கவிதை:
551
நண்பா நீ இல்லாமல்...!

அன்பு நண்பா...
எத்தனை முறை
என் கிறுக்கல்களைக்
கவிதை என்று
படித்திருப்பாய்..?
படித்து முடித்தபின்
உன் விமர்சனம் என்னைப்
பாதிக் கவிஞன் ஆக்கிவிடுமே..!
இன்று
டிசம்பர் ஒன்று...நீ
இறந்த நாள்.
உன் தம்பி கேட்டதற்காய்
இந்தக் கவிதையை
அழகாய் எழுதவே
ஆசைப்படுகிறேன்.
ஆனாலும்
எழுத முடியவில்லை...
நம் நட்பைவிடவும்
அழகான கவிதை
நீ இல்லாத போது
நமக்கெதற்கு..?
பேனாவும் பேப்பருமாய்
முற்றத்தில் அமர்ந்து
உனக்கான கவிதையை எழுத ஆரம்பித்தேன்..
மரத்திலிருந்து பிடி விட்ட
இலை ஒன்று
காற்றில் பஞ்சுபோல்
இலகுவாய் மிதந்து
ஆடி அசைந்து
காகிதத்தில் விழுந்தது..
உலக மேடையில்
வாழ்க்கை நாடகம் முடித்து
வேஷம் கலைத்து
வீடு திரும்பும்
நாடக நடிகனின்
வேளை வந்ததை
வியப்பில் உணர்ந்தேன்..
நித்திய வீடு திரும்பிய
உன்னை நினைத்தேன்
கண்கள் பனித்தன...
அடுத்த கணம்
நிச்சயமில்லை...
பால் கணக்கும்
மளிகைக் கணக்கும்
போடுகிற நாம்
நம் கணக்கைப் போடும்
கடவுளை மறந்து
பிரபஞ்சத்தின் முடிவை
யோசிக்கிறோம்..!
நேற்று இன்றி
இன்று இல்லை...
இன்று இன்றி
நாளை இல்லை...
நேற்றையக் கதையை
இன்று மறக்கிறோம்...
இன்றையக் கதையை
நாளை மறப்போம்..
முந்தினவர்கள் கதையை
முறைப் படுத்தாவிடில்
முகவரி இழந்து
முடங்கிப் போவோம்..
நிகழ்வுகள் இன்றி
வாழ்க்கை இல்லை...
அதில் ஒரு நிகழ்வே
உன் வாழ்க்கையின்
முடிவாகிப் போனது..
கனவுகள் இன்றி
வாழ்க்கை இல்லை...
அந்தக் கனவே
கண்ட உன்னை
துறந்து விட்டது...
மீட்டுவோன் இன்றி
நாதம் இல்லை...
ஆர்மோனியப் பெட்டி
உன்னை இழந்து விட்டது..!
மலர்ந்த பூ
உதிர்ந்த போது
காலம் மாறியிருந்தது..
காயான பூ
மறுபடி மலராவதில்லை..!
பிறப்பின்றி இறப்பில்லை...
பிறந்தவர் எவரும்
நிரந்தரர் இல்லை...
இறந்தவர் எவரும்
எழுந்து வந்ததில்லை...
இறுதிவரை இருப்பேன் என்றவர்
இமைப் பொழுதில் சென்று விட்டார்
சென்ற இடம் தெரியும்
செல்வதற்கு நமக்குப் பயம் -
மரணம் - பயம்..!
பேச்சு நின்றபின்
நாடி கட்டினார்கள்..
மூச்சு நின்றபின்
மூக்கில் பஞ்சு வைத்தார்கள்..
கேட்காத காதுகளை
பஞ்சால் அடைத்தார்கள்...
பார்வை இழந்த கண்களை
பாவம்! மூடிவிட்டார்கள்..
நடக்க முடியாத கால்களை
கட்டிப் போட்டார்கள்...
அசைக்க முடியாத கைகளை
நூலால் இணைத்தார்கள்...
ஆனால் நீ
நிரந்தரமான ஓய்வு
நிம்மதியானத் தூக்கம்
கவலையில்லாத வாழ்வு
கனவுகள் இல்லாத உலகம்
இப்படி எண்ணி
கல்லறைக்குள் போவதற்கா
கண்ணயர்ந்து விட்டாய்..?
நட்பை வளர்த்தது
சுலபமாயிருந்தது..
அதைப் பாதுகாத்ததும்
சுலபமாயிருந்தது...
