........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 580

கவிதை தேடி...?

இரவின் சுவர்களில்
வண்ணமின்றி -
எழுதப் படுகின்றன நம் கனவுகள்..
எவனோ ஒருவன்
வெறும் -
இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை..

-----------

ஆம்; நிறையப் பேர்
அப்படித் தான் இருக்கிறார்கள்,
நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ
அப்படி;
காரணம் நாமும் – அப்படியென்பதால்!!

-----------

நட்பினால் -
பெரிய தேச மாற்றம் எல்லாம் வேண்டாம்;
நம் அருகாமை நண்பனை
முதலில் காப்போம்;
அவனிலிருந்து துவங்கும் – நம்
தேசமாற்றம்!!

-----------

விடியலின் அலாதியில்
ஈரம் சேர்த்த கொடூரங்களால்
சமூகத்தை குற்றவாலியெனக் கூறி
தேடி அலைகிறது மனசு..
கள்ளச் சமூகம்;
மனசிடம் பிடிபடுவதே இல்லை!!

-----------

காலையில்
ஒரு பூ பூத்த மலர்ச்சியில்
கண்விழித்தாலும் -
கண்ணீராய் சொட்டுகிறது
வாழ்வின் அலங்கோலங்கள்..

-----------

நட்பினால் ஒரு
ஒற்றுமை சமுதாயத்தை பிறப்பிப்போம்.
ஒற்றுமை நமக்கு
விடுதலையின் தடத்தை
நிதர்சனமித்துக் காண்பிக்கும்..

-----------

மனிதரில்
நூறு வகை இருக்கட்டும்;
தமிழரில் -
ஒருவகை போதும்;
ஒற்றுமை சுவற்றின்
மேலே நிற்கும் ஒற்றை தமிழன்
அந்த -
நூறு வகை மனிதர்களுக்குச் சமம்!!

-----------

என்னதான் அவசரமென்று ஓடினாலும்
மனசு மட்டும் -
தனக்கான பல இதயங்களை
தூக்கிக் கொண்டு தான் ஓடுகிறது..

-----------

எதையோ -
எடுத்து வைத்துக் கொண்டு
ஏதோ ஒன்றினை தருவதில்;
பெறுவதில்;
எப்படியோ - நிறைந்தே விடுகிறோம்..

-----------

நம் வீட்டைச் சுற்றித் தான்
கிடக்கின்றன; கவிதைகள்;
எழுதுகோல்தான் பாவம்
எங்கெங்கோ அலைகிறது மனசுபோல
கவிதை தேடி!!

-வித்யாசாகர்

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு