்துப் பிழைக்கும்
பசுத்தோல் போர்த்திய காவிப் புலிகளின்
போலித்துறவுப் பொய் முகங்களை நினைக்கும் போதில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!-என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
இளமையில் கல்வியைக்
கலைகளை நாடி
அறிவினைக் கூர்மையாய்
ஆக்கிக் கொள்ளாமல்
வீண் பொழுது போக்கி
வெம்பிப் போகும்
தம்பிகள் முரட்டுக் காளை தம்மை எண்ணிப் பார்த்தால்
நெஞ்சு பொறுக்குதில்வையே! – என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
மொத்தத்தில்
தீய பயக்கின்ற
தீயவற்றைச் செயகின்ற
தீயவர் அனைவரையும்-அவர்தம்
செயல்கள் அனைத்தையும்
சிந்திக்கும் போதெல்லாம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! –என்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
-முனைவர்.மா.தியாகராசன்.
|