சூப்பிக் கொண்டிருந்த
குச்சி மிட்டாய்
தரையில்
தவறி விழுந்த கதையில்
குழந்தை மனம்
என்ன பாடு பட்டிருக்கும்..?
அப்படித்தான்
இன்று என் மனமும்..!
இந்த ஊரில்
இந்தத் தெருவில்
இந்த வீட்டில்
நேற்று நீ இருந்தாய்...
இன்று நீ இல்லை...
ஆனால்
நீ படுத்த கட்டில்
நீ படித்த புத்தகம்
நீ உபயோகித்த சுத்தியல்
நீ அணிந்த ஆடைகள்
நீ சுழலவிட்ட மின்விசிறி
நீ வைத்த தென்னைமரம்
நீ ரசித்த நிலா
இன்னும் பல...
இன்றும் இருக்கின்றன...
காலையில் கதவைத் தட்டும்
தென்றல் காற்று
இன்றும் அதன் பணி செய்கிறது
ஆனால்
கதவைத் திறந்து
சுகம் அனுபவிக்க
அங்கு நீ தான் இல்லை..!
ஏன்
கானகத்தில்
சில மரங்கள் மட்டும்
இலைகள் உதிர்த்து
கிளைகள் காய்ந்து
சுவாசிக்காமல் நிற்கின்றன..?
கொடுத்த மனுவுக்கு
இன்றுவரை இறைவன்
பதில் தரவில்லை..!
காற்றோ, மழையோ
கடுங்குளிரோ, வெயிலோ
பனியோ, புழுக்கமோ
பருவங்கள் எதுவானாலும்
உன் நினைவுகள் என்றும்
என் ஆழ் நெஞ்சில்..!
என்னிடத்தில்
எதையும் நீ கேட்கவில்லை...
உனக்கென்று
எதுவும் நான் கொடுக்கவும் இல்லை...
ஆனால்
நட்பை மட்டும்
நம் இதயங்களில்
இடம் மாற்றிக் கொண்டோம்..!
நாம் பேச நினைத்த வார்த்தைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
என் நெஞ்சுக் குழிக்குள்ளும்
உன் கல்லறைக் குழிக்குள்ளும்..!
காலையில்
கண் விழித்தெழும் போது
என் தலையணையில் கிடக்கிறது
உன்னோடு பரிமாற முடியாத
கனவுகள்..!
இரயில் நிலையத்தில்
இருவரும் அமர்ந்து
மணிக்கணக்கில் பேசிய
தத்துவங்கள் எல்லாம் பயனில்லாமல்
பஞ்சாய் காற்றில்
பறந்து கொண்டிருக்கின்றன..!
வானம் இருட்டும்
வைகரைப் பொழுதில்
வஉசி மைதானத்துப் படிகளில்
வாயில் புகையுடன்
பேசி முடிக்காத
தொடர் கதைகள்
வந்து போகின்றன
இன்னும் என் கனவுகளில்..!
வாய்க்கால் நடுவிலிருந்த
செங்கல் கிணறும்
வயலில் இருந்த
பொட்லர் கிணறும்
மண்ணுக்குள் மறைந்து விட்டன
உன்னைப் போல..!
நம் தெருவில் நடக்கும்
நல்லது கெட்டதை
நட்பாய்ச் சொல்ல
இனி யாருண்டு எனக்கு..?
உயிரோடு இருந்தபோது
எட்டி நின்ற உறவுகள்
இன்று
ஓட்டி நின்று உறவாடுகிறார்கள்..!
பசித்த போது
ஒருபிடி சோறு தராதவர்கள்
இன்று
பால் ஊற்றுகிறார்கள்
உன் வாயில்..!
வாய்க்கு வாய்
வசைபாடியவர்கள்
இன்று
வாய்கிழிய
வாழ்த்திப் பேசுகிறார்கள்
உன்னைப்பற்றி..!
விந்தையான உலகில்
விவரமான மனிதர்கள்..!
யாருக்குத் தெரியும்?
நான்குபேர் உன்னை
சுமந்து சென்றபோது
புதைந்து கிடந்திருக்கலாம்
உன் நெஞ்சுக் குழிக்குள்
நீ என்னிடம்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதோ ஒன்று..!
இறுதிப் பயணத்தில்
உன்மேல் நான் போட்ட
மூன்று கை மண்ணில்
தொக்கி நிற்கின்றன
நம் நட்புக்கான
அன்னியோனியங்கள்..!
இன்று நீ..! நாளை நான்..!
இந்தத் தத்துவம்
இதயத்தில்
இறுக்கமாய்
இடம் பிடிக்கிறது..!
-பாளை.சுசி.
|
|