கவிதை:
568
அன்றும்... இன்றும்...!

முகில் மீது மிதப்பது போல்
உன் பேச்சினில்
நான் மயங்கினேன்...
எவர் தடுத்தாலும்
நான் நிழலாய்
உன்னைக் காப்பேனென்று
என் கன்னம் தொட்டுக் கொஞ்சினாய்...
இன்றோ
அடியாட்களை ஏவி
என் தொடர்பை அறுத்திடத் துடிக்கிறாய்...
முள்ளொன்று
என் பாதத்தைத் தைத்தப் போது
பதறித் துடித்துக் கலங்கினாய்...
இன்றோ
என் அங்கம் பதறப் பதற
காலால் எட்டி மிதிக்கிறாய்...
நான் மறுத்து ஒதுங்கிய போதும்
அன்பளிப்பு பல செய்து
என்னை
உன்னில் விழச் செய்தாய்...
இன்றோ
உன்னால் என் உதிரத்தில
ஊறிய உயிரை
கொன்று விடக் கூவுகிறாய்...
ஏழை எனும் பேதம்
என்னில் இல்லை
கண்னே நீதான் எனது செல்வம்
என்றெனது மடியில் துயின்றவனே
இன்றோ
சாதி எனும் சக்கரத்தை
என் உயிரின் மீது வீசுகிறாய்...
மறந்து விடென்றுச் சொல்லி
என் மனதில்
இடியைப் போடுகிறாய்...
உன்னை மறக்க மறுத்த
என்னை
மாய்க்கவும் துணிந்தாய்...
சாதி என்றும் பணம் என்றும்
முன்னர் நீ சிந்திக்க மறந்தாய்...
பழைய வேதத்தை நீ
இப்போது சிந்திக்கிறாய்...
என் காதலனே
எனக்கு நீ வேண்டும்...
உன் நிழலை
நான் சுவாசிக்க
எனக்குக் கொஞ்சமாவது உரிமை
கொடு...
உன் பார்வை
என் மீது விழுந்தால்
என் இதயம் இளைப்பாறும் காதலா...
என்னில் யாவும் துறந்து
உன் வாசல் வருகிறேன்
ஒரு வேலைக்காரியாய்...
உன் வாசல் கதவு திறப்பாயா....?
- ஆர்.கனகராஜ்.
|