கவிதை:
586
புது உலகு தா...!

புத்தாண்டே வா!
புது உலகு தா!
விலங்குகளிலிருந்து மாறியவன்
மனிதன்
அறிவியல் கூறுகிறது!
மனிதப் பண்பை மாய்த்து
மீண்டும் விலங்காய் மாறுகிறானே
இது என்ன நியதி?
புத்தாண்டுத் தாயே
என் புலம்பலைச் சற்றே கேள்!
அவனியில் அறம் அழிகிறது!
அமைதி குலைகிறது
உதவிடும் போக்கும்
ஒருவரை ஒருவார் தாங்கிடும் பாங்கும்
கோடை வெயிலில் குறைந்து வற்றிடும்
ஆற்றின் ஊற்றுப் போல்
குறைந்து மறைகிறதே!
உயிரின் விலையோ மலிகிறதே!
மனித நேயமோ மாய்கிறதே!
வன்முறைப் பேயின்
வன்கொடுமை பெருகுகிறதே!
தன் இனம் மட்டும்
தரணியில் வாழ்ந்தால் போதும்
என்ற புன்மைக் குணம் ஓங்குகிறதே!
இது என்ன நியதி?
சாதியைக் காப்போம் எனச் சபதமிடுவோனும்
மதத்தைக் காப்போம் என
முழங்குவோனும்
தீவிர வாதத்
தீப்பந்ததத்தை அல்லவா
பூமிக் கூரையின் மீது
எறிகின்றான்! எரிக்கின்றான்!
எத்தனைக் கட்டடங்கள் இடிந்தன!
எத்தனை உயிர்கள் மடிந்தன!
இதுவா மதம்?
இதுவா மனிதம்?
மனிதத்தை அழித்திடும்
மனிதனுக்கு உதவா
மதம் வேண்டாம்!
வேண்டவே வேண்டாம்!
ஆண்டொன்று போனது
அகவையொன்று கழிந்தது!
கடந்ததில் நடந்ததைக்
கணக்குப் பார்ப்போம்!
நல்லவை எண்ணி
நன்றாய்க் களிப்போம்
தீயவை தள்ளித் தூயவர் ஆவோம்!
வருகின்ற புத்தாண்டை
வரவேற்று மகிழ்வோம்!
இன்பம் தருகின்ற ஆண்டாய்
ஆக்குவோம் அதனை!
திண்ணிய பூமியைத் திணரவைக்கும்
வன்முறைப் பேயை
வதைத்தே அழித்திடுவோம்
மனிதத்தை அழிப்பதை
மண்புகச் செய்வோம்!
மனித நேயத்தை
மாநிலத்தில் நாட்டுவோம்!
மனிதர்களாய் வாழ்வோம்!
மனிதர்களை வணங்குவோம்!
-முனைவர்.
மா.தியாகராஜன், சிங்கப்பூர்.
|