கவிதை:
544
வெப்பம் தணிப்போம்...!

உடலின் வெப்பம் உயர்ந்தால்... அஃது
உண்மையில் காய்ச்சலின் அறிகுறி!
உரிய மருந்துகள் உடனே அருந்தினால்
உயரும் காய்ச்சல் குறையும் – மறையும்
மானிடக் காய்ச்சலுக்கு மருந்து அருந்துவோரே!- நீங்கள்
மண்ணின் காய்ச்சலுக்கு மருந்து அளித்தீரா?
உலகின் வெப்பம் உயர்ந்து கொண்டிருப்பதை
உடனே தடுக்காவிட்டால்...
உரிய சிகிச்சை அளித்துக் காய்ச்சலின்
உயர்வை நிறுத்தா விட்டால்...
காய்ச்சலின் முடிவே
மண்ணின் முடிவாய் மாறிடக் கூடும்
மண்ணின் மரணம் மனிதக் குலத்தின்
மரணப் பிரளயம் ஆகும்!
பன்றிக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்
மலேரியா காய்ச்சல்
போன்ற காய்ச்சல் அனைத்திலும்
பொல்லாக் காய்ச்சல் புவியின் காய்ச்சல்
என்பதே உண்மை! இந்தக் காய்ச்சலைக்
குறைப்பதே உயிர்க்கும் அனைத்திற்கும் செய்யும்
நன்மை!
மண்ணின் காய்ச்சலைக் குறைத்திட
மரம் வளர்ப்பு என்னும் மருந்தளியுங்கள்! அது முதல் உதவி
மட்டுமன்று முதன்மையான உதவியுமாகும்!
மண்ணில் வளர்ந்திருக்கும் மரங்கள்! அவை
மரங்கள் அல்ல! மணமகள் பெற்ற வரங்கள்!
அந்த வரங்களை அகற்றத் தொடங்கினால்
கவசக் குண்டலம் இழந்த கர்ணனைப்
போல, ஆகும் புவியின் நிலமை!
மணப்பெண்- மண் எனும் பெண்ணின்
தோழியர் ஆகாயம், காற்று, நீர் ஆகியோர்
அந்தத் தோழியரை நாம் கலங்கப்படுத்தினால்
தாரணி நங்கை அதனைத் தாங்கிக் கொள்ளாமல்
உள்ளம் கொதிப்பாள்! வெப்பம் மிக உயர்ந்திடுவாள்!
அந்த வெப்பத்தால் பூமியின் ஆருயிர் நீங்குகின்ற
அவலமும் நேரிடலாம்!
ஓடும் பாம்பினை ஓடி நாம் அடித்தால்
ஓடிய பாம்பு உடனே திரும்பித்
தாக்கிய நம்மைச் சீறிக் கடிக்கும்!
கல்லால் நாயை அடித்தால், அந்த நாய்
பல்லால் கடிக்கப் பாய்ந்து சினந்திடும்!
அதுபோல்,
இயற்கையை, மானிடம் அறிவியல் என்னும் தன்
மூன்றாவது கையால் தாக்கத் தாக்க, பதிலுக்கு
இயற்கையும் சீறித் தன் எதிர்பைக் காட்டுதல்
இயற்கையே யாகும்!
இயற்கை சீற்றம் கொண்டு எழுந்தால்
மனித வாழ்க்கை மடங்கி, முடங்கி, உடைந்து போகும்!
இதுவரை இயற்கையைச் சீண்டிச் சீண்டிச்
சீற்றப்படுத்தியது போதும் இனியாவது
சீற்றப்படுத்தாமல் - அமைதி வழியில்
ஆற்றுப்படுத்துவோம்.
வடதுருவம்- தென்துருவம் என்னும்
இருபெரும் பாசறைகளில்
வெள்ளைக்கட்டியாய்
உறங்கிக் கொண்டிருக்கும் தண்ணீர்ப்படை வீரர்களை
புவி வெப்பப் போர்ப்பறையை முழக்கி
எழுப்பி விடாதீர்!
உறங்கும் வீரர்கள் உருகி எழுந்தால்...
அந்தப்படையின் ஆக்கிரமிப்பு
எதுவரை நடக்குமோ- என்னென்ன நடக்குமோ?
நாம் வாழும் பூமி பந்தின்
முக்கால் பகுதி
தண்ணீர்ப்படை வீரர் தம் ஆக்கிரமிப்பில்
தானே உள்ளது?
மேலும் அவர்கள் சீறி எழுந்தால்
மானிடர் நாம் வாழும்
கால்பகுதியிலும் கால் ஊன்றிவிடுவார்கள் !
என்பதால் எச்சரிக்கின்றேன்!
பஞ்சுப் பொதிகளாய்- வெண்ணைக் கட்டியாய்
ஆழ்ந்து உறங்கும்,
நீர் வீரர்களை, மானிடரே! நீர் எழுப்பி விடாதீர்!
அவர்கள் உறங்கும் வரையில் தான், கடல் மட்டமும் எல்லைக்கோடும்
மாறாதிருக்கும்
எல்லைப்போரில் அவர்கள் ஈடுபடாது உறங்க
இயற்கை வாழ்வு எனும் தாலாட்டை மானிட இனம்
உறங்க இசைப்பது ஒரு வழி! அஃது ஒரே வழி!
எதனை நிறுத்தினாலும் இயற்கை வாழ்வுத் தாலாட்டை மட்டும்
நிறுத்தாமல் பாடத் தொடங்குங்கள்- பாடிக் கொண்டே இருங்கள்- அது தான்
மானிடத்தை மகிழ்வுடன் பொங்கச் செய்யும்!
இயற்கைச் சீற்றத்தை மங்கச் செய்யும்!.
-முனைவர்.மா.தியாகராசன்.
|
|